தாமிரபரணியை பற்றி பல்வேறு கட்டுரைகளை எழுதி வருபவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. இவர் கடந்த 25 வருட காலமாக தாமிரபரணி ஆற்றங்கரை வழியாக நடந்து வந்து ஒவ்வொரு வரலாறு மற்றும் இந்து கிறிஸ்தவ இஸ்லாம் வரலாறு, சிறு தெய்வ வழிபாடு, பேசப்படும் செவிவழிகதை, கல்வெட்டுகளை சேகரித்து எழுதிவருகிறார். முதல் கட்டமாக இவர் பொதிகை மலையில் இருந்து மேலச்செவல் வரை உள்ள தாமிரபரணி நதிக்கரையோரத்து கிராமங்களில் வரலாற்றை தொகுத்து தலைத்தாமிரபரணி என்னும் 1000 பக்க நூலை வெளியிட்டுள்ளார். தற்போது இடைத்தாமிரபரணி நூலுக்கான பணிக்கான களப்பணியை செய்து வருகிறார். கடந்த மாதம் தருவை பச்சையாற்றில் உள்ள ஐந்துகண் தடுப்பணையில் கல்வெட்டு ஒன்றை கண்டு பிடித்து மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் துறை தலைவர் முனைவர் சுதாகரிடம் ஒப்படைத்தார். அந்த கல்வெட்டை தொல்லியல் மாணவர்கள் ஆய்வு செய்து அந்த கல்வெட்டு மருதநாயகம் காலத்து கல்வெட்டு எனவும் அவர் காலத்தில் இந்து கோயில் சுற்றுப்புறச்சுவரை இடித்து இந்த கால்வாய் கட்டுவிக்கப்பட்டது எனவும் கூறினார்கள். இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழத்தில் ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
இதே போல் தாமிபரணியில் பச்சையாறு சேருமிடத்தினை ஆய்வு செய்து எழுதுவதற்காக முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி ஆற்றங்கரைக்கு கடந்த 6 ந்தேதி சென்றார். அவருடன் தோரணமலை முருகன் கோயில் பரம்பரை தர்மகர்த்தா செண்பகராமன், மீனாட்சி புரம் நூலகர் அகிலன், எக் பவுண்டேசன் இயக்குனர் நிவேக் உள்பட பலர் வந்தனர். தாமிரபரணி ஆற்றுக்குள் செல்ல சாலையில்லாத காரணத்தினால் சுமார் 3 கிலோ மீட்டர் வயல்வெளி வழியாக நடந்து தாமிரபரணி ஆற்றுக்குள் பச்சையாறு சேரும் இடத்துக்கு சென்றனர். அவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளூர் விவசாயி தருவை பெருமாள் உடன் வந்தார். அங்கே மண்டபத்துடன் கூடிய ஒரு படித்துறையை கண்டார். இந்த படித்துறை ஆற்று வெள்ளத்தில் ஆற்றுமணலில் புதைந்து காணப்பட்டது. மேலும் உள்ளே உள்ள இடுக்கு வழியாக நுழைந்து சென்று பார்த்த போது அங்கு பிள்ளையார் சிலையும், மண்டபத்தின் மேல் பகுதியில் இரண்டு மீன் சின்னமும், நடுவில் ஒரு கல்வெட்டு ஒன்றும் காணப்பட்டது.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, பச்சையாறு தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இந்த மண்டபம் பற்றி நான் கேள்வி பட்டிருந்தேன். பல முறை முயற்சி செய்தும் இங்கு வர இயலவில்லை. காரணம் தருவை மெயின்ரோட்டில் இருந்து இந்த இடத்துக்கு குறைந்தது 7 கிலோ மீட்டர் இருக்கும். தற்போது காரை நாங்கள் பச்சையாறு ஆலங்கால் அருகில் நிறுத்தி விட்டு சுமார் 3 கிலோ மீட்டர் வயல்வெளி வழியே நடந்தே சென்றோம். பச்சையாறு தாமிரபரணி அருகே சேரும் இடத்தில் கோடையிலும் வற்றாத நீர் சுரக்கும் ஊற்று உள்ள இடத்தில் அபூர்வ மண்டபம் ஒன்று உள்ளதை கண்டோம். இந்த மண்டபம் கடந்த டிசம்பர் மாதம் வந்த வெள்ளத்தில் மணல் மூடி காணப்பட்டது. இந்த மண்டபத்தில் 7 தூண்கள் உள்ளது. அறுங்கோணம் வடிவில் உள்ளது. இந்த மண்டபத்தின் முன்பு கிழக்கு நோக்கி படித்துறை காணப்படுகிறது. இந்த மண்டபம் கிழக்கு நோக்கிதான் உள்ளது. உள்ளே விநாயகர் சிலை உள்ளது. மண்டபத்தின் மேலே இரண்டு மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. நடுவில் கல்வெட்டு உள்ளது.
