தூத்துக்குடி வி.வி.டி. ரோட்டில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக சீரமைப்புப் பணிகளைச் மேற்கொள்ள வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’அமைப்பு சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் உறுப்பினர் காசிலிங்கம், அமைச்சர் ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட வி.வி.டி. ரோட்டில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சாலையின் தரம் சரிவர இல்லை.
மேலும், சாலையின் ஓரங்களில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட சேம்பர்களில் பல இடங்களில் பள்ளங்கள் அடைக்கப்படாமல் உள்ளன. இதனால் அங்குப் பல விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வி.வி.டி. ரோடு 2-வது தெரு திரும்பும் முனையில் குடிநீர்க் குழாய்க்காகத் தோண்டியபோது, அங்கிருந்த மழைநீர் செல்லும் குழாயை உடைத்துவிட்டனர். பின்னர் அந்த குழாயை முறையாக இணைக்காமல் அப்படியே மூடிவிட்டனர். இதனால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால், உடனடியாக இந்தச் சீரமைப்புப் பணிகளைச் மேற்கொண்டு மழைநீர் சீராகச் செல்ல வழிவகை செய்ய வேண்டும் எனவும், இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தைப் போக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


