தென்காசி மாவட்டம், கடையம் ஜம்புநதியை ஒட்டி தெற்கு கடையம் பஞ்சாயத்துக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் குப்பைகளை கொட்டுவதற்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளங்களை தோண்டிய போது முதுமக்கள் தாழிகள், பழங்கால ஓடுகள் சாமி சிலைகள் கிடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொல்லியல் துறை இந்த இடத்தில் முறையான ஆய்வு மேற்கொண்டால் கீழடியை போன்றே பழங்கால தமிழர்களின் வரலாறு வெளிப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடையத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஜம்புநதியும், ராமநதியும் ராமாயண புராணத்துடன் தொடர்புடையதாக குறிப்புகள் உள்ளன. பழங்காலத்தில் பல போர்கள் நிகழ்ந்த பகுதியாகவும், முற்காலத்தில் விக்கிரம பாண்டிய நல்லூர் என்றழைக்கப்பட்ட கடையம் பகுதியில் ஆற்றங்கரை தொல்குடி நாகரீகம் இருந்ததாகவும் பலதரப்பட்ட தகவல்கள் உள்ளன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாண்டிக் கோவை என்ற நூலில் கூட கடையம் குறிக்கப்பட்டு உள்ளது. அந்நூல் இந்த ஊரை கடையல் என்று குறிப்பிடுகிறது. கடையம் என்ற ஊரை சேரர்களும் பாண்டியர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
சுந்தரபாண்டியனின் ஆட்சி கல்வெட்டில் இவ்வூரை கோநாடு விக்கிரபாண்டிய நல்லூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜடாவர்மன் ஸ்ரீவல்லபனின் 18ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டும் கடையத்தை குறிப்பிடுவதால் இவ்வூரில் பழங்கால நாகரீகம் இருந்தது உறுதியாகின்றது. எனவே கீழடியைத் தாண்டிய பொக்கிஷங்கள் கடையத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன என்பது சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் கருத்தாகும்.