கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் நாணல் காடு பஞ்சாயத்து உடையார் குளம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் குளம் நிரம்பியது. இதனால் குளம் உடைந்து வெள்ள நீர் ஊருக்குள் செல்லும் நிலை இருந்தது. இதற்கிடையில் இதை கேள்விப்பட்ட கருங்குளம்ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் நள்ளிரவு அவ்வூருக்குச் சென்றார். அவருடன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கிய லீலா, நாணல் காடு பஞ்சாயத்துத் தலைவர் இசக்கி முத்து உள்பட அலுவலர்கள் சென்றனர். அவர்கள் ஊர் மக்கள் ஒத்துழைப்பில் மருதூர் கிழக் கால் வாய்க்காலில் உடையார் குளம் தண்ணீரைத் திறந்து விட்டனர். மேலும் குளத்துத் தண்ணீர் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கையும் எடுத்தனர். நடுராத்திரியில் மக்களுக்கு உதவக் கொட்டு மழையில் கொடை பிடித்து நின்று உதவிய கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.


