தாமிரபரணி ஆற்றில் பச்சையாறு இணையும் தருவை என்னும் இடத்தில் உள்ள தடுப்பணையில் உள்ள கல்வெட்டுகளை மனோன்மணியம் சுந்தனார் பல்கலைகழக தொல்லியல் துறை மாணவிகள் ஆய்வு செய்தனர்.
தருவை என்ற சிற்றூர் பாளையங்கோட்டையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த சிற்றூர் பாளையங்கோட்டையை அம்பாசமுத்திரத்துடன் இணைக்கும் சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. ஊருக்கு அருகில் இந்த சாலையைக் கடந்து ஒரு பெரிய ஓடை ஓடுகிறது. இது இடப்புறத்தில் உள்ள ஒரு அணைக் கரையில் முடிவடைகிறது. இந்த ஓடைக்கு மேற்கே ஒரு பெரிய பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பச்சை ஆறும் பாளையம் கால்வாயும் இணைந்து இந்த அணையில் வந்து முடிவடைகிறது. இங்கு வந்தடையும் தண்ணீரை விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் நிர்வகிக்க ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அந்த தடுப்பணையில் ஒரு பெரிய கல்வெட்டு உள்ளது என தாமிரபரணி கரையில் நடைபயணம் செய்து கட்டுரை எழுதிய வரும் முத்தலாங்குறிச்சி காமராசு தகவல் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் இந்த பகுதியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களான முருகன் மற்றும் மதிவாணன் ஆகியோருடன் துறைத் தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் சி. சுதாகரும் கள ஆய்வு நடத்தினார்கள்.
இந்த ஆய்வில் இந்த தடுப்பணை மேற்கு கிழக்காகக் கட்டப் பட்டுள்ளது எனவும்; இந்த தடுப்பணை மேற்கு, கிழக்கு மற்றும் மையப் பரிவு என மூன்று பகுதிகளாக உள்ளது எனவும்; மேல் புறத்தில் அருகருகே ஐந்து மதகுகளும் சீரான இடைவெளியில் மூன்று மதகுகளும் உள்ளன எனவும்; தடுப்பணையின் மத்திய பகுதியில் சீரான இடைவெளியில் நான்கு மதகுகளும் உள்ளன எனவும்; கீழ் புறத்தில் மேலும் 6 மதகுகள் அருகருகேயும் கட்டப் பட்டுள்ளன எனவும் கண்டறிந்தனர்.
இந்த தடுப்பணையின் மையப்பகுதியைக் கட்டப் பயன்படுத்திய கல்தூண்களில் பலவற்றில் அன்னம், யாளி, சிவலிங்கம் மற்றும் பிற சிற்பங்களுடன் வேலைப்பாடுகள் மிகுந்திருப்பதைப் பார்த்தனர். இது ஒரு சிவன் கோயிலிலிருந்து எடுத்த கல்தூண்களைக் கொண்டுதான் இந்த தடுப்பணை கட்டப் பட்டுள்ளது எனக் கணித்தனர்.
இந்த தூண்களில் உள்ள சிற்பங்களின் வடிவத்தின் அடிப்படையில் இவை சுமார் 800 வருடங்களுக்கு முற்பட்டவை எனக் கணித்தனர்.
“இந்த பழமையான கல்தூண்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது” எனக் கள ஆய்வில் மாணவர்களும் பேராசிரியர்களும் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வில் தருவையில் உள்ள திரு வாழ வல்லப பாண்டீஸ்வரர் கோயிலின் பின்புறம் பிரிக்கப்பட்டு மீண்டும் கட்டப் பட்டது எனவும்; மீண்டும் கட்டப்பட்ட போது மீதமிருந்த கல்தூண்களைக் கொண்டுதான் இந்த தடுப்பணை கட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும்; இந்த தடுப்பணை இக் கோயிலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது எனவும்; அதே நேரத்தில் இந்த கோயில் யாரால் எப்போது பிரிக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டது என்ற விபரம் கிடைக்கவில்லை எனவும்; இந்த கோணத்தில் மேற்கொண்டு ஆய்வு செய்யவேண்டும் எனவும் தொல்லியல் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
முத்தலாங்குறிச்சி காமராசு கொடுத்த தகவலின்படி இந்த தடுப்பணையின் மத்திய பகுதியில் உள்ள மூன்றாவது மதகின் மேல் ஒரு பெரிய கல் வெட்டு நிலை நிறுத்தப் பட்டிருந்தது. இந்த கல்வெட்டை தொல்லியல் மாணவிகளான ஆஸ்லின் காருண்யா மற்றும் சுபாஷினி ஆகியோர் படி எடுத்து வாசித்தனர்.
இந்த கல்வெட்டில் கிபி 1760ஆம் ஆண்டு வைகாசி மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதய நட்சத்திரத்தில் இந்த தடுப்பணை அமைக்கப்பட்டது எனவும் . அசாது மம்மது இசபு கான் பாதா சாய்பு என்பவர் இந்த தடுப்பணையை கட்டினார் எனவும் இக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. அதாவது இந்தத் தடுப்பணை கட்டி 264 ஆண்டுகள் ஆகிறது !
இந்த ஆய்வில் ஈடுபட்ட மாணவ மாணவியர்களையும் பேராசிரியர்களையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.