இந்தியாவின் நீர்வள மனிதர் தாமிரபரணியில் ஆய்வு (4&5.01.2026). கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து இந்த கட்டுரையை வெளியிடுகிறேன்.
காரணம் தமிழகத்தில் புதிய அரசு மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் பதவியேற்றுள்ளார்கள். நீர் நிலைகளை காப்பாற்ற நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள். அந்த சமயம் தாமிரபரணி சுத்தப்படுத்த இந்தியாவின் நீர் மனிதர் என்றழைக்கப்படும் ராஜேந்திர சிங் அவர்களின் வரைவு திட்டம் உதவியாக இருக்கும் என்பதனால் இந்த கட்டுரையை நான் எழுதுகிறேன். வணக்கம் மும்பையில் இந்த கட்டுரை வெளிவரும் வேளையில் நிச்சயம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.
விரைவில் நீர்மனிதரின் அறிக்கை தாமிரபரணியை காப்பாற்ற அறிக்கை தாக்கல் செய்வார் என்ற நம்பிக்கையுடன் இந்த கட்டுரையை வெளியிடுகிறேன்.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரியும், ஆற்றங்கரையில் உள்ள மண்டபங்களை பாதுகாக்க கோரியும் கடந்த 2018 ஆம் ஆண்டு நான் (எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தேன்.
இந்த வழக்கினை தொடர்ந்து மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், புகழேந்தி அமர்வு விசாரித்து வந்தது. அவர்கள் கடந்த 11.03.2024 அன்று தீர்ப்பு வழங்கினார்கள். உள்ளாட்சித் துறையினர் தாமிரபரணியில் சாக்கடை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டபங்கள் படித்துறைகளை இந்து அறநிலையத்துறை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறபித்தனர். ஆனால் இந்த உத்தரவினை அரசு நடைமுறைப் படுத்த வில்லை.
இதை தொடர்ந்து கடந்த 10.11.2024 அன்று நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் தாமிரபரணியில் நேரில் வந்து சாக்கடை கலக்கும் இடங்கள் மற்றும் படித்துறைகளை ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்தும் பல உத்தரவு பிரபித்து நடவடிக்கை இல்லை.
எனவே 02.01.2025 அன்று நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் மேலும் ஒரு ஆணையை பிரப்பித்தனர்.
இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை பிரபித்தும் ஆற்றில் கலக்கும் சாக்கடையை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்தும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை இல்லை.
எனவே தாமிரபரணி ஆற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றை ஈடுபடுத்தினோம். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்க இல்லை. எனவே ராஜஸ்தானில் வறண்டு போன ஓடைகளையும் ஆறுகளையும் மீட்டெடுத்து மகசேசே விருது பெற்ற நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்கை இந்த பணிக்கு ஆணையராக நியமிக்கிறோம். அவர் நேரில் சென்று களப்பணி மற்றும் ஆய்வு செய்து திட்டங்கள் செயல்பட தேவையான விலைப்பட்டியலை சமர்பிப்பார் என உத்தரவு பிரப்பித்தனர்.
ராஜேந்திரசிங்கை பொறுத்தவரை நீதிமன்றம் இவரை நியமித்து இருப்பது சிறப்பத்தான்.
ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், பணிகள் திருப்திகரமாக இல்லை என்றும், இது தொடர்பாக எவ்வித உறுதியான திட்டமும் இதுவரை தாக்கல் செய்யப் படவில்லை என்றும் எனது தரப்பில் எனது வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாநகராட்சி ஆணையர், அம்பை நகராட்சி ஆணையர், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையர் மற்றும் அறநிலையத் துறை இணை ஆணையர் உட்பட 12 அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி என்னுடைய தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலையை விரிவாக ஆய்வு செய்து, பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்ய ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்தனர்.
இவரை நியமிக்க முக்கிய காரணங்கள்:
* ராஜஸ்தானில் வறண்ட நீரோடைகளையும், ஆறுகளையும் மீட்டெடுத்த ராஜேந்திர சிங்கின் அனுபவம், தாமிரபரணியைத் தூய்மைப்படுத்த உதவும் என நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
* இப்பணிக்கு திண்டுக்கல்லில் சிறப்பாகக் களப்பணியாற்றிய பாலாஜி ரங்கராமானுஜத்தின் உதவியைப் பெறவும் ராஜேந்திர சிங்கிற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
* இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் முழுமையான ஒத்து ழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ராஜேந்திர சிங் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், தாமிரபரணி ஆற்றைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத் தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் இன்றைய தினம் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார். முதற்கட்டமாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீர் அனைத்தும் ஒரே இடத்தில் சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கழிவுநீரால் பாதிக்கப்படும் பகுதிகள் குளங்கள் வாய்க்கால்களை நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் திருநெல்வேலி நகரத்திற்குள் தாமிரபரணி பாய்ந்து ஓடும் பகுதிகளில் சிந்து பூந்துறை பகுதியில் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்த அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நெல்லை நகரப் பகுதிகளில் சிந்து பூந்துறை, ஸ்ரீபுரம், பகுதிகளில் ஆய்வு மேற்க உள்ளார். தொடர்ந்து இரண்டு தினங்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியில் சாக்கடை கழிவுநீர் கலக்கும் இடங்களை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளார்.
அதை தொடர்ந்து தாமிரபரணியை பாதுகாப்பதற்கு குறித்து உரிய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அவருடன் உதவியாளர் பாலாஜி, மனுதாரரான நான் (முத்தாலங்குறிச்சி காமராசு), மொழிபெயர்ப்பாளர்கள் வினோத், இளங்கோ, ராமையன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் டேவிட், சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார், சங்கரநாரயணன்,நம்தாமிரபரணி நல்லபெருமாள், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு தாமிரபரணி பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தோம்.
நிச்சயம் இவர் நல்லதொரு திட்டங்களை நீதிமன்றத்துக்கு தருவார். புதிதாக பொறுப்பேற்ற அரசு இதற்கான முழு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் தாமிரபரணி காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை பிறந்தது.
எதற்காக எனக்கு இந்த நம்பிக்கை பிறந்தது தெரியுமா?
(நதி வற்றாமல் ஓடும்)


