வல்லநாட்டில் நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் வன அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவைகுண்டம் வனச்சரகத்திற்கு உள்பட்ட வல்லநாடு, அனந்த நம்பிக்குறிச்சி, நாணல்காடு, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், தோழாம்பண்ணை, பத்மநாபமங்கலம் உள்பட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மலை அடிவாரத்தில் கால்நடைக்கு தேவையான மேச்சல் நிலங்கள் உள்ளன. இங்கு செல்லும் கால்நடைகளை அபகரித்துக்கொண்டு அபராதம் கட்டினால்தான் விடுவேன் என வனத்துறையினர் பணம் வாங்குவதாகவும், அதற்கு உரிய ரசீதுகள் கொடுப்பதில்லை எனவும் இந்த பகுதியில் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையில் மணக்கரை அழகர் சாஸ்தா கோயிலுக்கு செல்லும் பாதையை இரவோடு இரவாக வனத்துறையினர் இரும்பு வலை கொண்டு வேலி அமைத்து விட்டனர். இதை கண்டித்தும் வல்லநாட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிறுவனர் மகராஜன் தலைமை வகித்தார். சுந்தர், முருகன், அங்கப்பன், மாரி, ஆறுமுகம், அய்யப்பன், கணேசன், நல்லகண்ணு, முருகன், பூல்பாண்டி மற்றும் வல்லநாடு, அனந்த நம்பிக்குறிச்சி, நாணல்காடு, மணக்கரை, ஆழ்வார்கற்குளம், தோழாம்பண்ணை, பத்மநாபமங்கலம் உள்பட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


