உடல் என்பது உயிரைச் சுமந்திருக்கும் இயற்கையின் ஒப்பற்ற படைப்பு; பெண் குழந்தையின் உடலும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஆனால் நமது சமூகத்தில் பெண்ணினத்தின் உடலைக் கூட குடும்பத்தின் மானம், மரியாதை, அந்தஸ்து ஆகியவற்றின் அடையாளமாகப் பார்க்கும் மனநிலையே இன்னும் இருக்கிறது.
ஒரு குடும்பத்தின் ஒழுக்கத்தையும், கௌரவத்தையும் அளவிடுவதற்குக்கூட அந்தக் குடும்பத்தில் பிறந்த பெண்ணின் ஒழுக்கமே அளவுகோலாக நிர்ணயிக்கப்படுகிறது.
பெண்ணுடல்தான் மானமா?
***********
அப்படியானால் இந்தக் கேள்வியை நாம் இன்று கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பெண்ணின் பாலியல் உணர்வுகளையும், வாழ்க்கைத் தேர்வுகளையும் அவள் புரிந்துகொள்வதற்குமுன்பே திருமணம் செய்து வைக்கும் குழந்தைத் திருமணங்களுக்குப் பின்னாலும் பெண்ணின் உடல் மீதான சமூகக் கட்டுப்பாடு இருந்தது.
கணவனை இழந்த பெண்ணின் வாழ்க்கையிலும் இந்தக் கட்டுப்பாடு பல கொடூரமான வடிவங்களை எடுத்தது. சில வரலாற்றுச் சூழல்களில் உடன்கட்டை ஏற்றுதல் போன்ற கொடுமைகளும், பின்னர் விதவைகளின் உடலையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தும் பல்வேறு சமூக நடைமுறைகளும் உருவாயின.
தலை மழித்தல், அலங்காரங்களைத் தவிர்த்தல், குறிப்பிட்ட நிற ஆடைகளை மட்டுமே அணிதல் போன்றவை, ஒரு பெண் மீண்டும் சமூகத்தின் பாலியல் பார்வைக்குள் வராதபடி அவளுடைய தோற்றத்தையே கட்டுப்படுத்திய மனநிலையின் வெளிப்பாடுகளாக அமைந்தன.
அதாவது, பெண் தன் உடலின் மீது முழுமையான உரிமை கொண்டிருக்கக் கூடாது என்பதே அந்த சமூக மனநிலையின் அடிப்படை.
ஆனால் சுழலும் பூமி தன் இயக்கத்தில் தளரவே இல்லை. காலம் மாறியது. சட்டங்கள் மாறின. கல்வி பெருகியது. பெண்கள் தங்களுடைய உரிமைகளைப் பேசத் தொடங்கினர்.
ஆனாலும் அந்தப் பழைய மனநிலை முழுமையாக இன்னும் ஒழிந்தபாடில்லை. மாற்றங்களின் வேகம் மிகக் குறைந்த அளவில் தான் உள்ளது. அது புதுப்புது வடிவங்களை எடுத்துக்கொண்டு இன்றும் நம்மிடையே வாழவே செய்கிறது.
இன்னும்,
குடும்ப வன்முறை,
வரதட்சணை மரணம்,
பெண் குழந்தை மீதான பாகுபாடு,
குழந்தைத் திருமணம்,
பாலியல் வன்முறை,
பணியிடப் பாலியல் தொல்லை,
கல்வி மறுப்பு,
கட்டாயத் திருமணம்,
காதல் திருமணத்திற்கு எதிரான வன்முறை,
இணையவழித் தொல்லை,
பாலியல் சுரண்டல்,
பெண்ணின் உடை மற்றும் நடத்தை மீதான கட்டுப்பாடு,
பெண்களின் அரசியல் மற்றும் சமூகப் பங்கேற்பைத் தடுப்பது
போன்ற ஆணாதிக்க செயல்கள் நடைபெறத் தான் செய்கின்றன.
ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும்போது, முதலில் குற்றவாளியிடம் கேள்வி கேட்பதற்குப் பதிலாக அந்தப் பெண்ணிடமே கேள்விகள் எழுகின்றன.
அவள் ஏன் அந்த இடத்திற்குச் சென்றாள்?
ஏன் தனியாகச் சென்றாள்?
எப்படிப்பட்ட ஆடை அணிந்திருந்தாள்?
அந்த ஆணுடன் ஏன் பேசினாள்?
அவளுடைய நடத்தை எப்படி இருந்தது?
இப்படிக் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் குற்றவாளியின் மீதான பொறுப்பை பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது திருப்பி வைக்கிறது.
குற்றத்திற்குக் காரணம் குற்றவாளியின் மனநிலையும் செயலும்தான்.
ஆனால் சமூகத்தின் பார்வை இன்னும் பல நேரங்களில் பெண்ணையே விசாரிக்கிறது. அதன் மூலம் குற்றவாளிக்கு தெரியாமலேயே ஒரு பாதுகாப்புக் கவசத்தை சமூகமே அவனுக்கு உருவாக்கிக் கொடுக்கிறது.
இதிலும் கொடுமையானது, ஒரு பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானபோது, குற்றவாளியை அடையாளம் காட்டி சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக, “விஷயம் வெளியே தெரிந்தால் குடும்பத்தின் மானம் போய்விடும்” என்று அஞ்சும் நிலை இன்னும் இருப்பதுதான்.
ஆனால் ஒரு குழந்தைக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை அந்தக் குழந்தைக்கு எந்தவகையிலும் அவமானம் ஆகாது.
