
10.தாமிரபரணி கரையில் உதித்த வேளாக் குறிச்சி ஆதினம்
144 வருடத்துக்கு ஒரு முறை தாமிரபரணி ஆற்றங்கரையில் மகா புஷ்கரம் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. நாகபட்டினத்தில் இருந்து வேளாக் குறிச்சி ஆதின கர்த்தா வந்திருந்தார். கல்லிடைக்குறிச்சி கிளை மடத்தில் அமர்ந்து கொண்டு மகாபுஷ்கர பணியைத் தலைமை ஏற்று நடத்துகிறார். புஷ்கரம் என்ற வொரு விழாவே கிடையாது என அனுமதி மறுக்கப்படுகிறது. எங்கேயாவது குறிப்பு இருந்தால் அதைக் கொண்டு வாருங்கள் அனுமதி தருகிறோம் என்கிறது மாவட்ட நிர்வாகம். அப்போது தான் நான் எழுதிய தலைத்தாமிரபரணி நூலை ஆதின கர்த்தா பார்வையிடுகிறார்கள்.அதில் 12 வருடத்துக்கு முன்பு தாமிரபரணியில் புஷ்கரம் நடந்த நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. அதை எடுத்து முறைப்படி சமர்ப்பித்து தாமிரபரணி மகா புஷ்கர விழாவை மிகச்சிறப்பாக வழிநடத்துகிறார்கள் நமது ஆதினம். அந்த சமயத்தில் என்னுடைய நவீன தாமிரபரணி மகாத்மியம் என்னும் நூலைத் தனது சொந்த செலவில் பிரசுரம் செய்கிறார்கள். என்னை முக்கிய மேடையில் ஏற்றி எனக்கு விருது கொடுத்து கௌரவிக்கிறார். உலக நதிகள் வரலாற்றில் முதல் முதலில் க்யூர் ஆர் கோடு வசதியுடன் வீடியோ பார்க்கும் வசதி கொண்ட நூல். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதினங்களையும் நெல்லை தாமிரபரணி கரைக்கு அழைத்து வந்து என்னைப் பாராட்டினார்கள். அமைச்சர்,ஆளுநர் எனச் சிறப்பு விருந்தினர்கள் யார் வந்தாலும் என் நூலைஅவர்களுக்கு பரிசாக அளிப்பார்கள். எந்த கிராமத்தில் அவர்கள் சொற்பொழிவு நடத்தினாலும் தாமிரபரணி புகழ் பாடும் போதே எனது நூலை படிக்க கூறுவார்கள். அந்த நூல் எனக்குத் தமிழக அரசின் விருதையெல்லாம் பெற்று தந்தது. ஆதின கர்த்தா அவர்களின் ஆசீர்வாதம் என்னை எழுத்து உலகில் எங்கேயோ கொண்டு நிறுத்தி விட்டது. சுவாமியை என் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாது – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு