தினகரன் ஆன்மிக மலரில் எழுதிக் கொண்டிருந்த வேளையில் வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளி மலர் என்ற பகுதி வெளிவரும். அந்த பகுதி ஆசிரியராக எழுத்தாளர் கே.என்.சிவராமன் அவர்கள் பொறுப்புக்கு வந்தார். அந்த சமயத்தில் நெல்லை , தூத்துக்குடி , தென்காசி மாவட்டத்தினை சேர்ந்த வட்டார செய்திகளை நிறைய எழுதுவேன். வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு செய்திகளைப் பிரசுரம் செய்து என்னை ஊக்குவிப்பார் கே.என்.சிவராமன்.அதோடு மட்டுமல்லாமல் நாம் மும்பையைப் பற்றி எழுதிய செய்திகளையும் பிரசுரம் செய்து மும்பை வாசகர்கள் மத்தியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆன்மிகம் மட்டும் எழுத மாட்டார், இதுபோன்ற சிறப்பு வரலாற்றுப் பதிவுகளையும் செய்வார் என என்னை அறிமுகம் செய்தார். இந்த வேளையில் நான் விகடன் பிரசுரம் மூலமாக நெல்லை ஜமீன்கள் என்ற நூலை வெளியிட்டு இருந்தேன். அந்த நூல் 6 ஆயிரம் பிரதிகள் வரை விற்று தீர்ந்தது. அதன் பிறகு எதிர்பாராத விதமாக அடுத்த பதிப்பு வெளியிட வில்லை. இந்த வேளையில் குங்குமம் ஆசிரியராக கே.என்.சிவராமன் பொறுப்பு ஏற்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தினகரன் ஞாயிறு மலரில் ஜமீன் கதைகள் என்ற தொடரையும் எழுத ஆரம்பித்தார். அந்த தொடரில் எனது நூல்களில் நான் எழுதிய ஜமீன்தார்களையும், ஜமீன்தார்கள்குறித்து நான் தேடி அலைந்து விவரங்களையும் அடிக்கடி சுட்டிக் காட்டி வந்தார். இதனால் பிரபலமான இதழில் என் நூல்களை மேற்கோள் காட்டும் நூலாகக் காட்டி என் எழுத்துக்கு ஒரு படி மேலே உயிர்கொடுத்தார். தற்போதும் என் மீது பற்று வைத்து ஆதிச்சநல்லூர் கொற்கை, தாமிரபரணி உள்பட எனது தேடல் சார்ந்த கட்டுரைகளை வெளியிடும் போது என்னிடம் பேட்டிக்கண்டு அதைப் பிரசுரம் செய்ய அவரது குழுவினருக்குப் பரிந்துரை செய்துள்ளார்கள். ஆகவே தான் குங்குமம் இதழிலும் எனது பெயர் அடிக்கடி வெளிவருகிறது. வட்டார செய்திகளைத் தொகுத்து நான் நெல்லை வரலாற்றுச் சுவடுகள் என்ற பெயரில் ஒரு நூலை காவ்யா பதிப்பகம் மூலம் வெளியிட்டேன். அந்த நூல் இப்போது தமிழகத்தில் உள்ள தமிழக அரசு நூலகங்களில் உள்ளது. நன்றி கே. என். சிவராமன் அவர்களே. இளையவராக இருந்தாலும் இனியவர். சிரித்த முகத்தோடு எழுத்தாளர்களை ஆதரிப்பவர். என் எழுத்துலகில் நீங்களும் மைல் கல்லாக அமைந்து விட்டீர்கள். அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு