
கருங்குளம் புதுக்குளம் கிராமத்தில் சாய்ந்த வாழைக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் ஒன்றியத்தில் மணிமுத்தாறு பாசனத்துக்கு சொந்தமான 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் தெற்கு காரசேரிகுளம், சிரியந்தூர் குளம், சாத்தனேரி குளம், இலுப்பைகுளம், வல்லகுளம், குருக்கல் பட்டிகுளம், கிளாக்குளம், திருவரங்கனேரி குளம், அரசர்குளம், மல்லல்குளம், புதுக்குளம், உதயனேரி குளம் உள்பட பல குளங்கள் உள்ளன. இங்கு மணிமுத்தாறு தண்ணீர் போதிய அளவு வராவிட்டாலும் கிணற்று தண்ணீர் மூலமாக வாழை பயிர் செய்து வந்தனர். நேற்று முன்தினம் பெய்த சூறைகாற்று மழையில் இந்த பகுதியில் வாழைகள் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து புதுக்குளத்தினை சேர்ந்த விவசாயி கோபால் என்பவர் கூறும் போது, நாங்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாழை பயிர் செய்துள்ளோம். வரும் மாதம் முதல் அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. ஒரு தார் ரூ130 வரை வியாபாரிகளுக்கு அடைத்துள்ளோம். ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று முன்தினம் அடித்த காற்றில் சுமார் 4 லட்சம் வாழைகள் சாய்ந்து விட்டது. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தும் அவர்கள் பார்வையிடவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் சரிந்து கிடக்கிறது. எனவே சாய்ந்த வாழைக்கு நஷ்ட ஈடு தர அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
புதுக்குளம் கிராமத்தில் சாய்ந்த வாழைக்கு நிவாரணம் அரசு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.