– மறைந்த கலைமாமணி பொ. கைலாச மூர்த்தி அய்யா அவர்கள் நம்மை விட்டுப் பிரியவில்லை. கலை வடிவத்தில் நம்மோடு வாழ்கிறார்.
– அவருக்கு தோரண மலையில் வைத்து விருது வழங்கியது. எனது நூலில் அவர் வரலாற்றை வெளியிட்டது. தினகரன் நாளிதழில் வணக்கம் திங்கள் பகுதியில் அவரை நான் பேட்டி கண்டு வெளியிட்டது என் வாழ்வில் பெரும் பாக்கியம். அவரைபற்றி என் நூலில் பேட்டி கண்டதை உங்களோடு பகிர்கிறேன்.
– அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு
–
– ஒயிலாட்ட கலையும் – கலைஞரும்
– கலைமாமணி பொ.கைலாச மூர்த்தி
– – முத்தாலங்குறிச்சி காமராசு
–
“மாசபையோரே சிறந்த மறையோரே..
கோடி வந்தனங்கள் தந்தோமய்யா… பெரியோரே..
திவ்ய சபை நிறைந்த பெரியோரே…
உங்க சேவடி பணிந்தோமய்யா பெரியோரே…”
அடி வயிற்றிலிருந்து குரலெடுத்து ஒருவர் பாடுகிறார். அவர்தான் கலைமாமணி தூத்துக்குடி கைலாச மூர்த்தி. அவருடன் சேர்ந்த இருவர், பின் பாட்டுப் பாடுகிறார்கள். அந்த மேடையில் ஆறு ஆண்கள், மூன்று பெண்கள் சிவப்பு, மஞ்சள் துண்டை கைகளில் பிடித்துச் சுழற்றியபடி சுழன்று சுழன்று ஒயிலாக ஆடுகிறார்கள். இது தான் ஒயிலாட்டம்.
நமது மண்ணின் பாரம்பரிய கலையான ஒயிலாட்டத்தைத் தனது 67 வயதிலும் தள்ளாடாமல் வைத்திருப்பவர் ஒயிலாட்ட கலைஞர் கலைமாமணி பொ.கைலாச மூர்த்தி. அவர் தான் கடந்து வந்த பாதையையும், கிராமிய கலைகளுக்கு அரசு இன்னும் செய்ய வேண்டிய கடமைகளையும் குறித்து நம்மிடம் பேசினார்.-
ஐயா உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
நான் 6.05.1946 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள திருமலை ராயபுரத்தில் பிறந்தேன். எனது பெற்றோர் பெயர் பொன்னுசாமி & பூரணத்தம்மாள். எனது தந்தை விளாத்திகுளம் -புதூர் அருகே உள்ள பூதலபுரம் கிராமத்தில் கர்ணமாக வேலை பார்த்து வந்தார். நாங்கள் மொத்தம் ஐந்துபேர் 3 ஆண்கள், 2 பெண்கள். நான்தான் மூத்தவன்.
எனது எஸ்.எஸ்.எல்.சி படிப்பை பேரிலோவன்பட்டி நல்லழகு நாடார் உயர்நிலைப்பள்ளியில் படித்தேன். அதன் பின் வேலை முயற்சியில் ஈடுபட்டேன்.
அரசு வேலையில் இருந்தீர்களே அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
1963 ஆம் ஆண்டு புதூர் பஞ்சாயத்து யூனியன் காசாளர் வேலை எனக்குக் கிடைத்தது. அந்த சமயத்தில் நான் அரசுப் பணியாளர் சங்கத்திலும் சேர்ந்தேன். அந்த சமயத்தில் தான் நான் எனது உறவினரான சிவசங்கரன் பிள்ளையைச் சந்தித்தேன். அவர் சிறந்த ஒயிலாட்ட கலைஞர். அவரைப் பார்த்தவுடன் குருவாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.-
அவரைக் குருவாகத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
எனது குருநாதர் சிவசங்கரன் பிள்ளை ஒயிலாட்டம் மீது வைத்திருக்கும் அளவுக்கு அதிகமான பற்று, எனக்குப் பிடித்திருந்தது. அவர் சென்னம் பட்டி கிராமத்துக் கர்ணமாக வேலைப்பார்த்து வந்தார். இவர் ஒயிலாட்டம் ஆடும் அழகைப் பார்க்கக் கூட்டம் மிக அதிகமாகக் கூடும். திருவிழா என்றால் இவரது ஒயிலாட்டம் இல்லாமல் இருக்காது. இவர் ஒயிலாட்டம் ஆடும் போது, எல்லாவற்றையும் மறந்து விடுவார்.
ஒரு சமயம் நாகலாபுரம் அருகே உள்ள கோவில்குமாரரெட்டியார்புரத்தில் உள்ள முருகன் கோயிலில் திருவிழா. 10 நாள்கள் நடக்கும். அதைத் தட்டக்காடு திருவிழா என்பார்கள்.
இந்தத் திருவிழாவில் தேரோட்டம் விசேஷமாகும். இந்த நிகழ்ச்சியில் சிவசங்கரன் பிள்ளை ஒயிலாட்டம் ஆடுவார். அவர் “எங்கே சீதையைத் தேடுவேன்” என்று பாடி ஆடிக்கொண்டிருக்கும் போது, அவர் மேலதிகாரி வந்து இவரைத் தேடியுள்ளார். ஆனால் இவர் கலை மீது உள்ள ஆர்வத்தில் அவரை கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கோபமடைந்த மேலதிகாரி, இவரது கர்ணம் பதவியை காலி செய்துவிட்டார். மிகவும் அதிகாரமுள்ள அந்த வேலை போனாலும் பரவாயில்லை என்று முழுநேர ஒயிலாட்ட கலைஞராக மாறிவிட்டார் சிவசங்கரன் பிள்ளை. அந்த அளவுக்கு ஒயிலாட்டத்தின் மீது அதிகப் பற்று வைத்திருந்தவர் அவர். எனவே தான் நான் அவரை என் குருநாதராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன். எனது 33வது வயதில் ஒயிலாட்டத்தை அவரிடம் கற்றுத் தேர்ந்தேன். அன்று தொடங்கிய என் கலைப்பயணம் 34 ஆண்டுகளாகத் தொடர்கிறது. கலைக்கு அவர் குருவாக இருந்தார். எனது சிந்தனைக்கு எட்டயபுரத்தில் நடக்கும் பாரதி விழா, பூதபாண்டியில் நடைபெறும் ஜீவா விழா, குமரி மாவட்டத்தில் நடைபெறும் பேரா. நா.வா நினைவு முகாம் ஆகியவை எனக்கு வழிகாட்டியாக அமைந்தன.
