
சாத்தான்குளம் அருகே பனையேறும் கருவி மூலம் பனையேறுவது குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கடகுளம் கிராமத்தில் அனைவரும் பனையேறும் வகையில் சென்னை வைஷ்ணவி அறக்கட்டளை, உழவர் பவுன்டேசன், வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் நவீன பனையேறும் கருவி கொண்டு பனை ஏறுவது குறித்த பயிற்சி மற்றும் செயல் விளக்க முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கடகுளம் பங்குத்தந்தை அன்புச்செல்வன் தலைமை வகித்தார்.
மன்னார் புரம் பங்குத்தந்தை எட்வர்ட் தொடங்கி வைத்தார். பனையேறும் கருவியை வடிவமைத்த கோவை வெங்கட் தாமோதரன், அதன்படி செயல்பாடு மற்றும் அதன் பயன்கள் குறித்து விளக்கினார். கிராம மக்களுக்குச் செயல்முறை விளக்கமும் அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் பலர் ஆர்வமுடன் பனையேறும் கருவி மூலம் பனையில் ஏறினர். இதில் ஊர் பிரமுகர்கள் கிளைசிங், ஆலன், தாமஸ், கெபிஷா உள்ளிட்ட கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.