011. தாமிரபரணியைக் காப்பாற்ற அடித்தளமிட்ட சக்தி நாதன்
கடந்த 10 வருடங்களாகத் தாமிரபரணியை மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளைக் காப்பாற்றும் வல்லமையாகச் செயல்பட்டது நம்தாமிரபரணி அமைப்பு. இந்த அமைப்பினை தோற்றுவித்தவர் பொறியாளர் சக்தி நாதன். தாமிரபரணி ஆற்றை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருடன் இணைந்து சுத்தப்படுத்துவது.இதில் கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்துவது. தொழிலதிபர்களைப் பயன்படுத்தி ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நீர் கருவை மரங்களை அகற்றுவது உள்பட பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை துவக்கியவர். மிகப்பெரிய குளமான மானூர் குளத்தினை தூர்வாருவது,அதன் வரத்துக் கால்வாயைத் தூர்வாருவது உள்பட நீர்நிலைகளை பாதுகாக்க பல்வேறு திட்டங்களைத் தீட்டியவர். தாமிரபரணி , சிற்றாறு, நம்பியாறு உள்படப் பல ஆறுகள் இவர் காலத்தில் தூய்மைப்படுத்தப்பட்டு விடும் என ஆவலோடு இருந்தோம். நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து இவரைச் சென்னை மாற்றல் செய்தார்கள். ஆனாலும் பணியை விடாமல் செய்து கொண்டிருந்தார். கொரோனா நோய் காலத்தில் நம் தாமிரபரணி இயக்கத்தினரைத் தள்ளியே இருங்கள் தனித்திருங்கள் என அறிவுறுத்தியும் வந்தார். ஆனாலு கொரோனாதொற்று அவர் உயிரைப் பறித்து விட்டது. அவரை இழந்து நாங்கள் இன்று நிர்க்கதியாய் நிற்கிறோம். மிகப்பெரிய அரசு பதவியிலிருந்தாலும் சட்டத்தினை மதிப்பவர். உடன் இருப்பவர்களைச் சட்டத்தினை மதிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவர். இனிமையான மனிதர். அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி பாளையங்கோட்டை ஜெயந்திரா பள்ளியில் வைத்துநடந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு கலந்துகொண்டார். அவருக்குபாவநாசத்தில் சிலை வைக்க வேண்டும் எனவும் மணி மண்டபம் கட்ட வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை வைத்தோம். நிச்சயம் அரசு நிறைவேற்றும் என நம்புவோம். என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத மற்றொரு நபர் சக்தி நாதன் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


