“எது சிறந்தப் பள்ளி?”
சமூக அழுத்தங்களே தேர்ந்தெடுக்கின்றன.
புதிய கல்வியாண்டில் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டிய கட்டாயச் சூழல் ஒருபுறம், சேர்ந்த பள்ளி சரியில்லை எனவே வேறொரு பள்ளியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை மற்றொருபுறம் ….ஆக “எந்தப் பள்ளி நல்ல பள்ளி?” என்ற குழப்பத்தில் பெற்றோரும் குழந்தைகளும் …!
குறிப்பாக , தரமான பள்ளி அல்லது தரமற்ற பள்ளி என்ற மக்களின் பார்வை,கல்விக் கட்டணம் , கட்டிடங்கள், தேர்ச்சி சதவீதம் போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
பொதுவாக அதிகக் கட்டணம் பெற்று படிக்க வைக்கும் பள்ளிகளின் மீதே மக்களின் கவனம் குவிகிறது. அத்தகைய கல்வி நிலையங்கள் கண்ணைக்கவரும் கட்டிடங்களோடு சகல வசதிகளும் நி்ரம்பி இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் குழந்தைகளின் கற்றல் திறன் ,மனோபாவம், குடும்ப பொருளாதார நிலமை , போன்ற அடிப்படை நிலமைகளை அறியாமல் எப்படியாவது தரமான பள்ளி என்று கருதப்படும் பள்ளிகளில் குழந்தைகளைக் சேர்ப்பது குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் குடும்ப வளர்ச்சியையும் கட்டுப்படுத்தும்.
பக்கத்து வீட்டு குழந்தை அல்லது உறவினர் வீட்டு குழந்தை ஏதோ ஒரு பள்ளியில் படிக்க வைக்கப்படுகிறது என்பதற்காகவே தங்களது குழந்தைகளையும் அதே பள்ளியில் சேர்ப்பதை அவர்களுக்கு நிகரான அந்தஸ்தைப் பெற வைக்கும் என்ற எண்ணம் சமூக அழுத்தங்களின் பிரதிபலிப்பாகும்.
ஆங்கில மோகம்
********
நான் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியற்றி வருகிறேன்.கிராமப்புற பள்ளி.ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரையிலான மேல்நிலைப் பள்ளி அது. சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மாணாக்கர்கள் கல்விப் பயில வருகின்றனர்.
ஆங்கில வழி கல்வியில் அதிக ஆர்வமுடைய பெற்றோர் தம் குழந்தைகளின் கற்றல் திறனை அறியாமலே ஐந்தாம் வகுப்புவரை மாணவனின் விருப்பத்தையும் மீறி ஆங்கிலவழி கல்விக்கூடத்தில் கல்வி கற்க,
கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனிடையே கட்டணம் செலுத்த இயலாத குடும்பச் சூழல். இதனால் அக்குழந்தை பள்ளிகளில் அடையும் மன உளைச்சல் ஒருபக்கம்.
இறுதியாக ஆறாம் வகுப்பிற்காக, தமிழ்வழியில் கற்க எம் பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.கட்டாத்தின் பேரில் ஆரம்பக் கல்வி பயின்று வரும் அந்தக் குழந்தைகளுக்குத் தமிழும் தெரிவதில்லை,
ஆங்கிலமும் தெரிவதில்லை.
அத்தகைய குழந்தைகளைக் கற்பிப்பது கடினம் மட்டுமல்ல அம்மாணவர்களும் தங்களுக்கு சகமாணவர்களைப் போல
எழுத வாசிக்கக்கூட தெரிவதில்லையே என்னும் தாழ்வுணர்ச்சியடைகின்றனர்.
இதற்கு பெரும்பாலும்
பெற்றோர்களே காரணமாகின்றனர்.
ஆனால் இங்கே இன்னொரு முக்கியமான மனவியல் உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும்.
ஒரு குழந்தை எந்த மொழியில் முதலில் உலகத்தை உணரத் தொடங்குகிறதோ, எந்த மொழியில் தன் பயம், பசி, அன்பு, கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறதோ, அந்த மொழியில்தான் அதன் சிந்தனை இயல்பாக வளரத் தொடங்குகிறது.
