செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளி ஆண்டு விழா
செய்துங்கநல்லூர் ஜோஸ் பள்ளி தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு மாணவர்கள் முதன்முறையாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். இப்பள்ளியின் ஆரம்ப விழா முதலே நான் இதனுடன் பயணித்து வருகிறேன். இந்த பள்ளியின் அபரிமிதமான வளர்ச்சி என்னை பிரமிக்க வைக்கிறது. ஆரம்பகாலத்தில் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய ஓ.பி. முஸ்தபா அவர்களின் சம்மந்தி மீரான் மைதீன் அய்யா அவர்களின் உழைப்பை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். நாட்டார்குளத்தில் பள்ளி கட்டிடம் கட்டப்படும்போது, அவர் இரவு பகலாக அங்கேயே நின்று கட்டிடப் பணிகளைக் கவனித்ததும், பள்ளிக்கு உரிய அனுமதி பெற சென்னைக்கு அலைந்து திரிந்து அனுமதி பெற்று வந்த காலங்களும் என் நினைவுக்கு வருகின்றன. செய்துங்கநல்லூரில் ஒரு மேல்நிலைப்பள்ளி வரவேண்டும் என கனவு கண்ட என்னைப் போன்றவர்களின் கனவு இன்று நனவாகிவிட்டது.
அதே வேளையில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ‘திருக்குறள் திட்டப்பணிகள் கண்காணிப்புக் குழு’ உறுப்பினராக என்னை நியமித்தபோது, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் வகுப்புகளை நடத்த ஒரு இடத்தைத் தேடினோம். அந்தச் சமயத்தில் செய்துங்கநல்லூர் நூலகத்தையே தேர்வு செய்தோம். அங்கே அரசுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையம் அமைத்து, மாணவர்களுக்குத் திருக்குறள் வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டோம். ஆனால், எதிர்பாராத விதமாக நூலகத்துறையும், நூலகரும் எங்களுக்கு உரிய ஒத்துழைப்பு தரவில்லை.
எனவே, நாங்கள் வேறு இடம் தேடியபோது எங்களுக்குக் கைகொடுத்தவர் ஜோஸ் பள்ளி முதல்வர் ஜெய்தூண் பீவி அவர்கள்தான். அவர் அனுமதி அளித்ததால், 30 வகுப்புகளை இந்தப் பள்ளியில் நடத்தினோம். 1,330 திருக்குறள்களையும் முழுமையாக ஒப்புவித்தால், தமிழக முதலமைச்சர் 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவார். அந்தப் பரிசுக்காக மாணவர்களைத் தயார் செய்து வருகிறோம். அந்த விருதினைப் பெறத் தகுதி பெறும் மாணவர்களை, எனது நண்பர்களின் உதவியுடன் சென்னைக்கு இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்வேன்.
ஆம், 1,330 குறள்களையும் முழுமையாக ஒப்புவிப்பவர்களுக்குத் தமிழ் வளர்ச்சித் துறை மூலம் தமிழக அரசின் விருது கிடைக்கும். அந்த விருதைப் பெறச் செல்லும்போது, எனது நண்பர்களுடன் இணைந்து மாணவர்களைச் சென்னைக்குச் செல்லும்போது விமானத்திலும், திரும்பி வரும்போது வந்தே பாரத் ரயிலிலும் அழைத்துச் செல்வேன் என உறுதி கூறியிருக்கிறேன்.
இந்தச் செய்தியைப் பெற்றோர்கள் முன்னிலையில் மீண்டும் மேடையில் அறிவித்தேன். திருக்குறள் ஒப்புவிக்கும் பணிக்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பள்ளி முதல்வர் அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி. இந்த ஆண்டு எப்படியும் குறைந்தது இரண்டு ஜோஸ் பள்ளி மாணவர்களையாவது நிச்சயம் சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்வோம்.
இத்தகைய நல்ல வாய்ப்பைத் தந்த ஜோஸ் பள்ளி நிர்வாகத்திற்கும், தொடர்ந்து எனது ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உதவி செய்து வரும் பள்ளித் தாளாளர் மற்றும் நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி.


