
தூத்துக்குடியில் ஊழியர்களுக்கு ஊதியம், மற்றும் தீபாவளி போனஸ் வழங்காத நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு அளித்த மனு: தூத்துக்குடியிலுள்ள கோட்டல் எனர்ஜன் தனியார் அனல் மின்நிலையத்தில் பல்வேறு நிறுவனங்களின் மேற்பார்வையில் சுமார் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையத்திலுள்ள கார்டியன் என்னும் நிறுவனம் சுமார் 30 செக்யூரிட்டி பணியாளர்களை முன்னாள் ராணுவத்தினர் என்ற அடிப்படையில் பணியமர்த்தி உள்ளது. மேற்படி நிறுவனம் கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியம் வழங்கவில்லை.
இது குறித்துச் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சி அலுவலகத்திலும், தொழிலாளர் நலத்துறையிலும் பல்வேறு புகார் மனுக்கனை அனுப்பியுள்ளனர். இதுவரை சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தீபாவளி போனஸ் வழங்காமல் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவெடுத்து உள்ளது.இதுபோலவே Encotec என்ற நிறுவனமும், SR டர்போ நிறுவனமும் 60 தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமலும், தீபாவளி போனஸ் வழங்காமல் வேலையிலிருந்து நிறுத்தியுள்ளது.
இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்கள். முதன்மை வேலை அளிப்பவரான கோஸ்டல் எனர்ஜன் நிறுவனம் புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காமலும், தானாக முன் வந்து ஊதியம் மற்றும் போனஸ் வழங்காமலும் கடந்த 5 மாதங்களாக வேடிக்கை பார்த்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு சில தினங்களை உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும், குழந்தைகளும் சாப்பிட வழியில்லாமலும், பண்டிகை கொண்டாட முடியாத துன்பம் மிகுந்த சூழ்நிலையில் உள்ளார்கள். எனவே அவர்களுக்கு ஊதியம் மற்றும் போனஸ் வழங்கிட மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.