
செய்துங்கநல்லூர் அருகே 25 ஆண்டுகளாக தூர்ந்து கிடக்கும் தூதுகுழி முதல் மடையை பழுது பார்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாமிரபரணி பாசனம் மருதூர் மேலக்காலில் தூதுகுழிகுளம் உள்ளது. செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழ தூதுகுழி என்னும் இடத்தில் இந்த குளத்தின் முதல் மடை உள்ளது. இந்த மடையின் மூலமாக சுமார் 150 ஏக்கர் பாசன வசதி பெறும். இங்கு வாழை மற்றும் பூ பயிர்கள் பயிரிடப்படுகிறது. பிசான சாகுபடி காலத்தில் நஞ்சை பயிரிடுவார்கள். ஆனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மடை தூர்ந்து விட்டது.
இது குறித்து கீழ தூதுகுழியை சேர்ந்த பச்சமால் கூறும் போது, தூதுகுழி குளம் முதல் மடை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே பழுதாகி விட்டது. அதன் பின் தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போய் விட்டது. இதுகுறித்து பல முறை பொதுப்பணித்துறை அதிகாரியிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. இந்த மடை பொதுப்பணித்துறை குளத்தில் இருந்தும் கூட நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான திருநெல்வேலி & திருச்செந்தூர் சாலையின் வழியாக மறு புறத்துக்கு செல்கிறது. எனவே நெடுஞ்சாலை அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார். நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டால எங்களுக்கும் இந்த மடைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்கள். இவர்கள் பிரச்சனையால் 25 ஆண்டுகளாக இந்த மடை அப்படியே கிடக்கிறது. எனவே மாவட்ட ஆட்சி தலைவர் தலையிட்டு இந்த மடையை பழுதி நீக்கி தரவேண்டுகிறேன் என்றார்.
மூன்று போகம் விளைந்த இவ்விடத்தில் 1 போகம் விளைவதே கடினமாகி விட்டது. இதற்கிடையில் நெடுஞ்சாலை துறையும், பொதுப்பணித்துறையும் போடும் போட்டியில் ஒரு மடையே தூர்ந்து விட்டது. எனவே உடனடியாக இந்த மடையை சீர் செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.