திருச்செந்தூர் & பாளையங்கோட்டை & கல்லிடைககுறிச்சி – அம்பை ரோடு தொழில் வளர்ச்சி சாலை அமைக்கும் பணிகள் 282 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 5 மாத காலமாக நடந்து வருகிறது. இதில் முதல் கட்டமாக திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வரை இருபுறமும் சாலைகள் விரிவாக்கம் செய்து புதிய சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நடந்து வரும் சாலை விரிவாக்கப்பணிகளை கோட்டப் பொறியாளர் கீதா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது அமைய உள்ள இந்த தொழில் வளர்ச்சி சாலைப்பணிகளில் ஒரு ரயில்வே மேம்பாலம், ஒரு நடைபாலம், 10 மைனர் பாலம், 120 கல்வெட்டு பாலங்கள், மற்றும் 16 கிலோ மீட்டர் தொலைவில் வடிகால் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது.
இந்த சாலையில் 3 இடத்தில் பெரிய அளவில் சந்திப்பு உருவாக்கப்படவுள்ளது. மேலும் 90 இடங்களில் சிறிய சந்திப்புகள் உருவாக்கப்பட உள்ளது. 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது. 26 பேருந்து நிறுத்தம் மற்றும் 23 இடங்களில் பேருந்து நிலையங்களும் அமையவுள்ளது. மேலும் 18 கழிவறைகள் கட்டப்பட உள்ளது. பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு குற்றம் நடக்காமல் இருக்க கண்காணிக்கப்படுகிறது.
கருங்குளத்தில் இருந்து ஆழ்வார்திருநகரிக்கு கொங்கராயகுறிச்சிக்கு இடையே புதிய சாலை அமைப்பதற்கான உருவாக்க பணி தற்போது நடந்து வருகிறது. இதற்கான நிலஎடுப்பு வேலை முடிந்தவுடன் சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது வெட்டும் மரங்களை கணக்கெடுத்து அதற்கு சமமாக 1500 மரங்களை நட்டு வளர்க்கும் பணியும் நடைபெறவுள்ளது. இந்த பணி நடந்து முடிந்தால் பாளை திருச்செந்தூர் மெயின் ரோடு நவீன மயமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பணியில் முதல்கட்டமாக சுமார் 9 கிலோ மீட்டருக்கு பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது செய்துங்கநல்லூரில் தற்போது சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது


