தாமிரபரணி ஆறு மேற்கரையோர ஊராட்சிகளை திருநெல்வேலி மாவட்டத்தோடு இணைக்க வேண்டும் என முத்தாலங்குறிச்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவைகுண்டம் வட்டம் தாமிரபரணி ஆறு மேற்கரையோர ஊராட்சிகளான முறப்பநாடு கோவில் பத்து, மு. புதுக்கிராமம், கீழ புத்தனேரி, வசவப்பபுரம், ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம், வி.கோவில்பத்து, செய்துங்கநல்லூர் ஆகிய ஊராட்சிகள் திருநேல்வேலி தலை நகரத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் தூத்துக்குடி தலைநகரம் 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கு தான் தமிழக அரசின் அனைத்து துறைசார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ளது. இதனால் அரசின் எந்த நலத்திட்டங்களை பெற பொதுமக்கள் பெற இயலவில்லை. மேலும் பல பிச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். ஆகையால் இந்த கிராம பஞ்சாயத்துகளை நெல்லை மாவட்டத்துடன் இணைக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் நேற்று நடந்த முத்தாலங்குறிச்சி கிராம சபை கூட்டத்தில் முத்தாலங்குறிச்சி ஊராட்சிகளை நெல்லை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய பற்றாளர் மாலா தலைமை வகித்தார். முன்னால் பஞ்சாயத்து தலைவர் ராஜாமணி, துணை தலைவர் நடராஜன்,ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் தனுஷ்லாஸ் பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து இவ்வூரை சேர்ந்த சுடலை மணி கூறும் போது, எங்கள் கிராம மக்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் உள்பட பல மக்கள் பிரச்சனைக்கு தூத்துக்குடி செல்வது கடினமாக உள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தோடு எங்கள் ஊர் மற்றும் அல்லாமல் சுற்று பகுதியில் உள்ள ஊர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இது குறித்து செய்துங்கநல்லூர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் இதற்கான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.-