சரி. இந்த ஒயிலாட்டம் தோன்றியது எப்படி? அதற்குப் புராதன வரலாறு எதுவும் உண்டா? ஒயிட்டாத்துக்கும் ஒயில் கும்மிக்கும் வித்தியாசம் உண்டா?
இதற்கு வரலாறு உண்டா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் ஆந்திராவில் இருந்து இந்த ஒயிலாட்டம் வந்திருக்கிறது என்கிறார்கள். கும்மி ஒயிலாட்டம் என்ற வகையில் ஈரோட்டில் ஒரு ஆட்டம் உள்ளது. காட்சிப் பொருளாக இல்லாமல் மக்கள் வாழ்க்கையோடு இணைந்து வாழ்க்கை முறையைக் கற்றுக்கொடுத்து மக்களோடு மக்களாகக் காலம் காலமாக வாழும் கலைதான் ஒயில் கும்மி. இந்த கும்மி ஆட்டம் தமிழகத்தில் பல பகுதியிலும், பல்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. ஒயிலாட்டம் என்பது ஆண்கள் மட்டுமே ஆடுவது. தற்போது இந்த ஒயிலாட்டத்தில், நாங்கள் பெண்களை இணைத்துக்கொண்டோம்.
முன்காலத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இல்லாத போது, வேலை செய்த களைப்பில் வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொழுதுபோக்காக இருந்தது கும்மியாட்டம்.
“தன்னா னானே தன்னா னானே தானே – தையைத் தானே தன நன்னா தானே நன்னா தானே தானே னன்னே….?” என்று முதலாமவர் குரல் எழுப்பிப் பாட, இடுப்பை வளைத்த கைகளை அசைத்துக் கும்மி அடித்து மற்றவர்கள் கோரஸ் பாடுவார்கள். ஆண்களும் பெண்களும் இணைந்தும், தனித்தனியாகவும் கும்மியடித்துப் பாடுவார்கள். வட்ட மடித்து இந்த குழுவினர் ஆடுகிறார்கள்.
சக ஒயிலாட்டக் கலைஞர்கள் நேர்கோட்டில் நின்று ஆடுவர். விவசாய களங்களில் நடுவை, நெல் தூற்றுதல் போன்று நடக்கும் பணிகளைப் போல இந்த ஆட்ட அசைவுகள் அமைந்துள்ளன.
ஒயிலாட்டத்தில் சத்தமாகப் பாடுவதால் குரல் தெளிவாகிறது. வளைந்து குனிந்து ஆடுவதால் உடல் களைப்பு மறைகிறது. அத்துடன் தேவையற்ற கொழுப்புகள் உடலில் தங்காமல் அழகிய வடிவம் கிடைக்கிறது. எனவே, அந்த காலத்துப் பெண்கள் விழாக்களில் கும்மியாட்டம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். திருமணம், கோவில் விழாக்களில் மணமக்களின் உறவினர்களே கும்மியாடி வந்தனர். குறிப்பாக பங்குனி உத்திர விழாவின் போது தேரின் முன்பு ஒயில்கும்மி ஆடுவது வழக்கம். இதுபோலவே தற்போது ஒயிலாட்டமும் நடந்து வருகிறது. ஒயிலாட்ட கலைஞர்களுக்கு நீரழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வராது.
ஒயிலாட்ட குழுவை எப்போது ஆரம்பித்தீர்கள் எப்படி ஆரம்பித்தீர்கள். தற்போது உங்கள் குழுவில் உள்ளவர்கள் யார்? யார்?
நான் 1982 ல் களக்காட்டில் பணிபுரிந்த போது, அங்குள்ள விவசாயச் சங்கத் தலைவர் நடராஜன் வேண்டுகோளின் படி வடகரை என்னும் ஊரைச் சேர்ந்த விவசாயிகள் குடும்பத்தில் உள்ள இளைஞர்களை வைத்து ஒரு ஒயிலாட்டக் குழுவைத் துவங்கினேன். எனக்கு ஒட்ட பிடாரம் யூனியனுக்கு மாறுதல் கிடைத்தது. அதன்பின் பல ஆசிரியர்கள் உதவியுடன் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஒயிலாட்ட பயிற்சி கொடுக்க வாய்ப்பு கிடைத்தது.
நீங்கள் அரசுப் பணியாளர். உங்களுக்கு ஒயிலாட்டம் நடத்த நேரம் இருந்ததா. ஒயிலாட்டம் உங்கள் பணிக்கு உதவியாக இருந்ததா?
குறிப்பாக களக்காடு பஞ்சாயத்து யூனியனில் 1982 ல் நான் காசாளராக பணியாற்றினேன். அப்போது களக்காடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியர் நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவட்ட நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அவரைப் பணியிடை நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. அரசின் கல்வித் துறையும் அவரை உடனடியாகப் பணியில் சேர்த்துக்கொள்ளும்படி ஆணை பிறப்பித்தது. ஆனால் நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை. அத்துடன் அதே ஊரில் அந்நிர்வாகத்தால் நடத்தப்பட்ட பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியையாக இருந்த அவரது மனைவியையும் பணியிடை நீக்கம் செய்தது. அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இவ்விருவரையும் பணியில் அமர்த்த போராட்டங்கள் நடத்தின. என்றாலும் நிர்வாகம் செவிமடுக்கவில்லை. இந்நிலையில் தொழிற்சங்க வாதியும், ஒயில் கும்மி கலைஞருமாக இருந்த நான் மக்களைத் திரட்ட ஒயில்கும்மி என்ற கலைவடிவத்தைப் பயன்படுத்தத் தொடங்கினேன். இதன் பொருட்டு ஒயில்கும்மி பாடல் மெட்டில் தலைமையாசிரியரின் பணியிடை நீக்க வரலாற்றை ஒரு நீண்ட பாடலாக எழுதினேன்.
அநியாயத்தை பாருங்கம்மா- அத
அதட்டிக் கேக்க வாருங்கம்மா
நீதிமன்றம் போய்வந்த
நியாயக்கதையை கேளுங்கம்மா
என்று தொடங்கும் இப்பாடல் ஆசிரியரின் துயரத்தை,
ஆட்ட வித்தாரு மாட்ட வித்தாரு-வாத்தியாரு
சட்டிய வித்தாரு பொட்டிய வித்தாரு
சம்சாரம் போட்டிருந்த
சங்கிலியைத் தானும் வித்தாரு
அத்தனையும் வித்துப்போட்டு
அத்தன கோர்ட்டுக்கும் போய்வந்தாரு
என்று வர்ணித்து, இறுதியில்
அம்மாமாரே அக்காமாரே
அக்காமாரே தங்கச்சிமாரே
அய்யாமாரே அண்ணன்மாரே
அண்ணன்மாரே தம்பிமாரே
நீங்க ஒதுங்கி நின்னா நியாயம் தானா
ஓடி ஓடி வாருங்கம்மா இந்த
போராட்டத்தில சேருங்கம்மா
என்று முடிந்தேன்.
ஒயில்கும்மி கலைஞர்கள் இந்தப்பாடலைத்தெருத்தெருவாக சென்று ஆட்டத்துடன் பாடினர். இது அனைவரையும் ஈர்த்தது. ஒருகட்டத்தில் பள்ளியின் நிர்வாகிக்கு ஆட்டோ ஓட்டுவதற்குக் கூட ஓட்டுநர்கள் முன்வரவில்லை. அவர்கள் சங்கத்தில் தீர்மானம் போட்டுச் செயல்பட ஆரம்பித்து விட்டனர். இந்த போராட்டம் ஒயில் கும்மியினால், மக்கள் இயக்கமாக மாறியதன் விளைவாக, அரசு தன்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள அப்பள்ளியின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டது. இது எனது கலைக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும்.
ஆனாலும் அரசுத் திட்டங்களுக்கு எனது கலை நிகழ்ச்சியையும், கலைஞர்களை அரசு அதிகாரிகள் பயன்படுத்தினர்.
அரசுத் திட்டம் எதுவிலும் கலந்து கொண்டீர்களா?
ஆமாம் மூன்று ஆண்டுகளாக அறிவொளி இயக்கத்தில் பணியாற்றும் பொறுப்பு எனக்கு வந்தது. அதாவது நான் ஊர்நல அலுவலராகப் பணியாற்றி வந்தேன். அப்போது திரு.ஸ்வரண்சிங் என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார். அறிவொளி இயக்கம் ஆரம்பித்தவுடன் என்னை அந்த பணியாற்ற அனுப்பினார். நான் தூத்துக்குடி ஒன்றிய திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன். அந்த சமயத்தில் மக்களிடம் கல்வியின் அருமை பெருமைகளை எடுத்துச்சொல்ல இந்த ஒயிலாட்டம் முக்கிய கருவியாக இருந்தது.
வேறு ஏதாவது தொடர்பு மூலம் நீங்கள் மக்கள் பங்கு ஆற்றினீர்களா?
பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் நெல்லை ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது நான் தவறாமல் பங்கு கொள்வேன். அப்போது பேராசிரியர் லூர்து, பேராசிரியர் சிவசுப்பிரமணியன் ஆகியோருடைய நட்பு கிடைத்தது. பேராசிரியர் லூர்து அவர்கள் பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர் ஆனார். அப்போது என்னைப் போன்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கு அவர் நடத்திய நாடக விழா, கல்லூரியில் பவள விழா, கிராமியம் என்ற நிகழ்ச்சி போன்றவற்றில் வாய்ப்பு வழங்கினார். தொடர்ந்து அருட்தந்தை பிரிட்டோ, முனைவர் இராமசந்திரன், முனைவர் தனஞ்செயன் ஆகியோரும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே எனது பங்கு அரசுத்திட்டம் மட்டுமல்லாமல் கல்விநிறுவனங்களுக்குச்சென்றடைந்தது. கல்லூரிகளில் ஒயிலாட்டம் கற்றுக்கொடுக்க என்னை அழைத்தனர். நானும் அங்குச் சென்று மாணவ மாணவி களுக்கு ஒயிலாட்டம் கற்றுக்கொடுத்து அரங்கேற்றி வருகிறேன்.
தூத்துக்குடி மரிய அன்னை கல்லூரி, வ.உ.சி கல்லூரி, மகாலெட்சுமி கல்லூரி,காமராஜர் கல்லூரி, பல்கலைக்கழக நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் எல்லாம் பங்கு பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
உங்கள் கலைக்கு உங்கள் மனைவியின் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?
குறிப்பாகக் கலைஞர்களுக்கு, ஊக்கம் கொடுக்கும் மனைவி அமைவது அபூர்வம் தான். எனக்கு 1985 ல் மணம் முடிந்தது. என் மனைவி தூத்துக்குடி துறைமுகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். நாங்கள் தூத்துக்குடியில் உள்ள மட்டக்கடை அய்யலு தெருவில் வசித்து வருகிறோம். எனது கலை நிகழ்ச்சிக்கு வேண்டிய உதவிகள் செய்பவர். என் நிகழ்ச்சியைக் கண்டு, என்னை உற்சாகப் படுத்த முதல் இருக்கையில் அமர்ந்துவிடுவார். என் நிகழ்ச்சிக்குப் பண உதவி வேண்டும் என்றால் அவர்தான் தருவார்.
பொதுவாகக் கலைஞர்களுக்கு பெண்தர மறுத்துவருவார்கள். களக்காட்டில் என்னைப் பெண்பார்க்க வந்த போது, நான் ஒயிலாட்டம் ஆடிக்கொண்டிருந்தேன். ஆகவே அரசு ஊழியராக இருந்தாலும், ஆட்டக்காரன் என்று எனக்கு பெண்தாரமலேயே அவர்கள் சென்று விட்டனர்.
