தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பண்ணை பள்ளி திட்டத்தினை ரிலையன்ஸ் அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. நெல், உளுந்து மற்றும் மக்காசோளம் பயிரிடப்படும் வட்டாரங்களில் விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் நிலத்தை பண்படுத்துதல், உரமேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நோய் மேலாண்மை குறித்து பல்வேறு தொழில்நுட்பங்கள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மண் பரிசோதனை செய்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருந்தது. விவசாயிகளின் தேவையின் அடிப்படையில் மண் பரிசோதனை செய்ய மண் மாதிரி சேகரிக்கும் நிகழ்ச்சி திருவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் ஏரல் தாலூகாவிலுள்ள நெல் பயிரிடும் கிராமங்களில் நடைபெற்றது. அதனடிப்படையில் 151 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கோவில்பட்டியில் உள்ள மண் பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் லலிதா பரணி, துணை வேளாண் அலுவலர் பகவதி , தொழில்நுட்ப வல்லுநர்கள் மூர்த்தி மற்றும் செண்பகவல்லி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை பணியாளர்கள் மற்றும் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


