மும்பையில் இருந்து வெளிவரும் வணக்கம் மும்பை வார இதழில் நான் எழுதும் நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் -2 பகுதி -82 ல் சோ. தர்மன் அவர்களின் வெளவால் தேசத்தில் தாமிரபரணி கரை பற்றி எழுதியுள்ளேன். – எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
பிரபல எழுத்தாளர் சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தன்னுடைய வெளவால் தேசம் நாவலில் தாமிரபரணி கரை வரலாற்றை நிறைய இடத்திடில் பேசியுள்£ர்.
அதில் நான் பிறந்த ஊரான முத்தாலங்குறிச்சி கந்தசாமி புலவர் வரலாற்றை மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். அதைப்பற்றித்தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
மறுநாள் வெள்ளிக்கிழமை. முழு பௌர்ணமி. பட்டர் அதிகாலையிலேயே கோயில் வாசலில் காத்திருந்தார். ஆரவாரத் துடன் கம்பீரமாகப் பாடிக்கொண்டு வந்த புலவரை பட்டர் அடையாளம் கண்டுகொண்டார். இரு கைகள் பற்றி முருகப் பெருமானின் முன்னால் அழைத்துச் சென்றார். முருகன் சொன்ன படியே ஒரு பூ எடுத்து கண்ணில் ஒற்ற ஒரு கண்ணுக்குப் பார்வை வந்துவிட்டது. புலவருக்கு சந்தோஷம். ‘பட்டரே இன்னொரு கண் பார்வை வரவில்லையே.’
‘புலவரே இன்னொரு கண் பார்வை வேண்டுமானால் நீர் பாஞ்சாலங்குறிச்சிக்குச் செல்ல வேண்டும். அங்கே வீரபாண்டிய கட்டபொம்மன் இன்னொரு கண்ணைத் திறந்து பார்வை கொடுப்பார். சற்றும் தாமதிக்காமல், இன்றே பாஞ்சாலங்குறிச்சி புறப்படுக’ என்றார் பட்டர்.
ஒரு கண் பார்வையுடன் பாஞ்சாலங்குறிச்சி வந்தடைந்த கந்தசாமிப் புலவர் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அரண்மனை சென்றார். இயல்பாக மக்களுடன் மக்களாகப் பேசிக் கொண்டிருந்த கட்டபொம்மனைச் சந்திப்பது ஒன்றும் சிரமமில்லை. புலவரை வரவேற்ற கட்ட பொம்மனிடம் நடந்தவற்றை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிக் கடைசியில் இன்னொரு கண்ணை உங்களிடம் வாங்கிக்கிறச் சொல்லி முருகன் அனுப்பி இருக்கிறார் என்ற விபரத்தையும் சொன்னார். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கட்டபொம்மன் ஆச்சரியமாய் பார்த்தபடி இருந்தான்.
‘எனக்குத் தெரியும் உன்னால் முடியாதென்று, நீயோ சாதாரண முருக பக்தன், ஏழைகளின் வரிப்பணத்தில் வயிறு வளர்ப்பவன் உன்னால் எப்பிடி கண் கொடுக்க முடியும்.’
கட்டபொம்மன் இவ்வார்த் தைகளைக் கேட்டதும் உணர்ச்சிப் பிழம்பானான். உடனே ஜக்கம்மா கோயிலில் பூஜைக்கு உத்திர விட்டான். ஒரு கையில் புலவரைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் வாளுடன் கோயிலுக்குள் நுழைந்தான். கையில் வாளுடன் கோயிலுக்குள் நுழைந்த கட்டபொம்மனைப் பார்த்தார் புலவர்.
இதென்ன அடக்கமில்லாமல் கோயிலுக்குள் வாளுடன் வருகிறாய். உன்னால் முடியாதென்று கூறிவிடு. மீண்டும் நான் திருச்செந்தூர் சென்று முருகனிடம் வேண்டி இன்னொரு கண்ணைப் பெற்றுக்கொள்கிறேன்’
எதையுமே சட்டை செய்யாமல் புலவரை இழுத்துக்கொண்டு வாளுடன் கோயிலுக்குள் சென்ற கட்டபொம்மன் ஜக்கம்மா தேவியின் சிரசில் கிடந்த மாலையிலிருந்து ஒரு பூவை எடுத்து புலவரின் கண்ணில் ஒற்ற, புலவருக்குப் பார்வை வந்தது. முருகப் பெருமானின் கருணையை எண்ணி வியப்புடன் நின்றான் கட்டபொம்மன். புலவரோ எவ்வித சலனமுமின்றி, இருந்தார்.