என் மனைவி சுந்தரியை 1984 ல் மே மாதத்தில் பேசி முடித்துவிட்டார்கள். அந்த வேளையில் துறைமுகத்தில் பணியாற்றிய 18 தொழிலாளிகளை நிர்வாகம் வேலை நீக்கம் செய்து விட்டது. இதைக் கண்டித்து எனது தலைமையில் ஒயிலாட்ட குழுவினர் எனது மனைவி வீட்டு அருகிலேயே நிர்வாகத்தினை ஒயிலாட்டம் மூலமாகத் தட்டிக்கேட்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது மனைவி வீடு அருகே உள்ளது என்பது நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்களுக்குத் தெரியாது. எனவே இந்தஇடத்தில் போக்கு வரத்து அதிகமாக இருக்கிறது. வேறு இடத்துக்குச் செல்வோம் என்று பேசி பார்த்தேன். ஆனால் அவர் மசியவில்லை. எனவே வேறு வழியில்லாமல், அதே நேரம் தயக்கத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தேன். கலை மீது உள்ள ஆர்வம் என்னை மறந்து வேகமானது. இந்த சயத்தில் அங்கு வந்த மைத்துனர் ஆட்டத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்குச் சென்று உறவினர்களை அழைத்து வந்து விட்டனர். ஆனால் என்ன ஆச்சரியம் தெரியுமா? பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்காக ஒயிலாட்டம் நடத்துகிறாரே.. என்று பெருமைப் பட்டு, என் குழுவினருக்குக் குளிர்பானங்கள் தந்து உபசரித்தார்கள். அதில் இருந்து என் மனைவி தற்போதும், ஒயிலாட்டத்துக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கிறார்.
பணி ஓய்வு பெற்ற பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி உள்ளது?
தூத்துக்குடி மாவட்ட மகளிர் மேம்பாட்டுத் திட்ட அலுவலகத்தில் கணக்கராக பணியாற்றி 2004 ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற்றேன். அடிப்படையில் பொதுஉடைமைவாதியான எனக்கு மக்களோடு தொடர்பு கொள்ள உடன் வந்த கலை, பணி ஓய்வு பெற்ற பின்பும் என்னை விடவில்லை. சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் தீமைகளை விமர்சிக்கக் கவலையையே என் ஆயுதமாக்கிக் கொள்ளத் தீர்மானித்தேன். பாட்டு ஆட்டம், கதை ஆகிய மூன்றும் கலந்த கிராமிய கலையான ஒயிலாட்டம் கிராம மக்களைக் கவர்ந்து இழுக்கும் என்ற நம்பிக்கையில்தான் அதனைத் தேர்வு செய்தேன். தியாகம் நிறைந்த வீர வரலாறுகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் வ.உ.சியின் சுதேசி கப்பல் பயணித்த நூற்றாண்டு விழா, வாஞ்சி நினைவு நூற்றாண்டு விழா ஆகியவற்றை நடத்தினோம்.
இது வரை எங்கெல்லாம் கலைநிகழ்ச்சி நடத்தியுள்ளீர்கள்? உங்களால் மறக்க முடியாத நிகழ்ச்சி எது.
குஜராத் தமிழ்ச்சங்கத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு 2010 டிசம்பரில் சென்று வந்தேன். போபாலில் இந்திரா காந்தி அருங்காட்சியகத்தில் ஒரு நிகழ்ச்சி நடத்த 2017ல் சென்று வந்துள்ளேன். 2006ல் சர்வதேச குழந்தைகள் முகாம் நேரு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு டெல்லி பாலாபவனில் நடைபெற்றது. அதற்குத் தூத்துக்குடியில் இருந்து 6 மாணவ மாணவிகளை நான் அழைத்துச்சென்று ஒயிலாட்ட நிகழ்ச்சி நடத்தினேன். இதில் உலகநாடுகள் பங்கேற்றன. அதில் நான் ஒயிலாட்டத்துக்காகத் தூத்துக்குடியில் இருந்து கலந்துகொண்டதைப் பெருமையாக நினைக்கிறேன். 3.12.2007 ல் தூத்துக்குடியில் மாநில அளவில் நடைபெற்ற மாணவர்களின் விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிகளில் அலாசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 160 பேருக்குப் பயிற்சி கொடுத்து ஒயிலாட்ட நிகழ்ச்சி நடத்தினோம்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் ஒரு ஆண்டு எங்கள் குழுவினர் பங்கேற்றனர். கோயம்புத்தூரில் நடந்த செம்மொழி மாநாட்டிலும் எங்கள் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
1985ம் ஆண்டில் உலக சமாதானம், அணு ஆயுத எதிர்ப்பை வலியுறுத்தி செப்டம்பர் 11ல் ஒரு நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடைபெற்றது. பாரதி நினைவி நாளில் அந்த யாத்திரை தொடங்கி காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ந்தேதி சென்னையில் முடிவடைந்தது. இந்த யாத்திரையை எழுத்தாளர் பொன்னீலன் தலைமையில், உச்ச நீதி மன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் துவங்கிவைத்தார். நாங்கள் வரும் வழியெங்கும் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியபடி நடைப்பயணமாக வந்தோம். எங்களை அனைவரும் அன்போடு வரவேற்றார்கள். இந்த பணியை அன்றைக்கு நீதியரசர்கள் என்.டி.வானமாமலை, கிருஷ்ணய்யர் ஆகியோர் பெரிதும் பாராட்டினர்.
அம்பாசமுத்திரத்தில் சபாநாயகர் செல்ல பாண்டியன் தலைமையில் யானையை வைத்து எங்களை வரவேற்றார்கள். இதை எங்களால் மறக்க முடியாது.
பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் பவள விழாவில், கலைமணக்கும் கல்வி மனை என்ற தலைப்பில் 15.02.1999 ல் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒரே நேரத்தில் ஒரே இசைக்கு ஒயிலாட்டம்,தேவராட்டம், கழியல் ஆட்டம், கரகம், கணியான், பறை போன்ற அனைத்து கலைகளையும் ஒரே மேடையில் ஏற்றி, ஒரே நேரத்தில் ஆட வைத்தனர். அந்த நிகழ்ச்சி என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
1981 ல் மதுரை திருநகரில் பேராசிரியர் மூ. ராமசாமி அவர்கள் நடத்திய நிஜநாடக பயிற்சி முகாமில் பங்கு கொண்டேன். பேராசிரியர் இராமனுஜம், கூத்துப்பட்டறை முத்துசாமி, பத்திரிக்கையாளர் ஞானி, கண்ணப்ப தம்பிரான், கே.ஏ.குணசேகரன் ஆகியோர் பங்குபெற்றனர். அதில் நவீன குசலேன் என்னும் வேலை இல்லா திண்டாட்டம் பற்றிய நாடகத்தைப் பல இடங்களில் நடத்தியுள்ளேன். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகும்.
தற்போது நாட்டுப்புறக் கலைகள் நலிவுறக் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
நிச்சயமாகத் தொலைக்காட்சிதான். குறிப்பாக அந்த காலத்தில் நடவுப் பாடல் உண்டு. பாவைக்கூத்து உண்டு, கழியல் ஆட்டம் உண்டு. விவாய நிலத்தில் அறுவடைப் பாடல்கள் பாடுவார்கள். பிறந்தால் தாலாட்டு, இறந்தால் ஒப்பாரி என்று வாழ்க்கையே பாடல் தான். குறிப்பாக தற்போது இயந்திர படகில் மீனவர் மீன் பிடிக்கிறார்கள். ஆனால் முற்காலத்தில் அவர்கள் துடுப்பு படகின் மூலமாகத் மீன் பிடிக்கச் செல்வார்கள். மீன்பிடிக்கும் போது, உடல் வலி வரும். அந்த வலி தெரியாமல் இருக்க அம்பா பாடல்களைப் பாடுவார்கள். தற்போது இயந்திர படகு வருகையால் அம்பா பாடல்கள் மறைந்து விட்டன.
நா.வா அவர்கள் தொகுத்து வெளியிட்ட “தமிழ்நாட்டுப் பாடல்கள்” என்னும் தொகுப்பு நூலில் ஒரு தாலாட்டு பாடல் வரும்.
அந்த பாடல்..
பாலும் அடுப்பினிலே..
பாலகனும் தொட்டிலிலே…
பாலகனைப் பெற்றெடுத்த
பாட்டனாரோ… கட்டிலிலே
இந்த பாடலை கேட்டவுடன் நமக்குப்புரியாதது போல இருக்கும். பாலகனைப் பெற்றெடுத்த பாட்டனார் என்ற வரி ஒரு நெருடலான வரி.. அது எப்படி பாட்டனார் பாலகனைப் பெற்றெடுப்பார் என்ற கேள்வியும் எழும்.
ஆனால் சேலம் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் திருமணமாகி வரும் பெண்ணை மாமனார்தான் முதலில் தன்னோடு வைத்து குடும்பம் நடத்தும் பழக்கம் முன்னொரு காலத்தில் இருந்துள்ளது. இதைத்தான் இந்த பாடல் நமக்குக் காட்டுகிறது. பேராசிரியர் புத்தகம் முழுவதும் இதுபோன்ற சமுக குறிப்புகள் உள்ளன. ஆனால் தற்போது இவையெல்லாம் அழிந்து கொண்டுதான் இருக்கிறன.
ஒரு காலத்தில் தொலைக்காட்சி பெட்டி வந்தது. ஒலியும் ஒளி தான் முதலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த சமயத்தில் இலங்கையில் இருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் தற்போது 50 க்கு மேற்பட்ட தனியார் ஒளிபரப்பு வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. பல திரைப்படங்கள், சினிமா நிகழ்ச்சிகள் என்று தொலைக்காட்சி விஸ்வரூபம் எடுத்து விட்டது. எங்கோ நடக்கும் கிரிக்கெட்டைக் கூட வீட்டில் இருந்து பார்க்கிறோம். இதனால் நாட்டுப்புறக் கலைகளை மறந்துவிட்டோம்.
கலைமாமணி விருது பெற்றதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?
எனக்குக் கலைமாமணி விருது 2007 ல் கிடைத்தது. அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில், ஆளுநர் சுஜித் சிங் பர்னாலா எனக்கு அந்த விருதை அளித்தார். 76 கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் 17 திரைப்பட கலைஞர்களுக்கும் 5 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் 9 சின்னதிரை கலைஞர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. நமது பண்பாடுகளை விளக்கும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் விருதுகள் வழங்கப்பட வேண்டும். நான் பல வருடங்களுக்கு முன்பே இந்த விருதுக்கு மனு அளித்திருந்தால் எனக்குக் கிடைத்திருக்கும். ஆனால் என் குருநாதர் சிவசங்கரன் பிள்ளை விருது வாங்கிய பின்பே நான் வாங்கவேண்டும் என்று காத்திருந்தேன். 2005 ல் எனது குருநாதர் சிவசங்கரன் பிள்ளை கலைமாமணி விருது பெற்றார். அதன்பிறகு தான் நான் மனுசெய்தேன். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் என்னோடு ஒயிலாடும் பிச்சைகனி உள்பட மூன்று பேர் ஒயிலாட்டத்துக்குக் கலை மாமணி விருது பெற்று இருக்கிறோம் என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டம் வெள்ளி விழா நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. அந்த விழாவில் நான் ஒயிலாட்டத்தினை கோவில்பட்டியில் வைத்து நடத்தினேன்.அதற்கு என்னைத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷிஸ் குமார் மேடையில் அழைத்து பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
தாங்கள் எந்தெந்த அமைப்பில் பணியாற்றி வருகிறீர்கள்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராக உள்ளேன். நான் தற்போது தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் மாநிலக் குழு உறுப்பினராக உள்ளேன். இந்திய மக்கள் நாடக மன்றம்( மிறிஜிகி) மாநிலத் தலைவராக உள்ளேன்.
தற்போது ஒயிலாட்ட கலை மூலம் உங்களுக்கு வருவாய் எப்படி உள்ளது?
