அதர்வா ,7 மே 1989 என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு முதல் பாணா காத்தாடி (2010), முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012), பரதேசி (2013) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல முன்னாள் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2013 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதர்வா 7 மே 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கன்னட குடும்பத்தில் திரைப்பட நடிகர் முரளி மற்றும் சோபனா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் உள்ளார்கள். இவரின் தாத்தா எஸ். சித்தலிங்கையா என்பவர் முன்னாள் கன்னடத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்
2009 இல் பத்ரி வெங்கடேஷ் இயக்கிய பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த திரைப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மற்றும் இவரின் நடிப்பு பலரால் அவதானிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு காதல் பரபரப்பூட்டும் திரைப்படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா வில் திரையிடப்பட்டது.
2013 ஆம் ஆண்டு இவருக்கு மிகப்பெரிய படமாக பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் அமைந்தது. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது உட்பட பல விருதுகளை வென்றார். அதை தொடர்ந்து இரும்புக் குதிரை (2014), சண்டி வீரன் (2015), கணிதன் (2016), ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சண்டி வீரன் என்ற திரைப்படம் வசூல் ரீதியாக இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றது. 2018 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா உடன் இணைத்து இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.


