2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை முனைவர் வ. ஹரிஹரன் இலங்கையில் மேற்கொண்ட இலக்கியப் பயணம்தான் இந்த நூல். 2024 ஆம் ஆண்டு எழுத்தாளர்களுக்கு வெளிநாட்டுப் பயணம் செல்ல வாய்ப்பான காலமாக இருந்துள்ளது. அதனால்தான் நானும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 10, 11 ஆகிய தேதிகளில் முனைவர் சுதாகர் அவர்களுடன் குவைத் பயணம் மேற்கொண்டேன். எனது பயணத்தினைக் ‘குவைத்தில் மூன்று நாட்கள்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டேன். அந்த நூல் மே 2025-இல் வெளிவந்தது.
நான் நினைத்துப் பார்த்தேன். இந்தச் சமயத்தில்தானே முனைவர் வ. ஹரிஹரன் தன்னுடைய துணைவியாருடன் இலங்கை இலக்கியப் பயணம் மேற்கொண்டார். அவர் நூல் எழுதவில்லையே என எண்ணினேன். இதற்கு ஒரு காரணம் உண்டு. நான் தலைத்தாமிரபரணி, இடைத்தாமிரபரணி எனத் தாமிரபரணிக் களப்பயணத்தினைக் கட்டுரையாக எழுதி வருகிறேன். இந்த நிலையில் சுத்தமல்லி வரலாற்றை நான் எழுதும்போது எனக்குக் கைகொடுத்தது அய்யாவின் ‘பரண்வெட்டு’ நூல்தான். அவரது களப்பயணத்தில் எழுதிய ஆய்வு நூல். ஒரு ஆய்வாளராக மட்டுமல்லாமல் பத்திரிகையாளர் போலவே அந்த நூலை எழுதியிருப்பார். ஆய்வு சம்பந்தப்பட்ட தகவல்கள் எல்லாம் எளிமையாக இருக்கும். காரணம் இவர் பேராசிரியர் ஆகும் முன்பே ‘மாலை மலர்’ செய்தியாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு முகநூலில் அவர்கள் குடும்பத்தின் பாரம்பரியம் குறித்தும் சுத்தமல்லி பெருமைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் பிரமாதமாக இருக்கும். எனவே இவரது இலங்கை இலக்கியப் பயண நூலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டே இருந்தேன். இப்போது அந்த நூலை எனக்கு முனைவர் அய்யா அனுப்பி வைத்தார்கள். யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் அட்டைப்படத்துடன் அந்த நூல் 64 பக்கத்தில் இருந்தது. புரட்டிப் பார்க்கும்போதே ஆனந்தம்தான். இலங்கைக்கு நாம் செல்லவில்லை என்ற குறையை அந்த நூல் போக்கியிருந்தது.
பதிப்புரையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டி என அறிமுகப்படுத்தியிருந்தார்கள். ஆசிரியர் எரியூட்டப்பட்ட யாழ் நூலகம் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் வெள்ளை மாளிகையாக எழுச்சியுடன் காட்சியளிக்கிறது என எழுதியவர், குறைகள் இருந்தால் என்னிடம் தெரிவியுங்கள் எனத் தனது புலன எண்ணையும் கொடுத்திருந்தார். 21 தலைப்புகள் ‘இலங்கைக்கு முதல் முறையாக’ என்று ஆரம்பித்து ‘நினைவுப் படம்’ என நூலை முடித்திருக்கிறார்.
இவரது ‘தமிழ் இலக்கியங்களில் சமூக அரசியல் பொருளாதார நிலை’, ‘தமிழர் பண்பாடும் செல்நெறிகளும்’, ‘காலந்தோறும் தமிழர் கலைகள்’ என்ற மூன்று ஆய்வுக் கட்டுரை நூல்கள் இலங்கையில் நடைபெற்ற கருத்தரங்கில் வெளிவரச் செய்யவே இந்தப் பயணம் மேற்கொண்டார். யாழ்ப்பாணம் பொதுசன நூலக வரலாற்றை அவர் கூறும்போது அவரது கண்களில் நீர் ததும்பியது என்கிறார் நமக்குத் தான்.
சந்தோஷ் நாராயணன் சந்திப்பு பற்றி அவர் எழுதியிருக்கும்போது நம்மையறியாமலேயே சிரிப்பு வந்தது. நிச்சயம் அப்டேட் வேண்டும். ஆனாலும் ஒரு செலிபிரிட்டியை அழைத்து “எங்களைப் போட்டோ எடுத்துத் தாருங்கள்” எனக் கூறுவதற்கு ஒரு தைரியம் வேண்டும். ஆனாலும் இந்தச் சந்திப்பு அவரைப் பற்றி அப்டேட் செய்துகொள்ளச் செய்திருக்கிறது.