மாதத்திற்கு தற்போது ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே கிடைக்கின்றன. ஒரு நிகழ்ச்சியை நடத்த ரூ.5000 வரை செலவாகும். நாங்கள் மொத்தம் 10 பேர் இருக்கிறோம். ஒரு பாடகர், ஒரு நாதஸ்வரம், ஒரு தவில், 6 பேர் ஆட்டக் கலைஞர்கள், ஒரு பின்பாட்டு, இவர்களுக்கு போக்குவரத்து செலவு, தங்கும் இடம், உணவு செலவு எல்லாம் இதில் தான் பார்க்கவேண்டும். இது போக கலர் கலராக ஆடை வகைகளை உருவாக்க வேண்டும். வந்து செல்லும் கலைஞர்களுக்கு இந்த செலவு போகச் சம்பளம் கொடுக்க வேண்டும். எனவே இது போது மானது அல்ல. குழுவில் உள்ள தொழில்முறை கலைஞர்களுக்கு போதுமான வருமானம் இல்லை. எனவே நாட்டுப்புறக் கலையைக் காப்பாற்ற அரசு உதவி செய்ய முன்வர வேண்டும்.
அரசு எப்படி இந்த கலைஞர்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைக்கிறீர்கள்
கல்லூரிகளில் ஒயிலாட்டம் குறித்து “கெஸ்ட் லெக்சர்” கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கதகளியை மேம்படுத்தக் கேரள அரசும், ஒடிசி நடனத்தைக் காப்பாற்ற ஒரிசா அரசும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் நாட்டுப் புற கலைகளுக்கு ஒரு பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுள்ளது. அதுபோல நாட்டுப்புறக் கலைகளைக் காப்பாற்றத் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒயிலாட்ட பயிற்சி பள்ளி ஒன்றைத் தொடங்க ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கான இடவசதியும், பொருள் வசதியும் இல்லை. இதற்கு உதவி செய்ய அரசு முன்வந்தால் ஒயிலாட்டப் பயிற்சி பள்ளியைத் தொடங்க தயாராக இருக்கிறேன்.
தமிழக அரசின் சார்பில் கலைகளைப் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு அதை எடுத்துச் செல்லவும் திட்டமிட்டுக் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எழுத்தாளர் சூரிய தீபின் கலைகளை இரண்டு விதமாகப் பிரிப்பார். ஒன்று செவ்வியல் கலைகளான கர்நாடக சங்கீதம், பரதம், வயலின், மிருதங்கம், வீணை ஆகியவை சொகுசு கலைகள் என்றும் ஒயிலாட்டம், கழியலாட்டம், தேவராட்டம், தெருக்கூத்து, நையாண்டி மேளம், கணியான் கூத்து, சிலம்பம், வில்லுப்பாட்டு போன்ற நாட்டுப்புறக் கலைகள் வியர்வை கலைகள் என்றும் கூறுவர்.
கலைப் பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் இசைக்கல்லூரிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் ஆகியவற்றில் சொகுசு கலைகளே கற்பிக்கப் படுகின்றன. நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் கலைஞர்களுக்கும், நாட்டுப்புற கலைஞர்களுக்கும் வேறுபாடு உள்ளது. செவ்வியல் கலைஞர்கள் நிகழ்ச்சிக்கு வந்தால் அவர்களுக்குத் தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுகின்றன. பெண்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் ஒப்பனை செய்யக்கூட இடம் வழங்கப்படாமல் உணவு சரியாக வழங்கப்படாமல் ஊதியம் குறைத்து வழங்கப்பட்டும், இவர்களை நடத்தும் முறையை மோசமாக உள்ளது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 14 பொங்கல் விழா என்பது தெரிந்திருந்தும், நாட்டுப்புற கலைஞர்களை முதல் நாள் தான் அழைத்து மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி என்றால் 3 மணிக்கே வந்து விட வேண்டும் என்று கூறுவார்கள். நிகழ்ச்சியில் பங்குபெறும் கலைஞர்கள் வெவ்வேறு ஊர்களில் இருப்பார்கள். அமைச்சர்கள் அதிகாரிகள் வரும்போது கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதற்கு நாட்டுப்புற கலைஞர்களை ரோட்டில் இரண்டரை மணி நேரம் 3 மணிநேரம் ஆடிப்பாடி நிகழ்ச்சி நடத்த வைப்பார்கள். அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிக மிகக் குறைவு.
சங்கமம் போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் சுமார் 1500 கலைஞர்களுக்கு 6 நாள் மட்டும் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. அந்த வாய்ப்பும் எல்லா கலைஞர்களுக்கும் கிடையாது. கலைஞர்களின் வறுமை காரணமாகவும், போட்டிகள் காரணமாகவும், இடைத்தரகர்கள் உருவாகி அவர்கள் தேர்வு செய்த கலைஞர்களுக்கே வாய்ப்புகள் கிடைக்கின்றன.
அரசின் சார்பில் நடத்தப்படும் விழாக்களில் அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் நிகழ்ச்சிகளை வைத்தே முடித்துவிடுவார்கள்.
நாட்டுப்புறக் கலைகள்தானே நமது நாட்டின் உயிர்த்துடிப்பு . அதை ஏன் அரசு கண்டுகொள்ளவில்லை.
