தூத்துக்குடி அரசு மருத்துவமனை திட்டப்பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனை திட்டப்பணிகள் குறித்த மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும், குடும்ப நலத் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் காசநோய் மற்றும் தொழுநோய் ஒழிப்புக்கான நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறியப்பட்டது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் எபனேசர் ஜோயல் குமார், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் பிரியதர்ஷினி, குடும்பநலத் துறை துணை இயக்குநர் மருத்துவர் பொன்ரவி, காசநோய் துறை துணை இயக்குநர் மருத்துவர் சுந்தரலிங்கம், தொழுநோய் துறை துணை இயக்குநர் மருத்துவர் யமுனா மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


