திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வரை 47.250 கி.மீ. தொலைவுக்கு ரூ.349.50 கோடி செலவில் நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது.
கடந்த 2010-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2013-ம் ஆண்டு முடிவடைந்து வாகனப் போக்குவரத்துக்கு தொடங்கியது. இந்தச் சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பெரிய நான்குவழிப் பாலம் அமைக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்தப் பாலத்தைக் கடந்து தினமும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்கள், விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து செல்கின்றன.
கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் நடுவே பெரிய ஓட்டை விழுந்தது. இந்தப் பாதையில் 108 நாட்கள் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரூ.3.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பாலம் முழுவதுமாக சீரமைக்கப்பட்டது.
சீரமைக்கப்பட்ட 3 ஆண்டுகளில் மீண்டும் பாலத்தில் இரண்டு இடங்களில் கடந்த மார்ச் மாதம் பெரிய அளவில் ஓட்டைகள் விழுந்தன. இதனால் இந்த வழியாக வாகனப் போக்குவரத்து கடந்த 14.03.2020 முதல் நிறுத்தப்பட்டது. ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் பாலம் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் கடந்த ஒன்றரை வருட காலமாக ஒருவழிப் பாதையில் சென்று வருகின்றன.
இந்த நிலையில் இன்றைய தினம் அந்த ஒருவழிப்பாதையில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இடதுபுறத்தில் ஒரு இடத்தில் சாலையில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே முறப்பநாடு போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த இடத்தை பேரிகார்டு போட்டு அடைத்து வைத்துள்ளனர்.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருவதால் விரைவில் இந்த சாலை முழுமையாக சேதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் முழுமையாக இந்த ஓட்டை என்பது விழுந்தால் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் போக்குவரத்து என்பது முற்றுலுமாக தடை படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு பாலத்தினை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பாலத்துக்கு அருகில் உள்ள பாலம் கடந்த 1956ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 65 ஆண்டு பழமையான பாலம் சிறிய சேதம் கூட ஏற்படாமல் இன்றும் கம்பீரமாக உள்ளது. ஆனால், புதிய பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளிலேயே அடிக்கடி சேதமடைவதால் அதன் தரம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.