உண்மைதான். அது தான் புரியாத புதிராக உள்ளது. நாட்டுப்புறக் கலைகள் பாடல்கள் என்றால் அது பண்டைய காலத்தைச்சேர்ந்தது என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. அப்படி அல்ல. அது உயிர்த்துடிப்புள்ளது. புதிது புதிதாகத் தோன்றும் தன்மை உள்ளவை என்று பேரா.சிவசுப்பிரமணியன் கூறுகிறார். அதற்குச் சான்றாகக் குழந்தைகளின் விளையாட்டுப் பாடல் ஒன்றில்,
“அந்தா பாரு ரயிலு
ரயிலுக்குள்ளே குயிலு
குயிலப் பாத்துக் கண்ணடிச்சா
ரெண்டு மாசஞ் ஜெயிலு
ஜெயில விட்டு வெளிய வந்தா
ரஜினிகாந்து டைலு”
என்ற வரிகளையும், தேனி மாவட்டத்தில் சூலப்புரம் கிராமத்தில் பாடப்படும் நடவுப்பாடலில்,
“கோம்பையில கொய்யா மரம்
கொல கொலையா(க்) காய்க்கும் மரம்
ஜெயலலிதா வச்ச மர(ம்)
தினமொரு பழம் பழக்கு(ம்)
வீதிக்கெல்லாம்(ம்) லைட்டு(ம்) போட்டு
வெளிச்சத்தையே உண்டு பண்ணிக்
குளிக்க ரூமு(ங்) கட்டினாரு
குணமுள்ள எமிச்சியாரு”
என்ற பாடல்களையும் குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட பாடல்கள் தான் சாதாரண மக்களைச் சேருமே தவிரப் புரியாத மொழியில் பாடப்படும் கீர்த்தனைகளோ, பரதம் மற்றும் மற்றும் மேற்கத்திய நடனங்களோ மக்களைச் சென்றடைவதில்லை. மேலும் பேரா.மு.இராமசாமி தன்னுடைய “துர்க்கிர அவலம்” “சாபம் விமோசனம்” ஆகிய நாடகங்களில் நாட்டுப்புறக் கலையான தேவராட்டத்தைப் பயன்படுத்துகிறார். இதுபோல எல்லோரும் நினைத்தால் நாட்டுப்புறக் கலைகள் மேம்படுமே.
நாட்டுப்புறக் கலைகள் மேம்பட அரசு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்-?
அரசின் உத்தரவுப்படி 2002 முதல் மாவட்ட அளவில் ஆண்டுதோறும் வயது அடிப்படையில் 5 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, 18 வயதுக்குக் கீழ் உள்ள கலைஞர்களுக்கு “கலை வளர் மணி விருது”ம், 35 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு “கலைச்சுடர்மணி விருது”ம், 51 முதல் 60 மற்றும் 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முறையே “கலைநன்மணி”, “கலை முது மணி” விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்குச் சன்மானமாக ரூ.2000 வழங்கப்படுகிறது. இப்பொழுது உள்ள விலைவாசி உயர்வில் விருதுக்குண்டான தொகை ரூ.5000 வழங்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கிற பல கலைஞர்கள், அவர்கள் பங்குபெற்ற நிகழ்ச்சிகளின் குறுந்தகடுகள் வழங்குவதால் தேர்வு கமிட்டி அவற்றைப் பார்த்து விருதாளர்களைத் தேர்வு செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அல்லது நேரடியாகக் கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தச் சொல்லி, மாவட்ட ஆட்சியர் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையிலும் கலைஞர்கள் தேர்வு செய்யப்படவேண்டும். குழுக்களாக நடத்தப்படும் கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழும் சன்மானமும் வழங்கவேண்டும். உதாரணமாக ஒயிலாட்ட கலைஞர் ஒருவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டால் குழுவினர் அனைவரும் பாராட்டப்படவேண்டும்.
தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இரவு நேரங்களில் நிகழ்ச்சிகளுக்குப் போய்வரும் காலங்களில் காவல்துறையினர் விசாரித்தால், காட்ட மட்டுமே அடையாள அட்டைகள் பயன்படுகின்றன. குறைந்தபட்சம் பேருந்தில் இலவச பயணம் செய்ய வாவது அடையாள அட்டைகள் பயன்பெற வேண்டும். நாட்டுப்புற கலைஞர்கள் வாரியத்தில் சுமார் 25000 பேர் பதிவு செய்துள்ளார்கள். இவர்களின் குடும்பங்களுக்குக் கல்வி உதவித்தொகை, பேறுகால உதவித்தொகை, இறப்புச்சடங்குகளுக்கு உதவித் தொகை போன்ற நலத்திட்ட உதவிகள் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த தொகை போதுமானது அல்ல. அதை உயர்த்தி தரவேண்டும்.
பள்ளிகளில் ஓவியம், உடற்பயிற்சி, சங்கீதம் ஆகியவற்றிற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பது போல் நமது மண்ணின் கலைகளான நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
நாட்டுபுறகலைஞர்களுக்கு வாரியம் உள்ளது என்று கூறுகிறீர்கள் அதன் மூலம் நன்மை கிடைக்க வில்லையா? .
கிடைக்கிறது. ஆனால் இந்த வாரியம் செயல்பட அதிகாரிகள் நியமிக்கப்படவேண்டும் அல்லவா?. அது தான் நடைபெறவில்லை. அதாவது இந்த வாரியம் மூலம் அடையாள அட்டை வழங்குதல், நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் கலைஞர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்களை வழங்குதல், ஆண்டுதோறும் 5 கலைஞர்களைத் தேர்வு செய்தல், இசைப்பள்ளி ஜவகர் சிறுவர் மன்றங்களை இயக்குதல், அரசு விழாக்களான பாரதி விழா, கட்டபொம்மன் விழா, சாரல் விழா, குடியரசு தினவிழா, சுதந்திர தினம், பொங்கல் விழா ஆகியவற்றில் கலைநிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவற்றைக் கலை பண்பாட்டுத் துறை செய்ய வேண்டியுள்ளது.
இதற்காகத் தமிழகம் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 6 உதவி இயக்குநர்கள் பொறுப்பில் செயல்படுகிறது. ஆனால், இந்த 6 உதவி இயக்குநர்களில் 5 பதவிகள் காலியாக உள்ளன.
தமிழக நாட்டுப்புறப் பாடல் ஒன்றில்,
“முள்ளு முனையிலே மூணுகுளம் வெட்டினேன்
இரண்டு குளம் பாழ் ஒண்ணு தண்ணியே இல்லை”
என்று உள்ளது. இந்த அதிகாரிகள் இல்லாத நிலையில் அங்கு பணியாற்றுபவர் எந்த அளவுக்குக் கடமை உணர்வோடு வேலை செய்வார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
சரி.. தற்போது நாட்டுப்புற கலைஞர்கள் நிலை எப்படி உள்ளது?
