ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் வேளாண்மை இயக்குநர் கே.வி. முரளிதரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் வேளாண்மை இயக்குநர் கே.வி. முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மற்றும் தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ் உடனிருந்தனர்.

ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், பேரூர் குளம் பகுதிக்குச் சென்ற உயர் அதிகாரிகள் குழுவினர், அங்குள்ள நீர்வரத்து மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி, கோர்ட் பின்புறம் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப் பகுதியையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மழைக்கால வெள்ளப் பாதுகாப்பிற்காக ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி கோர்ட் பின்புறம் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகிலும் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு அருகில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்திலும் அவசரகாலத் தேவைகளுக்காகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளின் இருப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.