012. மரபுகளை பாதுகாக்கும் மண்ணின் மைந்தன் சோ. தர்மன்
எழுத்தாளர்கள் பல வகை. ஒவ்வொருவரும் ஒருவகை. தூத்துக்குடி மாவட்டம் கரிசல் மண்ணில் பிறந்த கரிசல் கதைகளைக் கூறும் சோ. தர்மன் மரபுகளை பாதுகாக்கும் வகையைச் சேர்ந்த எழுத்தாளர். உழவர்கள், உழவுத் தொழிலாளர்களின் நண்பர்களான பறவைகள்விலங்குகள்சார்ந்த கதை சொல்லி, ஊர் காக்கும் சுவாமிகள், பண்டாரங்கள் தங்கிச் செல்லும் சத்திரங்கள் போன்ற கதைகளை உலகிற்கு எடுத்து உணர்த்தும் அற்புத எழுத்தாளர். இவர் நாவல்களில் வாய்க்கால்களும், கால்வாய்களும் கதைசொல்லும், ஊரணிகள் நம்மோடு உறவு பேசும். எங்களைப் போன்ற எழுத்தாளர்களை அரவணைத்துச் செல்லும் நல்ல ஆசான். உயரிய விருது பெற்ற அவரை நான் தேடிச் சென்றதில்லை. அவரை நான் தொலைப்பேசியில் தான் பேசினேன். ஒரு காலகட்டத்தில் இருவரும் தூத்துக்குடியில் நண்பர் இசக்கியப்பன் உதவியுடன் மண்சார்ந்த திரைப்படமான கர்ணனை ஒன்றாக அமர்ந்து பார்த்தோம். படம் முடிந்து வெளியே வந்த அவர் எனக்குச் சொன்ன அறிவுரை. நீ செல்லும் வழி நல்ல வழி. வரலாறுகளைச் சம்பவ இடத்துக்குப் போய் தேடுகிறாய். அதைத் தொடர்ந்து செய். பலன் கிட்டும் என்றார். அவரின் பண்பும் அவர் என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்குக் கூறும் அறிவுரையும் என்னை அப்படியே திக்குமுக்காட வைத்து விட்டது. அய்யா உங்கள் எண்ணம் படியே நான் தொடர்ந்து எனது களப்பயணத்தினை செய்து கொண்டே இருக்கிறேன். நன்றி அய்யா – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


