செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலய திருவிழா சப்பர பவனியுடன் நடந்தது.
தூத்துக்குடி மறைமாவட்டத்தின் கடைசி பகுதியும் , பாளையங்கோட்டை மறை மாவட்த்தின் கடைசி பகுதியாகவும் விளங்கும் நாட்டார்குளம் 108 வது பங்காக உருவாக்கப்பட்டது. தாமிரபரணி ஆற்றங்கரையில் இயற்கையோடும், வயல் சார்ந்த பகுதி மக்களுக்கு அருள்பாலித்து கொண்டு இருக்கும் புனித சூசையப்பர் ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. 10 நாள் விமர்சையாக கொண்டாடப்படும் இந்த திருவிழா மே மாதம் 14 ந்தேதி மாலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு தொடர்ந்து காலை 7 மணிக்கு திருவிழா ஆடம்பரக்கூட்டுத்திருப்பலி நடந்தது. இதில் நாள்தோறும் இறை பணியாளர்கள் சிறப்பு திருப்பலி நடத்தினர். தைலாபுரம் ராபின், டி.கள்ளிகுளம் ஆங்கிலப்பள்ளி முதல்வர் வின்சென்ட், ஸ்ரீவைகுண்டம் அதிபர் மரியவளன், சிந்தாமணி குழந்தைராஜன், பாளையஞ்செட்டிகுளம் அந்தோணி ராஜ், வள்ளியூர் உளவியல் ஆலோசகர் ஜஸ்டின், செய்துங்கநல்லூர் ஆராக்கிய லாசர், ஆர்.சி.பள்ளிகள் கண்காணிப்பாளர் பென்சிகர், ஆகியோர் தொடர்ந்து திருப்பலி நடத்தினர்.
22 ந்தேதி நடந்த திருப்பலி நற்கருணை ஆசீர் ஆகிய வற்றை மீனவன் குளம் டென்சில்ராஜா, பூச்சிகாடு விக்டர் சாலமோன் ஆகியோர் நடத்தினர். 23 ந்தேதி சப்பர பவனி நடந்தது. இதில் மிக்கேல் அதிதூதர், அமலோற்பவம், புனித சூசையப்பர் ஆகியோர் ஆலயம் வீதி உலா வந்தது. பக்தர்கள், பூ மற்றும் உப்பு மிளகு போட்டு புனிதர்களை தரிசனம் செய்தனர். சப்பரம் ஊர் முழுவதும் சுற்றி வந்தது. இறுதியில் மீண்டும் கோயில் வளாகத்தில் வந்து இறங்கியது. மாலை 7 மணிக்கு நடந்த ஜெபமாலை திருப்பலி, நற்கருணை ஆசிருக்கு செங்கை செங்காட்டூர் அமலதாஸ், கொடை மங்களக்கொம்பு வேளாங்கண்ணி, திருச்சி இருதயராஜ், கும்ப வலங்கை பால் ஆன்டனி, திண்டுகல் கொட்டாம்பட்டி மரியதுரை ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்குளம் பங்கு தந்தை இருதயசாமி தலைமையில் அருட்சகோதரி, ஊர் நிர்வாகிகள் உள்பட பலர் செய்திருந்தனர்.