தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்விற்குப் புனித சூசை அறநிலைய அருட்தந்தை காட்வின் தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை மறைமாவட்ட அருட்தந்தை சேவியர் ஆலயக் கொடியினை ஏற்றி வைத்தார்.

தனைத் தொடர்ந்து பங்குத்தந்தை லாசர் தலைமையில் திருச்செபமாலை பவனியும், அதைத் தொடர்ந்து நவநாள் திருப்பலியும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவப் பக்தர்கள் கலந்து கொண்டு இறைவழிபாடு செய்தனர்.

இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலையில் ஜெபமாலை பவனியும், மாலையில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

9-ஆம் திருவிழாவான அக்டோபர் 6-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலையில், புனித சூசை அறநிலைய அருட்தந்தை சகாய லூட்ரின் மற்றும் அழகபுரம் உதவி பங்குத்தந்தை பிரவீன் ராசு ஆகியோர் குழந்தைகளுக்குப் புதுநன்மை வழங்குகின்றனர்.

அன்றைய தினம் மாலையில் குறுக்குச்சாலை மறைமாவட்ட முதன்மை குரு தோமினிக் அருள்வளன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து அன்றைய இரவு அதிசய ஆரோக்கிய அன்னையின் ஆடம்பரச் சப்பரத் தேர்பவனி நடைபெறவுள்ளது.

10-ஆம் திருவிழாவான அக்டோபர் 7-ஆம் தேதி புதன்கிழமை வேம்பார் புனித தோமையார் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜோசப் ஸ்டார்லின் தலைமையில் பெருவிழாக் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. கூத்தன்குழி உதவி பங்குத்தந்தை ஆண்டனி மதன் மறையுரை வழங்குகிறார்.

திருவிழாவின் நிறைவாக அக்டோபர் 8-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நேர்ச்சை அசன விருந்து நடைபெறவுள்ளது.

இத்திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயப் பங்குத்தந்தை லாசர், தூய அன்னாள் சபை அருட்சகோதரிகள், திருவிழா பணிக்குழுவினர், பங்கு மேய்ப்பு பணிக்குழு மற்றும் பங்கு இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.