குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் திருக்கோவிலில் இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா வரும் அக்டோபர் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் அக்டோபர் 20-ஆம் தேதி நள்ளிரவு நடைபெறவுள்ளது.
தசரா திருவிழாவில் பல்வேறு வேடங்கள் அணியும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கி வருகின்றனர். இதனையொட்டி சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரையில் துளசி மற்றும் பாசி மாலை விற்பனை செய்யும் தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்கள் வரும் கார்கள், பஸ்கள், வேன்களை நிறுத்துவதற்குத் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளன. பக்தர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தசரா திருவிழாவிற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு முத்தாரம்மன் மற்றும் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட பந்தல்காலுக்குச் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோவில் வளாகத்தில் பந்தல்கால் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி வள்ளிநாயகம், அர்ச்சகர்கள் அய்யப்பன், ஹரிஷ், விஷ்வா, கோவில் பணியாளர்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பந்தல்கால் நடப்பட்டதைத் தொடர்ந்து குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா கலைகட்டத் தொடங்கியுள்ளது.