‘கட்டபொம்மா, எனக்கு இரண்டாவது கண்ணில் பார்வை வந்து விட்டது. ஆனால் அதற்காக நான் சந்தோஷப்படவில்லை, மாறாக வருத்தப்படுகிறேன், காரணம் நீ ஒரு ஆணவக்காரன். கோயிலுக்குள் உருவிய வாளுடன் நீ வந்ததை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அந்த வாளை என்னிடம் கொடு. நீ கொடுத்த அந்தக் கண்ணை, இப்போதே குத்தி எடுத்து தூர எறிகிறேன்.
கட்டபொம்மனின் கையில் இருந்த வாளைப் பிடுங்க முயன்ற புலவரை சாந்தப்படுத்தி, ‘புலவரே நான் ஆணவத்துடன் வாளை உருவவில்லை. முருகப் பெருமானின் கூற்றுப்படி உமக்கு மறு கண் கிடைக்காமல் போனால், இதே வாளால் குத்திக்கொண்டு ஜக்கம்மாவின் காலடியில் உயிர் துறக்கவே நான் வாளுடன் வந்தேன். மத்தப்படி ஆணவம் எனக்கில்லை புலவரே, அடியேன் ஒரு சிறிய முருக பக்தன்.’
கட்டபொம்மனின் கூற்றைக் கேட்ட புலவர் ஆடிப் போய் விட்டார்.
கட்டபொம்மா, முருகனின் கூற்று பொய்யாகிப் போய் விட்டால் அதற்காக உன் உயிரையே துறப்பாயா, நீ தானப்பா உண்மையான முருக பக்தன். நான்தான் பெரிய பக்தன் என்று இறுமாப்புடன் இருந்தேன். அந்த அகந்தையில் உன்னை ஏதேதோ பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு கட்டபொம்மா, நாங்கள் எல்லாம் முருகனிடமிருந்து வாங்க மட்டுமே தெரிந்தவர்கள். உன் போன்ற பக்தர்கள்தான் முருகனுக்கும் கொடுக்க பிறந்தவர்கள்’ என்று சொல்லிக்கொண்டே புலவர் விருட்டென்று எழுந்து கட்டபொம்மனிடமிருந்த வாளைப் பிடுங்க முற்பட்டார். கட்டபொம்மா அந்த வாளைக் கொடு. உணர்ச்சியில் நான்
உன்னை ஏதேதோ பேசி இழிவுபடுத்திவிட்டேன். அந்த வாளால்
என் நாக்கை அறுத்து வீசுகிறேன் கொண்டா வாளை.’
வாளைப் பிடுங்க முயன்றார் புலவர். கட்டபொம்மன் கையிலிருந்து வாளைப் பிடுங்க முயன்று தோற்றார் புலவர். புலவரை சாந்தப்படுத்திக்கொண்டிருக்கும் போதே முருகனின் அசரீரி சத்தமாய் ஒலிக்க இருவரும் காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டார்கள்.
‘கவிராயரே… நிறுத்தும். இது என்னுடைய திருவிளையாடல், நீர் மட்டுமே பெரிய பக்தன் என்ற உம்முடைய இறுமாப்பை, அடக்கிக் கட்டபொம்மனைப் போல் கோயில்பட்டரைப் போல் இன்னும் ஆயிரமாயிரம் பக்தர்கள் உம்மைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்று உணர்த்தவே, இந்த நாடகம்’ என்று சொல்லி அசரீரி மறைந்தது.
‘பார்த்தீரா புலவரே உமக்குக் கண் தர நினைத்தால் இரண்டு கண்களையும் உம்முடைய ஊரிலேயே வைத்துத் தர முருகனால் முடியாதா என்ன, கோயிலில் வைத்து ஒரு கண்ணையும் என்னால் ஒரு கண்ணையும் தரவைத்து உம்முடைய அகந்தையை அகற்றியதோடு என்னுடைய பக்தியையும் சோதித்துவிட்டாரே எம் பெருமான்.
அதிலிருந்து ஆணவம் நீங்கிய கந்தசாமிப் புலவர் ஒவ்வொரு ஊர் ஊராகச் சென்று கட்டபொம்மனின் புகழைப் பாடிக் கொண்டிருக்கிறார். அப்படிப் பாடிக்கொண்டிருந்தபோதுதான் அரசாங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேஜர் வேல்ஸ் துரையின் முன் நிறுத்தப்பட்டார். தன்னுடைய கதை எல்லாவற்றையும் துபாஷி கிட்டுப்பிள்ளையிடம் சொல்லி முடித்தார் புலவர். கிட்டுப்பிள்ளைக்குஆச்சரியம் தாங்கவில்லை. அப்படியே கந்தசாமிப் புலவரின்
கதையை மேஜர் வேல்ஸ்துரையிடம் சொல்ல துரை கடுப்பாகிவிட்டார்.
(நதி வற்றாமல் ஓடும்)


