சென்னையில் செம்மஞ்சேரியில் நடந்த 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜன் கூறும்போது பொருநை ஆற்றில் சிவகளையில் கிடைத்த முதுமக்கள் தாழியை தொல்லியல் ஆய்வு செய்த போது சுமார் 5 ஆயிரம் வருடம் பழமையான தமிழ் மொழி என கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்தார்.
தற்போது 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 7 முதல் 9ம் தேதி வரை சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆறிவியல் நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் இருந்து மட்டுமின்றி ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் “சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சியும் தமிழர்ளின் கலாசாரத்தில் இதன் தாக்கமும்” என்ற தலைப்பில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆலோசகர் முனைவர் ராஜன், பேசினார்.
அவர் பேசும்போது சிவகளையில் கண்டெத்த முதுமக்கள் தாழியில் உள்ள உமியின் மூலமாக சுமார் 5 ஆயிரம் ஆண்டு பழமையானது என கூறினார். இதனால் சிந்துசமவெளிக்கு இணையாக தாமிரபரணி கரை நாகரீகம் பேசப்படும் என கூறினார்.

இந்த பொருநை நதிக்கரையில் பெருமையை சிறப்படைய செய்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா பீட்டா ஆய்வகத்தில் சிவகளையில் கிடைத்த உமியை கொண்டு ஆய்வு செய்த போது 3150 வருடம் பழமையானது என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த மாதம் மத்திய பிரதேசம் லக்னோ ஆய்வாளர் மெர்த்தகாய் தமிழக தொல்லியல் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களிடம் அறிக்கை ஒன்றை ஒப்படைத்தார். இந்த நிலையில் தமிழக தொல்லியல் ஆலோசகர் முனைவர் இராஜன் பேசியது தொல்லியல் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக தொல்லியல் இயக்குனர் முனைவர் சுதாகர் கூறும் போது. பொருநைகரை நாகரீகத்தின் சிறப்பு நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சி பொருநை நாகரிகம் காலம் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையானது எனக் கண்டறிந்துள்ளது.
சிந்து சமவெளி நாகரிக மக்கள் இரும்பு பொருட்கள் பற்றிய நுட்பங்களை அறியவில்லை. ஆனால் பொருநை நாகரிக மக்கள் 4500 வருடத்திற்கு முன்னரே இருப்பில் ஆயுதங்கள் செய்து சிறப்பாக வாழ்ந்துள்ளனர். எனவே பொருநை கரை நாகரீகத்தினை சிந்து சமவெளிக்கு முந்தையது என கூட கூறவாய்ப்புள்ளது.
இரு நாகரிக மக்களுக்கும் ஒரு தொடர்பு இருந்திருக்க வாய்ப்புள்ளது எனவும் நம்பப் படுகிறது. காரணம் சிந்துவெளி மக்கள் பேசியது தமிழ் என்பது உண்மை என நிரூபிக்கும் காலம் மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆய்வுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
பொருநை கரையில் வாழந்த தமிழர்கள் தொன்மையானவர்கள். அந்த காலத்திலேயே அறிவியலில் முன்னேறியவர்கள். கட்டாயம் இந்த கண்டுபிடிப்பு கொண்டாட வேண்டிய ஒன்றுதான். அத்துடன் சேர்த்து இந்த ஆராய்ச்சியாளர்களையும் கொண்டாட வேண்டும். பேராசிரியர் இராஜன்தான் இந்த கண்டுபிடிப்பின் காரணகர்த்தா. இவரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் காலத்தால் அழியாதது. இந்த வேளையில் தொல்லியல் ஆவல் காட்டும் தமிழக அரசையும் பாராட்ட வேண்டும்.
பொருநை ஆற்றங்கரையில் மட்டுமல்ல தமிழகமெங்கும் விழா எடுக்க வேண்டிய தருணம் இது. “உலகின் முத்தக்குடி தமிழ்குடி” என்ற வாக்கியத்திற்கான சான்றுகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த கால நிர்ணயம் தானிய வகையை வைத்துக் கண்டறியப் பட்டது. இந்த தானியம் இருந்த பானையில் இரும்பு பொருட்களும் உண்டு. அதாவது மயிலாடும் பாறையில் கண்டெடுத்த ஒரு வாள் 4200 வருடம் எனக் கண்டறிந்தனர். அது மாதிரி பொருநை கரையில் சிவகளையில் பானையில் கண்டெடுக்கப்பட்ட இரும்புப் பொருட்களும் 4500 ஆண்டுகள் பழமையானது என்றால் மிகையாகாது.