அதை மறைப்பது குடும்பத்தின் மானத்தைக் காப்பதல்ல. மாறாக, அந்தக் குற்றவாளிக்கு இன்னொரு குழந்தையைப் பாதிக்கக்கூடிய வாய்ப்பை வழங்குவதாகவே அமைந்து விடுகிறது.
ஒரு பெண்ணின் உடலை குடும்பத்தின் மானத்தோடு இணைத்துப் பார்க்கும் பழைய சிந்தனையை நாம் உடைக்க வேண்டும். ஒரு பெண்ணின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறை குடும்பத்தின் மானத்திற்கு ஏற்பட்ட களங்கம் என்று கருதுவது அறியாமை. ஒழுக்கத்தைப் பற்றின உண்மை அறிதல் அற்ற தன்மை. அது அவளுடைய மனித உரிமைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றம்.
“ஒரு குழந்தைக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை அவளுடைய தவறு அல்ல. அவளுக்கு அதில் எந்த அவமானமும் இல்லை. இதில் அவமானம் என்பது முழுக்க முழுக்க அக்குற்றத்தை இழைத்தவனுக்குத்தான்” என்ற இந்த மனநிலையை ஏற்படுத்துவதில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சமூகத்திற்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.
ஒரு குழந்தை அச்சமின்றி தனது மனதில் உள்ளவற்றைச் சொல்லக்கூடிய வீட்டையும், கேள்வி கேட்கத் தயங்காத பள்ளியையும், குற்றவாளியைப் பாதுகாக்காத சமூகத்தையும் நாம்தான் உருவாக்க வேண்டும்.
தவறு செய்தவனைக் காட்டிக் கொடுக்க மறுத்து அமைதி காக்கும் பெண்ணின் மௌனத்தை மானம் என்று அழைக்கும் சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும்.
குற்றத்தை மறைப்பது எந்த வகையிலும் நியாயம் அல்ல. அது அவளுக்கான அந்தஸ்தும் அல்ல; குற்றத்தை வெளிப்படுத்துவதுதான் சமூகப் பொறுப்பு.
அவ்வாறு வெளிப்படுத்தினால் தனது பிற்கால வாழ்க்கை கேள்விக்குறியாகுமே என்ற அச்சமே இதன் மூலக்காரணம். ஏன் இந்த அச்சம்? பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் சமூகத்தால் எப்படிப் பார்க்கப்படுகிறாள்? ஏதோ வாழ்க்கையையே முழுதும் இழந்துவிட்டதான ஏளனப் பார்வை, பரிதாபகரமான பார்வை…
எந்தக் குற்றமும் செய்யாத பெண்ணை அர்த்தமற்ற விதங்களில் விமர்சிப்பது தான் இதற்கெல்லாம் காரணம்.
இத்தகைய சமூகப் பார்வைகளை மாற்றும் செயல் ஒவ்வொரு குடும்பங்களிலிருந்தும் உருவாக வேண்டும்.
குடும்பங்களில் வெளிப்படையாக, பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள் பேசப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் எந்தவித கறையும் உடையவள் அல்ல. அது ஒரு விபத்து. உடலை சிதைத்த இரக்கமற்ற காமுகனையே குற்றவாளியென எடுத்துக் கூறி விளக்க வேண்டும்.
இச்சூழலில் வளரும் குழந்தைகள் சிறு வயதில் இருந்தே பாலியல் குற்றங்களை செய்யாமல் விலகவும், அதைப்பற்றின சரியான புரிதலையும் உடையவர்களாக வளர்வர். நமது சமூகத்தில் பாலியல் சார்ந்த எந்த விசயங்களையும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் வெளிப்படையாக பேசத் தயங்குவதே இதற்கான முதன்மையான காரணமாக நான் பார்க்கிறேன்.
சமீபத்தில் பெண்குழந்தைகள் சார்ந்த பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜெம் வீரமணி சம்பவம் போன்றவை, இந்தக் கேள்வியை மீண்டும் நம்முன் நிறுத்துகின்றன.
ஒரு குழந்தை தன்னிடம் நடந்ததை அச்சமின்றி சொல்லக்கூடிய குடும்பம் வேண்டும். அவள் சொல்வதை நம்பக்கூடிய பெற்றோர் வேண்டும். அவளையே குற்றவாளியாக்காத ஆசிரியர்கள் வேண்டும். புகார் அளிப்பதை அவமானமாகப் பார்க்காத சமூகம் வேண்டும். குற்றவாளி யாராக இருந்தாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தத் தயங்காத மனநிலை வேண்டும்.
பெண்ணின் உடல் குடும்பத்தின் மானமல்ல.
அவளுடைய உடல் அவளுடைய உரிமை.
இந்த அடிப்படை உண்மையை சமூகத்தின் மனதில் ஆழமாகப் பதியச் செய்யாத வரை சட்டங்கள் மட்டுமே பாலியல் வன்முறையை முற்றாகத் தடுக்க முடியாது.
பெண்ணின் மௌனத்தை மானம் என்று அழைக்கும் சமூகத்தை மாற்ற வேண்டும்.அது நம் ஒவ்வொருவரின் கடமை.
குற்றத்தை மறைப்பது மானமல்ல.
குற்றவாளியைப் பாதுகாப்பது மரியாதையல்ல.
பாதிக்கப்பட்ட குழந்தையின் குரலைக் காப்பதுதான் சமூகத்தின் உண்மையான கௌரவம்.
_ த.ஜான்சிபால்ராஜ்


