
பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது என்றதும் மாணவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இராது. மழை பெய்ய தொடங்கி விட்டால் போதும் விடுமுறை அளிவிப்பிற்காக சமூக ஊடகங்களைக் கவனிக்கத் தொடங்கி விடுவதை பார்க்கலாம். இதற்கு என்ன காரணம்? கற்றலின் மீதான அவர்களது வெறுப்புணர்வா? என்றால் அது இல்லை .
மனித மனத்தின் அடிப்படை இயல்பே ஓய்வையும் மாற்றத்தையும் விரும்புவதுதான்.
ஒரே விதமான செயல்களைத் தொடர்ந்து நீண்ட நாட்கள் செய்து கொண்டிருக்கும்போது, நமது மனம் இயல்பாகவே ஓய்வை விரும்பத் தொடங்கிவிடுகிறது. மனமும் உடலும் மீண்டும் புத்துணர்ச்சி பெற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அதனால் உருவாகும் இயல்பான எதிர்வினையே ஓய்வை அல்லது விடுமுறையை எதிர்பார்த்தல்.
மனவியல் ஆய்வுகள் இதைப் பற்றி கூறுவதாவது: “ஓய்வு கிடைக்கும் நேரங்களில் தான் குழந்தைகளின் மூளை சோர்வை விடுத்து, புதிய அனுபவங்களை ஏற்கத் தயாராகிறது. தொடர்ந்து ஒரே அழுத்தத்தில் இருக்கும் மனம், சலிப்பையும் எதிர்ப்பையும் உருவாக்கும்; ஆனால் இடையிடையே கிடைக்கும் ஓய்வு, கற்றலின் மீதான ஆர்வத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும்.” என்கிறது.
எனவே இதைப் பற்றிய புரிதலை மாணவ பருவத்தினரை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அனைவரும் அறிந்திருத்தல் மிக மிக அவசியமானது.
ஆண்டு முழுவதும் பாடப்புத்தகங்களின் சுமையையும், தேர்வுகளின் பதற்றத்தையும் சுமந்து ஓடும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி விடுமுறை நாட்கள் ஒரு இனிய ஓய்வு நேரமாக இருக்க வேண்டும்.
ஆனால் இன்றைய காலத்தில், அந்த விடுமுறை நாட்களே பல மாணவர்களுக்கு சுமையாக மாறிவருவது கவலைக்கிடமான உண்மை.
பாடத்திட்டம்
*****
இதற்காகத்தான் ஓர் ஆண்டின் மொத்த பாடத்திட்டமும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டு, காலாண்டு, அரையாண்டு, முழுவாண்டு என்ற நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பருவத் தேர்விற்குப் பிறகும் மாணவர்களுக்கு விடுமுறைகள் அளிக்கப்படுகின்றன.
ஆண்டு இறுதித் தேர்வு முடிந்ததும், குறைந்தது ஒரு மாத காலமாவது விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த விடுமுறை நாட்கள் முற்றிலும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் தரும் நாட்களாக அமையச் செய்து கொடுப்பது அவசியம்.
மகிழ்ச்சிக்காகவும் அவர்களது அடுத்த ஆண்டிற்கான மனத் தயார் நிலைக்காகவும் அளிக்கப்படும் விடுமுறை நாட்கள் சுமையாகிவருவது கவலைக்குரிய ஒன்றாகும்.
கற்றலும் கற்பித்தலும் முழுமையாக மனம் சார்ந்த செயல்முறைகள். எனவே மனத்தின் இயல்பை அறிந்து, அதற்கேற்ப அவர்களை வழிநடத்தும் போதுதான் கற்றல்-கற்பித்தல் செயல்முறை பயனுள்ளதாக அமையும்.
மதிப்பெண் நோக்கம்
**********
மதிப்பெண் நோக்கத்தோடு ட்யூஷன், சிறப்பு வகுப்பு, கூடுதல் பயிற்சி போன்றவற்றிற்குள் மாணவர்களைத் தொடர்ந்து நுழைக்கும் தன்மை, அவர்களது இயல்பிற்கு மாறான செயலாகும்.
இதனால் மாணவர்களுக்குள் மனப்போராட்டங்களும், சக்தி இழப்பும் (Energy loss) உருவாகின்றன. தொடர்ச்சியான இத்தகைய அழுத்தம், மனச்சிதைவை ஏற்படுத்துவதோடு, மூர்க்கத்தனமும், பெற்றோரையும் ஆசிரியர்களையும் எதிர்க்கும் மனப்போக்கையும் உருவாக்கி, பின்னர் அதுவே அவர்களது இயல்பாக மாறிவிடும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.
சமூக ஊடகங்களின் அழுத்தம்
**************
இவ்வாறான அழுத்தங்கள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் விடுமுறை நாட்களை அர்த்தமற்ற திறன்பேசிகளின் ஊடகங்களுக்குள் கழிக்கும் பழக்கமும் மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் இன்னொரு கவலைக்குரிய அம்சமாக மாறியுள்ளது.