மண்டபத்தின் உள்ளே உள்ள ஆற்று மணலை துப்புறவு செய்து மேலும் மண்டபத்தினை ஆய்வு செய்தால் கூடுதலாக கல்வெட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே உழவாரபணியினர் இந்த மண்டபத்தினை சுத்தம் செய்ய வேண்டும். தற்போது கிடைத்த கல்வெட்டை ஆய்வு செய்ய தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அதிகாரி ஆசைத்தம்பியிடம் அனுப்பி வைத்தோம். அவர் கீழ்கண்டவாறு தகவல் தெரிவித்துள்ளார்.
“1600 வைகாசி மாதம் 3 நாள் கோட்டை சூரப்ப அய்யன் மகன் வெங்டேச அய்யன் அவர்களின் தர்மப் பத்தினிக்காக செய்துவித்த சங்கையர் மண்டம் என எழுதப்பட்டுள்ளது. அதில் உள்ள முதல் எழுத்து சற்று மறைவாக தெரிகிறது. அதை வைத்து படிக்கும் போது சங்கமம் என தெரிகிறது. இங்கு இரண்டு மீன் சின்னம் உள்ளது. இந்த மீன் சின்னம் பொதுவானதுதான் . இது பாண்டியர்கள் ஆட்சி செய்த இடம் தான். ஆனால் இந்த மீன் சின்னம் வளமைக்காக கருதப்படும் முறையில் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் பிள்ளையாரை வைப்பது மரபு. அதன்படித்தான் இங்கு பிள்ளையார் உள்ளார். என்று அவர் கூறினார்.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதி மன்ற நீதி பதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி ஆகியோர் வழக்கு 18402/2018 படி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மண்டபங்களை சீரமைக்க இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அதற்கான பணி தற்போது விரைவாக நடந்து வருகிறது. தாமிரபரணி முழுவதும் உள்ள மண்டபங்கள் கணக்கெடுக்கப்பட்டு சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் மூடிக்கிடக்கும் பச்சையாறு சங்கம தீர்த்த மண்டபத்தினை சூழ்ந்து உள்ள மண்டபத்தில் உள்ள மண்ணை அள்ளி, படித்துறையையும் பாராமரிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குள்ள விவசாயி பெருமாள் என்பவர் கூறும் போது இந்த மண்டபத்திற்கு முன்பு ஒரு நீர் ஊற்று உள்ளது. இந்த நீர் ஊற்று எங்கிருந்து வருகிறது என்றே தெரியாது. ஆனால் அங்கு கோடையாக இருந்தாலும் மழையாக இருந்தாலும் சீராக ஒரே மாதிரி தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் அந்த தண்ணீர் தாமிரபரணி தண்ணீர் போல சுவையாக இருக்காது. கிணற்று தண்ணீர்போல இருக்கும். அந்த ஊற்று தண்ணீர் சரியாக இந்த மண்டபம் முன்புறம் தாமிரபரணி ஆற்றில் சேரும். ஆடி அமாவாசை , தை அமாவாசைக்கு இங்கு அர்ச்சகர்கள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க வருவார்கள். இந்த வருடம் மண்டபம் மணல் மூடிய காரணத்தினால் வரவில்லை என்று கூறினார்.
கோடையிலும் வற்றாமல் ஓடும் நீர் ஊற்று தாமிரபரணி ஆற்றங்கரையில் பல நூறு இடங்களில் உண்டு. இதனால்தான் இந்த நதி வற்றாத ஜீவ நதியாக பெயர் பெற்று வருகிறது. தற்போது மணல் அள்ளிய காரணத்தினால் பல்வேறு நீர் ஊற்றுகள் அழிக்கப்பட்டு விட்டது. தற்போது இதே போல் ஒரு சில ஊற்றுகளே தாமிபரணி நதிக்கரையில் உள்ளது. அதையாவது காப்பாற்ற வேண்டும் . இதே போல் அழியும் நிலையில் உள்ள மண்டபங்களை, நீர் ஊற்றுகளை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.