ஆதிச்சநல்லூரில் நடந்து வரும் அகழாய்வு பணியில் வெளிநாடுகளை தாண்டிய நவீன தொழில் நுட்பத்தை புகுத்த வேண்டும். அதிகாரிகளுக்கு கலை பண்பாட்டுத்துறை ஆணையர் அறிவுறுத்தல்.
ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த அக்டோபர் 10ம் தேதி தொல்லியல் அகழாய்வு பணிகள் தொடங்கியது. மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணிகள் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைப்பதற்கான முதல் கட்ட பணியாக தொடங்கி உள்ளது. இந்த அகழாய்வு பணிகள் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
இதற்காக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களில் 10க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டு அகழாய்வு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அகழாய்வு பணியில் ஏற்கனவே 12 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அகழாய்வு பணியில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்காக வாழ்விடப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட தமிழக கலை பண்பாட்டுத்துறை ஆணையரும், தூத்துக்குடி மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பாளருமான பிரகாஷ் நேரில் பார்வையிட வருகை தந்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வந்தார்.
அகழாய்வு பணிகள் நடைபெறும் இடங்களையும், அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களையும், 150 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு தளத்தையும் பார்வையிட்டார். அவர்களுக்கு திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அதன்பின்னர் ஆய்வாளர்களிடம் பேசிய பிரகாஷ், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது மிகவும் வரவேற்க தக்க ஒன்று. ஆதிச்சநல்லூரில் 30 கோடி ரூபாய் மதிப்பில் இந்த அகழாய்வு பணிகள் நடைபெற வேண்டும். அப்போது தான் முழுமையான அகழாய்வு பணிகள் நடைபெற முடியும். மேலும் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை தாண்டி இந்த அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் ஆய்வாளர்களிடம் தெரிவித்தார். அதனை ஆய்வாளர்கள் குறிப்பெடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் எத்திஸ்குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் அருள், கருங்குளம் கிராம நிர்வாக அலுவலர் மணிமாலா, ஆதிச்சநல்லூர் சங்கர் கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