அந்த அடித்தளத்தை வலுப்படுத்தாமல் திடீரென ஒரு அந்நிய மொழிச்சூழலுக்குள் கற்றல்திறன் குறைந்த குழந்தையைத் தள்ளும்போது, கல்வி என்பது கற்றலாக இல்லாமல் ஒரு தொடர்ச்சியான மனஅழுத்தமாக மாறிவிடுகிறது.
சில பெற்றோர்கள் “என் குழந்தை ஆங்கிலத்தில் பேச வேண்டும்” என்பதையே கல்வியின் வெற்றியாகக் கருதுகின்றனர்.
ஆனால் குழந்தை புரியாமல் மனப்பாடம் செய்கிறதா?
தன்னம்பிக்கையுடன் கற்றுக்கொள்கிறதா?
பள்ளிக்குச் செல்ல மகிழ்ச்சியடைகிறதா?
என்பதைக் கவனிக்க மறந்து விடுகின்றனர்.
ஒப்பீட்டு மனநிலை
********
ஒரு குழந்தையின் கற்றல் வளர்ச்சியில் ஒப்பீடு மிக ஆபத்தான ஒன்று.
“அந்த வீட்டுப் பிள்ளை அங்கே படிக்கிறான்…”,
“இவனும் அதே பள்ளியில் படிக்க வேண்டும்…”
என்ற சமூக அழுத்தங்கள், பல நேரங்களில் குழந்தையின் தனித்திறனை முற்றிலுமாக புறக்கணித்து விடுகின்றன.
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.
சில குழந்தைகள் மெதுவாக கற்கிறார்கள்.
சில குழந்தைகள் மொழியை விட காட்சியால் விரைவாகப் புரிந்துகொள்கிறார்கள்.
சிலருக்கு அதிக கவனம் தேவைப்படுகிறது.
சிலருக்கு அன்பான அணுகுமுறை மட்டுமே போதுமான ஊக்கமாக இருக்கிறது.
குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடாதீர்கள்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான உலகம்.
ஒரே விதை எல்லா மண்ணிலும் ஒரே வேகத்தில் முளைப்பதில்லை தானே?
குறிப்பாக ஆரம்பக் கல்வியில், குழந்தை புரிந்துகொண்டு கற்கிறதா என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மொழி என்பது அறிவைப் பெறுவதற்கான பாலம் மட்டுமே; அந்தப் பாலமே குழந்தைக்கு பயமாக மாறக்கூடாது.
எதுதான் நல்ல பள்ளி?
**********
உண்மையில் நல்ல பள்ளி என்பது, குழந்தை பயமின்றி கேள்வி கேட்கும் இடம்.
தவறு செய்தாலும் அவமானப்படுத்தப்படாத இடம்.
தன் திறனுக்கேற்ற வேகத்தில் வளர அனுமதிக்கப்படும் இடம்.
மதிப்பெண்களை மட்டும் அல்ல, மனதையும் கவனிக்கும் இடம்.
ஏனெனில் கல்வி என்பது போட்டியில் முன்னேறுவதற்கான கருவி மட்டும் அல்ல…
ஒரு மனிதனை முழுமையான மனிதனாக மாற்றும் மெதுவான உளவியல் மாற்றம்
ஆனால் நம் சமூகத்தில் “நல்ல பள்ளி” என்பதற்கான அளவுகோல் பெரும்பாலும் குழந்தையின் மனநலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை.
அதற்கு பதிலாக பள்ளிகளின் கட்டிடங்களின் கவர்ச்சி, ஆங்கில உச்சரிப்பு, கட்டணம், பேருந்து வசதி, தேர்ச்சி சதவீதம் போன்ற வெளிப்புற விஷயங்களே முக்கியமாக பார்க்கப்படுகின்றன.
பெற்றோர்கள் புரிய வேண்டியது
*************
குழந்தைகள் “பெருமைக்காக” வளர்க்கப்பட வேண்டியவர்கள் அல்ல, “புரிந்துகொள்ளப்பட” வேண்டியவர்கள் என்பதுதான் பெற்றோர்கள் முதலில் உணர வேண்டிய ஒன்று.
ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் முன்,“இந்தப் பள்ளி சமுதாயத்தில் எவ்வளவு பிரபலமானது?” என்பதற்குப் பதிலாக,
“என் குழந்தை இங்கே மகிழ்ச்சியாக இருக்குமா?”
