தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் சார்பில் “பசுமை தூத்துக்குடி” என்ற தலைப்பில் 5 மைல் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவ சங்க 43வது ஆண்டு விழாவின் துவக்கமாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 5 மைல் ஓட்டப்பந்தயம் “பசுமை தூத்துக்குடி” என்ற தலைப்பில் 02.10.2023 காலை 6 மணிக்கு மாநகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் சத்யராஜ், கேம்ஸ் வில்லேவின் தலைவர் ரைபின் தாரிசியஸ் முன்னிலமையில் துவக்கி வைக்கப்பட்டது.
இதில் ஆண்கள் பிரிவில் நோவா ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த் அஜித் குமார் முதல் இடத்தையும், ஸ்ரீவைகுண்டம் K.G.S கல்லூரியை சேர்ந்த சக்திவேல் 2வது இடத்தையும், கடையநல்லூர் ஜெய் சிவன் கலைக் கூடத்தை சேர்ந்த கண்ணன் 3வது இடத்தையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ராதிகா முதல் இடத்தையும், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கனகலட்சுமி 2வது இடத்தையும், விளாத்திக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ரம்யா3வது இடத்தையும் பெற்றனர்.
முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கு பெற்ற 197 ஆண்கள் மற்றும் 74 பெண்களுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர் சங்க பொதுகுழு கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 500 முன்னாள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ராஜேஸ் தில்லை தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலாளர் அன்னை ஜீவல்லர்ஸ் வி.விக்னேஷ் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் புரவலரும் கல்லூரியின் முதல்வருமான ஜெ. பூங்கொடி சிறப்புரை ஆற்றினார். வேதியியல் துறையின் முன்னாள் மாணவர் சென்னை காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் ஜெ.பி. பிரபாகர், மகேந்திரகிரி இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானி காமராஜ் கல்லூரியின் முன்னாள் கணிதத்துறை மாணவர் இ. எழிலரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆங்கிலத்துறைத் தலைவர் ஆ.சாந்தி, பொருளாதாரத்துறைத் தலைவர் ரெ.பிரபாவதி, கணிதத்துறை இணைப்பேராசிரியர் கோ.இராமலெட்சுமி, வணிகவியல் துறைத் தலைவர் ஜெ.முரளிதரன், இயற்பியல் துறைத்தலைவர் அ.சிவதாஸ் மற்றும் சிறப்பு நிலை பதிவறை எழுத்தர் கு.முருகேசன் ஆகியோர் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரியின் முன்னாள் மாணவர் ஜான்சன் தேவராஜ் காமராஜர் குறித்து கவிதை புணர்ந்தார். முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் அ.கலையரசி நன்றியுரை ஆற்றினார். கல்லூரியின் முன்னாள் கணிப்பொறி அறிவியியல்துறை மாணவர் கல்லூரியின் கண்காணிப்பாளர் பு.சரவணன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற துறைவாரியான கூட்டத்;தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஆசிரியரல்லாப் பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள் சுமார் 1100 பேர் துறை வாரியான கூட்டத்தில் பங்கேற்றனர்.


