தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த மாதம் உள்ளாட்சித்தேர்தல் நடந்தது.
இந்நிலையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக 7, திமுக 5, அமமுக2, புதியதமிழகம் 1 ஆகிய இடங்களை பிடித்தன. இந்நிலையில் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் சேர்மன் பதவிக்கு கடும்போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் அமமுகவைச்சேர்ந்த 13 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சுப்புலெட்சுமி, 14வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் மாடத்தி ஆகிய இருவரும் காணவில்லை என காவல்துறை இணையதளம் மூலம் மலையாண்டி என்பவர் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த புகாரில் எங்கள் கட்சி சார்பில் 13வது மற்றும் 14வது ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். ஆனால் அந்த இரண்டு கவுன்சிலர்களையும் தற்போது வரை காணவில்லை. யாரிடம் கேட்டாலும் அதிமுகவினர் தூக்கிச் சென்று விட்டனர். திமுகவினர் தூக்கிச்சென்று விட்டனர் என கூறுகிறார்கள். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்னும் நன்றி கூற கூட வரவில்லை. எனவே காணாமல் போன இரண்டு கவுன்சிலர்களையும் கண்டுபிடித்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.