தூத்துக்குடி மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் ஆட்சியர் கோ.லட்சுமிபதி, கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடும் வகையிலும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் வானரமுட்டி ஊராட்சிக்குட்பட்ட வானரமுட்டி சமுதாயக் கூடத்தில் இன்று(08.08.2024) நடைபெற்ற ஊரகப்பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, அரசு துறைகள் மூலமாக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார்கள்.
இம்முகாமில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்ததாவது: மக்களுடன் முதல்வர் முகாமினை அரசின் பல்வேறு துறைகளின் சேவைகள் நேரடியாக பொதுமக்களை அவர்களின் பகுதியிலேயே சந்தித்து மனுக்களைப் பெற்று சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இத்திட்டம் ஏற்கனவே நகர்ப்புறங்களில் சிறப்பாக நடைபெற்றது. தற்போது ஊரகப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 403 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து 72 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை 59 முகாம்கள் நடத்தப்பட்டு, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு மக்களுடன் முதல்வர் மற்றும் முதல்வரின் முகவரி ஆகிய இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட மனுக்கள்மீது அந்தந்த துறைகள் மூலமாக பரிசீலனை செய்து 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசு அலுவலர்களும் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கனிவுடன் பரிசீலனை செய்து பல்வேறு துறையின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இம்முகாமில் 15 அரசு துறைகளின் வாயிலாக வழங்கக்கூடிய 42 வகையான சேவைகளுக்கு மனுக்கள் பெறப்படுகிறது.
இம்முகாமில் பெறப்படும் மனுக்கள்மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அளவில் கண்காணிக்கப்படுகிறது. எனவே இந்த முகாமினை நீங்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்பகுதியில் உள்ள மற்ற மக்களுக்கும் எடுத்துக்கூற வேண்டும். இம்முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களின்மீதும் உரிய தீர்வு காண்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்தார்.
முன்னதாக, ஊரகப்பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். பின்னர், இன்று நடைபெற்ற ஊரகப்பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் அரசு துறைகள் மூலமாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 13 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, வழங்கினார்கள்.
இம்முகாமில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலெட்சுமி , கயத்தாறு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா , மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா , வட்டாட்சியர்கள் சரவணப்பெருமாள், நாகராஜன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


