அண்மையில் சென்னை புத்தக கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் ஒன்று…’காலா பாணி’…டாக்டர்.மு.இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் வரலாற்று அடிப்படையில் எழுதப்பட்ட நாவலாகும்…536 பக்கம் கொண்ட இந்த வரலாற்று நாவல்…இந்தியாவில் முதன் முதலாக நாடு கடத்தப்பட்ட சிவகங்கை மன்னர்…வேங்கை பெரிய உடையணத் தேவர்…மற்றும் வெள்ளையர்களை எதிர்பதில் ஈடுபட்ட 72 போராட்டக்காரர்கள் பின்னாங்கிற்கு தூத்துக்குடியிலிருந்து நாடு கடத்துவது பற்றியது.
இந்திய விடுதலை போரில் ஈடுபட்ட சிவகங்கை ஆட்சியளர் வேங்கை பெரிய உடையண தேவர்…இவரது மந்திரி மற்றும் தளபதிகளாக திகழ்ந்தவர்கள் மருதுபாண்டியர்கள்…1801ஆம் ஆண்டில் மருது பாண்டியர்கள் மற்றும் சுமார் 500 பேரை தூக்கில்லிட்ட கிழக்கிந்திய கம்பனி அரசு…சிவகங்கை மன்னர் மற்றும் அவருடன் முக்கியத்துவம் மிக்க 72 பேரையும் 1802 ல் பின்னாங்குக்கு நாடு கடத்தியது…அன்றைய அரசியல் சூழல்…அல்லல் பட்ட பழைய ஆட்சியாளர்களின் குடும்பத்தாரின் துயரம்…தூத்துக்குடியிலிருந்து 65 நாள் சோகமான கப்பல் பயணம்…வழியில் நல்ல தண்ணீரின்றி தவித்து மரணித்த 3 பேர்…மனம் பிறழ்ந்தவர்கள் மற்றும் உடல் சுகவீனத்துடன் மண்ணில் காலடி வைக்க துடித்த அவர்கள் அனைவரும் பட்ட இன்னல்கள்…பின்னாங்கு சென்ற பின்… அனைவரிடமிருந்தும் தனிமைபடுத்த பட்டு…தனி அறையில் அல்லலுற்று நான்கு மாதங்களில் தன் 34 ஆம் வயதில் உயிர் நீத்த சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையண தேவரின் சோகமான இறுதி நாட்கள் விவரிக்கப்படடுள்ளது.
நாடு கடத்தப்பட்ட இந்த 73 மூவருடன் சின்ன மருதுவின் மகன் 12 வயது துரைசாமியும் அடங்குவான்… இந்த சிறுவனை நாடுகடத்தாமல் விட்டுவிடுமாறு உறவினர் பலரும் மன்றாடி கேட்டும் செவி சாய்க்காத கும்பனி அரசாட்சியின் கொடுமை வெளிப்படுகிறது…இந்த சிறுவன் சிவகங்கையிலிருந்து விளையாடுவதற்கு பையில் வைத்திருந்த கொடுக்காய் புளி விதைகள் நான்கை அவர்களை பினாங்கில் அடைத்து வைத்த பென்ங்கோலன் கோட்டையில் வேங்கை பெரிய உடையன தேவர் ஊன்றி வைக்க அவற்றில் மூன்று இன்று பெரிய கொடுக்காய் புளி மரமாக வளர்ந்து நின்று இந்த உண்மையினை உலகுக்கு அறிவிப்பதாக உள்ளது.
வரலாற்று ஆர்வம் மிக்க நூலாசிரியரின் பல்வேறு வரலாற்று நூல்களுள் தமிழ் நிலத்தில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த துயர் மிக்க வரலாற்று பதிவாக இந்த நூல் திகழ்கிறது… வாசிப்போர் அனைவரையும் துயரமிக்க அந்த நாட்களுக்கு இழுத்துச் செல்லும் வகையில் நூலாசிரியர் எழுதற்றால் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