“பயமின்றி கற்க முடியுமா?”
“அதன் திறனுக்கு ஏற்ற சூழல் கிடைக்குமா?”
என்ற கேள்விகளைப் பெற்றோர் தங்களுக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும்.
கல்விக்காக குடும்பம் தாங்க முடியாத பொருளாதார அழுத்தத்துக்குள் செல்லும்போது, அதன் தாக்கம் குழந்தைகளின் மனதிலும் விழுகிறது என்பதை மறுக்கக் கூடாது.
பெற்றோரின் கவலை, கடன், எதிர்பார்ப்பு இவை அனைத்தையும் குழந்தைகள் அமைதியாக சுமக்கத் தொடங்குகின்றனர்
அதனால் நல்ல பள்ளியைத் தேடுவதற்கு முன்,
குழந்தையின் மனநிலையைப் புரிந்துகொள்ளும் நல்ல பெற்றோராக மாறுவதுதான் மிக முக்கியம்.ஏனெனில்,
குழந்தைகள் முதலில் பள்ளிகளில் இருந்து அல்ல…
வீட்டின் குரல்களில் இருந்தே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
கவர்ச்சியான விளம்பரங்கள்
****”********
இன்றைய பெற்றோர்களின் பள்ளித் தேர்வுகளில் சமூக ஊடகங்களும் விளம்பரங்களும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் மறுக்க முடியாது.
“100% தேர்ச்சி”,
“NEET / JEE சாதனை”,
“ஸ்மார்ட் கிளாஸ்”,
“ஏசி பேருந்து”,
“ஆங்கிலப் பேச்சுத்திறன்”
போன்ற வார்த்தைகள் தொடர்ந்து சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் காட்டப்படும்போது, அவையே ஒரு நல்ல பள்ளிக்கான அடையாளங்கள் என்று பெற்றோர்களின் மனதில் ஆழமாகப் பதியத் தொடங்குகின்றன.
சில நேரங்களில் பள்ளிகளின் விளம்பரங்கள் கல்வியை விட ஒரு வணிகப் பொருளைப் போலவே காட்சிப்படுத்துகின்றன என்பதை
நம்பியாக வேண்டும்.
பெரிய கட்டிடங்கள், வெளிநாட்டு தோற்றமுள்ள வகுப்பறைகள், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் சில குழந்தைகளின் காணொளிகள் இவை அனைத்தும் பெற்றோர்களிடம் ஒரு உளவியல் அழுத்தத்தை உருவாக்குகின்றன.
“என் குழந்தையும் இப்படி இருக்க வேண்டாமா?”
என்ற ஒப்பீட்டு மனநிலை அங்கேயே தொடங்குகிறது.
சமூக ஊடகங்களில் பிற பெற்றோர் பகிரும் புகைப்படங்கள், பள்ளி விழாக்கள், போட்டி வெற்றிகள் ஆகியவற்றைப் பார்த்து, தங்கள் குழந்தையும் அதே வேகத்தில் ஓட வேண்டும் என்ற அவசரத்திற்குள் பல பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர்.
ஆனால் சமூக ஊடகங்கள் காட்டுவது குழந்தையின் முழு வாழ்க்கையல்ல.
அதன் பின்னால் இருக்கும் மனஅழுத்தம், பயம், கற்றல் சிரமம், தனிமை, பெற்றோரின் பொருளாதார சுமை போன்றவை பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.
ஒரு குழந்தைக்கு தேவையானது பிரமாண்டமான விளம்பரமல்ல…
அதைப் புரிந்துகொள்ளும் ஆசிரியர்,
அழுத்தமில்லாத கற்றல் சூழல்,
தவறினாலும் தாங்கிக்கொள்ளும் மன உறவு.
எனவே பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் போது விளம்பரங்களை மட்டும் நம்பாமல்,
அங்கே படிக்கும் குழந்தைகளின் மனநிலையைப் பாருங்கள்.
அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை கவனியுங்கள்.
ஏனெனில் நல்ல கல்வியின் சத்தம் பெரும்பாலும் அமைதியாகத்தான் இருக்கும்;
அதற்கு அதிக விளம்பரம் தேவையில்லை.


