விமானத்தில் அறிமுகம் செய்த முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நீர்மம் நாவல் நாவல் விரைவில் வெளிவருகிறது – முன்பதிவு செய்யுங்கள். 8760970002, நாற்கரம் பதிப்பகம் 9551065500
தாமிரபரணி குறித்து எத்தனையோ நூல்கள் எழுதி விட்டோம். ஆனாலும் நிறைவு இல்லை. காரணம் தாமிரபரணியை பற்றிய ஒரு நாவல் இல்லை என அய்யா சோ. தர்மர் அவர்கள் அடிக்கடி குறைப்பட்டுக்கொண்டே இருப்பார். அவரின் உந்துதலால் எனக்கு எப்படியாவது தாமிரபரணி பற்றி நாவல் எழுதவேண்டும் என ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றி விட்டேன். அதற்கு நீர்மம் என்று பெயர் வைத்தேன். சாக்கடையும் நீர்மம் தான். தெளிந்த நீரும் நீர்மம் தான். ஆனால் தெளிந்த நீராக தாமிரபரணி இருந்தால் தானே நன்மை. இந்த மைய கருத்தை கருத்தில் வைத்துக்கொண்டு உருவான நாவல் இது.
நாவலைப் பற்றி பதிப்பகத்தார் கருத்து
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்தவர் முத்தாலங்குறிச்சி காமராசு. தான் வாழும் காலத்திலேயே தாமிரபரணி அழிக்கப் படுவதையும் கழிவுநீர்க் கால்வாயாக மாற்றப்படுவதையும் கண்டு வெகுண்டு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இவர் தொடுத்த வழக்கின் காரணமாக நீதியரசர்கள் ஜி. ஆர்.சாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கடந்த 2024 நவம்பர் 10 ந்தேதி தாமிரபரணிக்கே வந்து ஆய்வு செய்தனர். இவர் எழுதியுள்ள 85க்கும் மேற்பட்ட நூல்களில் ஏதேனும் ஒருவகையில் தாமிரபரணியின் சிறப்பைச் சொல்லியிருப்பார். தாமிரபரணியின் வரலாற்றைச் சொல்லும் இலக்கியப் படைப்பு இதுவரை எழுதப்படவில்லை என்ற எழுத்தாளர் சோ.தர்மனின் ஆதங்கத்தைப் போக்கும் வகையிலும் அயோத்தி திரைப்பட இயக்குநர் மந்திரமூர்த்தி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும்பொருட்டும் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனைவு கலந்து கரண்டப்படும் தாமிரபரணி வரலாற்றைச் சொல்லும் முதல் நாவலாக வருகிறது ‘நீர்மம்’.
நாவலைப் பற்றி
1992 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாவலின் கதை ஆரம்பிக்கிறது. தெளிந்த தாமிரபரணி மலையை விட்டு கீழே இறங்கும் இடத்தில்தான் கதை துவங்குகிறது. காட்டை அழிக்க கூடாது என சொரிமுத்து அய்யனாரே ஊருக்குள் இறங்கி மக்களிடம் ஆணை பிறப்பிக்கிறார். ஆனால் மக்கள் கேட்க வில்லை. ஊர் மக்களை ஏமாற்றி மணல் அள்ளும் கும்பல் ஒரு பக்கம் நதியை சுரண்டுகிறது. தட்டி கேட்கும் சமூக சேவகர்கள் ஒவ்வொருவராக பாதிக்கப்படுகிறார். சிலர் உயிரை விடுகிறார்கள். பலர் தீடீரென பணக்காரர் ஆகுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக தாமிரபரணி அழிகிறது. யாராலும் தடுக்க முடியவில்லை. சமூக சேவகர்கள் இருவர் தாமிரபரணியை காக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் பல போராட்டம். தன் கண் முன்னே அழியும் நதியை காப்பாற்ற நீதிமன்றத்தில் ஏறி, இறங்குகிறார்கள். நதியை காப்பாற்ற பல போராட்டங்களை சந்திக்கிறார்கள். ஆனால் உடன் இருந்தவர்களே விலை பேசப்படுகிறார்கள். அதையும் மீறி போராடுகிறார்கள். அவர்களுக்கு பலர் உதவியாக இருக்கிறார்கள். ஆனால் வெற்றியடைய இயலவில்லை. இறுதியில் அவர்கள் தங்களது உயிரை பணயமாக வைத்து நதியை காப்பாற்ற ஒரு முடிவு எடுக்கிறார்கள். அந்த முடி வின் படி நதியை காப்பாற்றினார்களா?. இதற்கு நீர்மம் நாவலில் பதில் உள்ளது.
இந்த நாவலை நாற்கரம் பதிப்பகம் வெளியிட சம்மதித்துள்ளது. அதற்கான வேலை 99 சதவீதம் முடித்து விட்டார்கள். இதன் அட்டையை மிக சிறப்பாக வடிவமைத்து தந்தார் பதிப்பாளர் திரு. நல்லு லிங்கம் அவர்கள். நாவலை படித்து நற்சான்று கொடுத்தார் எழுத்தாளர் திரு. கோமதி சங்கர் அய்யா.
முதல் கட்டமாக கடந்த 8.11.2025 அன்று தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறக்கும் போது வானத்தில் வைத்து அட்டையை அறிமுகம் செய்தோம். தூத்துக்குடி மாவட்ட பண்டாரம்பட்டி டி.என்.டி.டி.ஏ துவக்கப்பள்ளி மாணவர்கள் முன்னிலையில் தலைமையாசிரியர் நல்லாசிரியர் நெல்சன் பொன்ராஜ் வெளியிட்டார். விமானத்தினை விட்டு இறங்கியவுடன் மாணவர்கள் அனைவரும் கூட்டாக சென்னை விமான தளத்தில் நாவலின் அட்டையை அறிமுகம் செய்தனர். சுரண்டப்படும் தாமிரபரணியின் வரலாறு சொல்லும் இந்த நாவல் அட்டை மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் நூல் வெளிவரஉள்ளது. இந்த நூலுக்கு முன்பதிவு வேண்டுவோர், 8760970002, நாற்கரம் பதிப்பகம் 9551065500
– அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