தொலைக்காட்சி பெட்டி வந்த பின்பு நாட்டுப் புற கலைஞர்கள் நிலையெல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. குறிப்பாக ஒரு பாவைக் கூத்து கலைஞர் நிகழ்ச்சி தொடங்கி கடவுள் வணக்கம், சபை வணக்கம் பாடி முடிப்பார்கள். இராமாயண நிகழ்வுகளைத் தனது குரல் அதிர, பாடுவார்கள். ஆனால் அதைப்பார்க்க யாரும் வரமாட்டார்கள். வயிற்றுப் பிழைப்பு இருக்கிறதே.. அதனால் அவர்கள் தன் குழுவிலுள்ள பெண்களோடு ரெக்கார்டுடான்ஸ் ஆடவிரும்புவர்கள்பாடலுக்கு ரூ.25 கட்டி டோக்கன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஒலிபெருக்கியில் அறிவிக்கிறார். அதைக்கேட்டதும் ஊரிலுள்ள சில இளைஞர்கள் ஓடி வருகிறார்கள். பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். இதே நிலைமை தான் அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கும். கரகம் ஆடும் பெண்களிடம் ஜாக்கெட்டில் ரூ.5, ரூ10 குத்தி இளவட்டங்கள் மகிழ்ந்து கொள்கிறார்கள். “இல்லாதவன் பொண்டாட்டி எல்லோருக்கும் மதினி” என்று ஒரு பழமொழி கிராமத்தில் கூறுவார்கள். அதனடிப்படையில் நாட்டுப்புற கலைஞர்கள் வறுமையில் வாடுவதால் இவர்கள் இல்லாதவர்களாய் இருப்பதால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட்டால் செவ்வியல் கலைஞர்களைப் போல இவர்களும் காரில் வந்து இறங்குவார்கள்.
நாட்டுப்புற கலைஞர்களை எப்படிக் கௌரவிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்?
இந்த கலைஞர்களுக்கு என்ன சம்பளம் என்பதே யாருக்கும் தெரியாது. குறிப்பாக சித்தாளு வேலைக்குச் சென்றால் கூட, வேலை முடிந்தால் ரூ 300 சம்பளம் என்று கொடுப்பார்கள். ஆனால் நாட்டுப்புற கலைஞர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் கொடுக்கும் சம்பளத்தினை வாங்க வேண்டும். வானொலி நிலையங்களில் அங்கீகரிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.200ம், குழுத்தலைவருக்கு ரூ.750ம், பி.கிரேடு குழுவிற்கு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.300ம் குழுத்தலைவருக்கு ரூ.900ம் ஏ.கிரேடு உறுப்பினருக்கு ரூ.500ம், குழுத் தலைவருக்கு ரூ.1200ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வில்லிசை, ஒயிலாட்டம், பாடல்கள், நையாண்டி மேளம் நிகழ்ச்சிகளுக்குக் கலந்து கொள்ளும் உறுப்பினர் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைப்போலக் கலை பண்பாட்டுத்துறையிலும், கலைஞர்கள் எண்ணிக்கை, ஊதியம் ஆகியவற்றை நிர்ணயம் செய்தால் உதவியாக இருக்கும். பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது போலத்தான் இந்த நிலையும் உள்ளது.
கலை பண்பாட்டுத்துறையில் 6 உதவி இயக்குநர்கள் பதவியில், காலியாக உள்ள 5 உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்பி, அத்துறையில் பணியாளர் எண்ணிக்கையை அதிகரித்து போதுமான நிதி வழங்கி நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாரியம் வழங்கும் உதவிகளை விரைந்து வழங்க வேண்டும். பெண் ஒருவர் தமிழக முதல்வராக உள்ள நிலையில் , வறுமையால் வாடும் நாட்டுப்புற கலைஞர்களின் நிலைமை மாற்றப்பட வேண்டும்.
நீங்கள் ஊடகங்களில் பங்கு பெற்றது குறித்துக் கூறுங்கள்
பெரும்பாலும் நிகழ்ச்சிகளில் பங்குபெற்றாலும் ஊடகங்களில் வெளிவந்தால், அனைத்து மக்களையும் சென்றடைய நல்ல வாய்ப்பாகும். எனவே ஊடகங்களில் நான் பல நிகழ்ச்சிகளைச் செய்துள்ளேன். நெல்லை அகில இந்திய வானொலியில் எனது ஒயிலாட்ட குழுவினர் 2000 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பி வருகின்றனர். பொதிகை தொலைக்காட்சியில் எனது நிகழ்ச்சி நடந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியில் கிராம போன் என்ற நிகழ்ச்சியில் எனது குழுவினரின் ஒயிலாட்ட நிகழ்ச்சி நடந்தது. மக்கள் தொலைக்காட்சியில் ஜன்னலுக்கு வெளியே என்ற நிகழ்ச்சியில் ஒயிலாட்டம் சம்பந்தப்பட்ட எனது ஆவணப் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. சன் செய்திகள் துவக்கக் காலத்தில் ஒயிலாட்டம் குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அதில் நாங்களும் கலந்துகொண்டோம்.
இறுதியாக நீங்கள் நமது மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
நமது நாட்டிற்கு வந்த வெள்ளைக்காரர்கள் நம் மக்களோடு பழகுவதற்காக அவர்கள் உபயோகித்த பழமொழிகள், நாட்டுப்புற கதைகள், பாடல்கள் ஆகியவற்றைச் சேகரித்தார்கள். பெர்சிமார்க்வின் என்ற ஆட்சித்தலைவர் பாடலுக்கு 25 பைசா கொடுத்து நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரித்தார். அந்த பாடல்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் மூலம் கி.வ.ஜெகநாதன் முன்னுரையுடன் மலையருவி என்ற புத்தகமாக 600 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
நமது பராம்பரிய கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இது தனிநபர்களால் முடியாதது. எனவே அரசு இதற்குத் தனியாக ஒரு துறையை உருவாக்கி அழிந்து வரும் நமது கலைகளையும், நாட்டுபுற பாடல்களையும் தொகுத்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கல்லூரி பள்ளிகளில் இதை ஒரு பாடமாக வைக்கவேண்டும் இதுவே என் ஆசை..
என்று கூறினார்.