உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தொடங்கி வைத்தார்.
உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், வளர்ப்பு நாய்களுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமை தாங்கி, நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கி வைத்தார். ரேபிஸ் எனப்படும் வெறிநோயைக் கட்டுப்படுத்தவும், செல்லப் பிராணிகளைப் பராமரிக்கும் பொதுமக்கள் தங்களது நாய்களுக்குத் தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர், மாநகர் நல அலுவலர், சுகாதார அலுவலர் மற்றும் மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத் துறையின் முக்கிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் தங்களது வளர்ப்பு நாய்களை அழைத்து வந்து ஆர்வத்துடன் வெறிநோய் தடுப்பூசிகளைச் செலுத்திப் பயனடைந்தனர்.