சமூக ஊடகங்களும், ஆன்லைன் விளையாட்டுகளும் மாணவர் பருவத்தினரின் முதல் பொழுதுபோக்காக மாறிவிட்டன. இதனையும் கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்தியாக வேண்டும்.
முற்றிலும் அதிலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சிக்காமல், குறிப்பிட்ட நேரம் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
விடுமுறை நாட்களில் திறன்பேசியைவிட அதிக மகிழ்ச்சியைத் தரக்கூடிய செயல்பாடுகளுக்குத் திட்டமிடுதல் மிக முக்கியமானதாகும்.
புதியனவற்றை விரும்பும் அவர்களது மனத்தின் இயல்பை நாம் பயன்படுத்தி இதை செயல்படுத்த இயலும்.
தாங்கள் வாழும் இடத்திலிருந்து வேறு இடங்களுக்குச் சுற்றுலாவாக சென்றுவரலாம். சமூக உணர்வுகளை வெளிக்காட்டும் திரைப்படங்களைக் குடும்பமாக இணைந்து பார்த்து விவாதித்தல், நெருங்கிய நண்பர்களையும் உறவினர்களையும் வீடுகளுக்கு அழைத்தல் அல்லது நேரில் சந்தித்து உரையாடுதல், வெளியில் சென்று விளையாடும் பழக்கத்தை ஊக்குவித்தல்… போன்ற பயனுள்ள செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்த பெற்றோர்கள் முன்கூட்டியே அவர்களுடன் இணைந்து திட்டமிட வேண்டும்.
இத்தகைய முயற்சிகள், அவர்களுக்குள் நல்ல எதிர்பார்ப்புகளையும் சிறந்த மனப்பான்மைகளையும் உருவாக்கும்.
ஆசிரியர்கள்
*******
பெற்றோர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்களும் மாணவர்களின் விடுமுறை நாட்களைப் பயனுள்ளவையாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
தேர்வு முடிந்து விடுமுறை என்றதும் அந்த விடுமுறை நாட்களைத் தொடர்ந்து வரும் அடுத்தப் பருவத்திற்கான பாடப்பகுதி அல்லது எழுதிய வினாத்தாள்களுக்கான விடைகளை எழுதி வரச் சொல்லி அனுப்புதல் ஒரு வழக்கமாக உள்ளது. இதுவும் அவர்களது மகிழ்ச்சியைத் தடுத்து சுமையாக உணர வைக்கும்.
எனவே மிகக் குறைந்த அளவிலான சுவாரசியமான வீட்டு வேலைகளைக் கொடுத்து அனுப்பலாம். அதை செய்ய இயலாமல் போகும் மாணவர்களையும் (மெல்ல கற்கும் மாணவர்கள்) அரவணைத்து செல்லுதலே பள்ளிச் சூழலை அவர்களுக்கு சுதந்திர நிலமானதாக உணர வைக்கும்.
ஒரு வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வீட்டுப் பாடங்களை அளிப்பது பெரும்பாலான மாணவர்களுக்கு சுமையானவையாகவே இருக்கும். கற்றல் திறன் குறைந்த மாணவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான அல்லது எளிமையான வீட்டுப் பாடங்களை அளிப்பதே சிறந்தது.
மாணவர்களின் வாழ்க்கையில் விடுமுறை நாட்கள் என்பது வெறும் பாடப்புத்தகங்களிலிருந்து விலகி நிற்கும் காலமாக அல்ல; அவர்கள் தங்களைத் தாங்களே அறிந்து கொள்ளவும், புதிய அனுபவங்களைச் சேகரிக்கவும், உறவுகளின் அருமையை உணரவும் உதவும் நல்ல வாய்ப்பு.
எனவே, விடுமுறை நாட்களை குழந்தைகளின் மகிழ்ச்சியையும் மனநலத்தையும் பாதுகாக்கும் விதமாக மாற்றிக் கொடுப்பது பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஏற்க வேண்டிய பொறுப்பாகும்.
அப்போதுதான், இன்றைய மாணவர்கள் நாளைய பொறுப்பான குடிமக்களாக உருவாகும் உறுதியான அடித்தளம் அமைக்கப்படும்.
மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் புதிய கல்வியாண்டை தொடங்க வேண்டுமானால், அவர்களின் விடுமுறை நாட்கள் மகிழ்ச்சியும் சுதந்திரமும் நிறைந்ததாக மாற்றும் முயற்சியை மேற்கொள்வோம்.
“விடுமுறை நாட்களில் மாணவர்கள் விரும்பாத பட்சத்தில் அவர்களை கூடுதல் சிறப்பு பயிற்சிகளுக்கு அனுப்புவது நிச்சயமாக எந்தவித பலனையும் தராது. மாறாக எதிர் வினைகளையே ஏற்படுத்தும்.”
_ முனைவர் த. ஜான்சிபால்ராஜ்
எழுத்தாளர்,ஆசிரியர்.
திருநெல்வேலி


