ஏரல் அருகே மங்கலக்குறிச்சி ஸ்ரீ மஹாதேவ கைலாசநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அமைந்துள்ள மங்கலக்குறிச்சி கிராமத்தில், மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆவுடைநாயகி அம்பிகா சமேத ஸ்ரீ மஹாதேவ கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று (பிப்ரவரி 9) விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் தொடங்கின. தொடர்ந்து சுந்தர விநாயகர் திருக்கோவிலில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. சனிக்கிழமை அன்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், யந்திர ஸ்தாபனமும் நடைபெற்றன. நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து பூர்ணாஹூதி மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது.
இன்று காலை 07:00 மணியளவில் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தன. பின்னர், வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாகேஸ்வர பூஜையில், பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக இன்று மாலை 06:00 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவமும், அதனைத் தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
இந்த விழாவிற்கான சர்வசாதகப் பணிகளை கருங்குளம் சிவஸ்ரீ மீ. குணசேகர பட்டர் மற்றும் சிவஸ்ரீ ம. மீனாட்சி சுந்தர பட்டர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் தக்கார், மங்கலக்குறிச்சி அப்பர் சுவாமிகள் நற்பணி மன்றத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


