கயத்தாறு அருகே பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சின்னப்பன் தலைமையில் போலீசார், நேற்று கயத்தாறு-செட்டி குறிச்சி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை, போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனராம்.
அப்போது அவர்கள், இருசக்கர வாகனத்தை போலீசார் மீது மோத முயன்றனராம். இந்நிலையில், அங்கு ஒரு லாரி வந்ததும் தப்பிச் செல்ல முடியாமல் இருசக்கர வாகனத்தை நிறுத்தினராம். பின்னர், அவர்கள் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து கயத்தாறு அருகே பெரியசாமிபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மருத பாண்டியன் மகன் அஜித் குமார் (19), தெற்கு தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் செல்வகுமார் (24), வடக்கு தெருவைச் சேர்ந்த கணபதி மகன் டேனியல் (23) ஆகிய 3 பேரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