4500 வருடத்திற்கு முன் தமிழன் இரும்பு வாள் தயாரித்து பயன்படுத்தியுள்னான். அப்படி என்றால் “தமிழர்களுக்கு எவ்வளவு ஆண்டுகளுக்கு முன்பு இருப்பை பற்றி அறிவு இருந்திருக்கும்? “என்பது முக்கியமான கேள்வி. இதனைக் கண்டறிய முதலில் “இந்த இடத்தில்தான் இரும்பு உள்ளது?” எனத் தெரியவேண்டும். பின்னர் அங்குள்ள மண்ணை அள்ளி அதனில் இருந்து இரும்பை பிரித்தெடுக்க வேண்டும். அவ்வாறு பிரித்தெடுத்த இரும்பை வைத்து எந்த வகையான பொருட்களாக மற்றும் ஆயுதமாக வடித்தெடுக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். இந்த வேலைகள் அனைத்தையும் முடிக்கப் பல தொழில் நுட்பம் பரிணமிக்க வேண்டும். இந்த பரிணாமத்திற்கு சுமார் 500 வருடங்களுக்கும் மேலான காலம் எடுத்திருக்கும் என்பது என் கருத்து. அதனால் தமிழர்களுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பைப் பற்றிய அறிவு மற்றும் நுட்பம் இருந்துள்ளது எனக் கொள்ளலாம்.
எப்படி தற்போதுள்ள மொழிகளில் பழமையானது தமிழ் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோ? அதுமாதிரி இரும்பை முதன் முதலில் கண்டறிந்தது தமிழன் என்ற வாக்கியம் உலக நாடுகளின் பாடப்புத்தகங்களில் வருவது உறுதி. என்று அவர் கூறினார்.

இதுபற்றி எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும் போது, தமிழக முதல்வர் உலக வரலாற்றை பொருநை ஆற்றங்கரையில் இருந்து தான் எழுதவேண்டும் என்று அறிவித்திருந்தார். தொடர்ந்து ஆய்வாளர்கள் வெளியிட்டு வரும் கருத்தை கேட்கும் போது பெருமையாக உள்ளது. தமிழக அரசு நெல்லை ரெட்டியார்பட்டி மலையில் சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கையில் கிடைத்த பொருளை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். ஆதிச்சநல்லூர் ஒன்றிய அரசு உலகதரம் வாய்ந்த சைட் மியூசியம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சமயத்தில் முனவைர் ராஜன் அவர்களின் பேச்சு நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும் ஆதிச்சநல்லூர் சிவகளையின் முழு அறிக்கை வெளிவரும்போது உலகமே நம்மைகண்டு வியந்து போய் நிற்கும் காலம் வரும் என்று கூறினார்.
சிவகளை மாணிக்கம் இதுகுறித்து பேசும் போது, நான் சிவகளை தொல்லியல் தளத்தினை கண்டு பிடிக்கும்போது, இந்த அளவுக்கு பொருநை நாகரீகத்தினை தூக்கி பிடிக்கும் முக்கிய தளமாக இத் தளம் அமையும் என நினைக்கவில்லை. தற்போது இந்த தளத்தில் இருந்து ஒவ்வொரு தடவையும் ஆய்வு முடிவு வரும் போது பெருமைபட வைக்கிறது. பொருநை நாகரீகத்தினை தூக்கி பிடிக்கும் சிவகளை தொல்லியல் களத்தில் உலக தரம் வாய்ந்த சைட் மியூசியம் அமையும் போது மேலும் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறினார்.
பொருநை கரை நாகரீகம் தமிழர்களின் தொன்மையான வரலாற்றை சொல்லும் காலம் விரைவில் தெரியவரும் என தொல்லியல் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.


