ஒட்டுடன்பட்டி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் எட்டாம் ஆண்டு பூக்குழி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஒட்டுடன்பட்டி அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் – முத்தாரம்மன் திருக்கோவிலில் எட்டாம் ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.கடந்த திங்கள்கிழமை கொடை விழா தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்பாளுக்கும் சுவாமிக்கும் சிறப்புப் பூ அலங்கார பூஜைகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மதிய கொடையும், சாமக் கொடையும் நடைபெற்றன. விழாவையொட்டிப் பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம், பால்குட ஊர்வலம், அக்னிச்சட்டி எடுத்தல், முடிகாணிக்கை செலுத்துதல் மற்றும் பொங்கலிடுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வழிபட்டனர். மேலும், கடந்த 8 நாட்களாகக் கோவிலில் பக்தர்களுக்குத் தொடர் அன்னதானமும் வழங்கப்பட்டு வந்தது.
நேற்று இரவு 12 மணியளவில் சாமக் கொடையின் போது சுவாமி வேட்டைக்காவு சென்று வந்த நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நள்ளிரவு 1 மணியளவில் அமைக்கப்பட்டிருந்த 21 அடி நீளமுள்ள பூக்குழியில், ஒரு பெண் உட்பட 11 பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி இறங்கிய பக்தர்கள் அனைவருக்கும் அருள்வாக்குக் கூறினர். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இப்பூக்குழி திருவிழாவில் கடம்பூர், குப்பண்ணாபுரம், சொக்கலிங்கபுரம், பசுவந்தனை, கோவில்பட்டி, புதியம்புத்தூர், விளாத்திகுளம், திருமலாபுரம், தொட்டம்பட்டி, கொப்பம்பட்டி, வேப்பங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் சிறப்பாகச் செய்திருந்தார்.