அவர் யாழ்ப்பாணத்தில் பார்த்த மந்திரி மனை, நூலகம், ஆஞ்சநேயர் கோயில் பற்றி கூறிக்கொண்டே தங்களது பயணத்தினைத் தொடருகிறார். இரண்டாம் சங்கிலியன் மன்னன், நல்லூர் கந்தசாமி கோயில் என நூல் தொடருகிறது. இவர் குடும்பத்தோடு இங்குச் சென்ற வகைக்காகப் புகைப்படங்களையும் ஆங்காங்கே பதிவிட்டுள்ளார். தொடர்ந்து யாழ் நூலகத்துக்கு அவர் வழங்கிய புத்தகத்தினைப் பற்றிக் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்ட ‘மலரினும் மெல்லிது’ நூலையும் நூலகத்துக்குக் கொடுத்த செய்தியைப் பதிவு செய்துள்ளார். அதன்பின் பன்னாட்டு கருத்தரங்குகளில் கலந்துகொண்ட செய்தியையும், பட்டிமன்றத்தில் தலைவராகப் பணியாற்றி வெற்றி பெற்ற வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
இவ்விடத்தில் இலங்கையில் பணமதிப்பு குறித்தும் 9-ஆவது பகுதியில் பேசியுள்ளார். அங்கு கிடைக்கும் உணவு, பேருந்து, திருகோணமலை தல வரலாறு, இராவணன் வெட்டு. இவர் சுற்றுலா சென்று அங்கே இராவணன் அருவியைக் கண்டு களித்தார். குளிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. எனவே “சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா?” என குற்றால அருவி, ஐந்தருவி, தேனருவி, அகத்தியர் அருவியை நினைத்துள்ளார். படிப்பவர்களையும் நினைக்க வைத்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகம், கதிர்காமம் நோக்கிப் பயணம் என அவர் எழுதியிருந்தார். கதிர்காமம் கோயிலை வைத்துத்தான் நமது ஊரில் கதிரேசன் மலை முருகன் கோயில் கட்டியிருப்பார்கள். அதைப் பற்றி எதுவும் சொல்லியிருப்பாரோ எனப் படித்துப் பார்த்தேன். இந்தத் தகவல் இல்லை. ஆனால் கோயில் நடை திறக்கவில்லை என எழுதியிருந்தார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. கதிர்காமம் கோயிலில் மூலவர் வேல் என்று கேள்விப்பட்டிருந்தேன். அது உண்மையா இல்லையா எனத் தெரியாமல் கட்டுரையை முடித்திருந்தார். ஆனால் ஜீப் பயணத்தினைக் குறித்து இவர் கூறும்போது ஆறு ஓடும் தகவலைப் பார்க்கும்போது, இந்த இடம் நம்ம ஊர் நம்பி மலை போல இருக்குமோ எனத் கற்பனை செய்து பார்த்துக் கொண்டேன்.
கொழும்புக்குச் சென்று அவருக்கு உதவியாக இருந்த ஷெர்கானுடன் நினைவுப் படம் எடுத்து விடைபெற்று இருந்தார்.
பயணக் கட்டுரை எழுதுவது சாதாரண விஷயமே கிடையாது. நாம் பார்க்கும்போது சாதாரணமானதாகத் தெரியும் இடம், அதைப் பற்றி அறியும்போது பிரம்மாண்டமாக இருக்கும். நாம் பிரம்மாண்டமாக நினைக்கும் இடத்திற்குத் தகவல் எதுவுமே இல்லாமல் இருக்கும்.
இலங்கை பெரிய நாடு. அய்யா 7 நாள்கள் அங்கே இருந்துள்ளார்கள். பல்வேறு சந்திப்புகள் நிகழ்ந்திருக்கும். இதைவிடப் பெரிய நூலாக எழுதியிருக்கலாம் என எண்ணத் தோன்றியது. அய்யாவோடு முனைவர் மகாதேவன் அவர்களும் சென்று இருந்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த நூலில் நிறைய தகவல்களை விட்டுவிட்டார்கள் என நினைக்கிறேன். எனவே தயவு கூர்ந்து கூடுதல் தகவலை அடுத்த பதிப்பில் அய்யா சேர்க்க வேண்டும் என எண்ணுகிறேன்.
எளியவனின் கோரிக்கை இது. ஆனாலும் இந்த நூல் பொக்கிஷம். நான் ஏற்கனவே சொன்னதுதான், பயணக்கட்டுரை என்பது சாதாரணமாக எழுத இயலாது. ஆனாலும் இவரது ‘பரண்வெட்டு’ போன்ற நூலில் உள்ள நுட்பங்களை வைத்துப் பார்க்கும்போது இந்த நூலில் தகவல்கள் குறைவே.
முத்தாலங்குறிச்சி காமராசு


