பட்டினமருதூரில் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மங்களான கல்லாக்கப்பட்ட மீன் (Petrified Fish Fossil) புதை படிமம், சிப்பிகளின் புதை படிமங்கள்(Fossilised oyster and shell), படிகம் நிலையடைந்த இயற்கை பிசின்கள்(Fossilised Resin or Amber) போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது “தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தொல்லியல் களம் அமைந்துள்ள நமது தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பட்டினமருதூர் கிராமத்தின் தென்கடைய அமைந்துள்ள மயான பகுதியில் காணப்படும் கல்வெட்டினை காண ஊர்மக்கள் சகிதம் 09.11.2025 அன்று புதர் போன்ற அடர்ந்த முட்செடிகள் நிறைந்த பகுதியின் வழியே சென்ற போது பரவலாக முட்புதர்கள் அகற்றப்பட்ட பகுதியில் காணப்படும் தொன்மையான மட்பாண்ட சிதைவுகள், தோண்டப்பட்ட பள்ளங்களில் பெரிய அளவிலான பல ஆயிரம் தொன்மங்கள் நிலையடைந்த கட்டிடங்களின் சிதைவுகளையும், கடல்சார் புதைபடிமங்களையும் கண்டெடுத்து அவற்றில் சில மாதிரிகளை சேகரித்து வந்தோம்.
மட்பாண்டங்களில் காணப்படும் ஒருவிதமான அழகிய வேலைப்பாடு போன்ற சில சிதைவுகள், நாங்கள் கரைச்சல்லித்தீவு பகுதியில் கண்டெடுத்த மட்பாண்ட வேலைப்பாடுகளை போன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடல்சார் புதை படிமங்களில் சில முத்து சிப்பிகளின் படிமங்கள் ஆகும். இவற்றின் அரக்கு கலந்த மஞ்சள் நிறம், கடின தன்மை மற்றும் எடையினை பார்க்கும் பொழுது இவை சில ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மண்ணில் புதையுண்டதை போன்று உணரமுடிகிறது. குறிப்பாக அவற்றின் இரண்டு முழுமையான மாதிரிகளில் ஒன்று Pinctada margaritifera மற்றொன்று Spondyllus Americanus என்ற சிப்பி ஓடுகளின் படிமம் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் நீண்ட நாட்களாக புதையுண்டு உருமாறிய அடர் அரக்கு சிகப்பு நிறம் மற்றும் சிறந்த ஒளி ஊடுறுவும் தன்மை கொண்ட இயற்கை பிசின் போன்ற தொன்மங்களை கண்டறிந்தோம். இவை பிசினா(Resin) அல்லது படிக கல்லா (Crystal) என்பதை உறுதி செய்யும் விதமா தீக்குச்சி மூலம் எரியூட்டும் பொழுது இவை மெதுவாக தீப்பற்றி எரிந்ததையும், தீயில் இருந்து விலக்கிய பின் உடனடியாக தொடர்ந்து எரியாமல் அணைந்து விடும் தன்மையையும், அது சமயம் வெளிவரும் நெடியானது மாமிசமோ மல்லது உரோமமோ எரிவதை போன்று உணரமுடிவதையும், ஓளியின் ஊடுறுவும் தன்மையினை பார்க்கும் போதும் இந்த இரண்டு வகையான மாதிரிகளும் இயற்கை பிசின் என்றே அறிவியியல் கூற்றின் படி முதற்கட்டமாக உணரமுடிகிறது. எனவே இவை இயற்கையான மரப்பிசினின் படிமமா! அல்லது கடல்சார் அம்பர் எனப்படும் பொருளின் படிமமா! என்பது வேதியியல் மூல கூறுகளின் ஒப்பீடு ஆய்விற்கு பின்னர் தெரியவரும்.
நாங்கள் கையடக்க பண்டைய மணல் கல் கருவி என எடுத்து வந்த சுமார் 100-110மி.மீ நீளம் கொண்ட தொன்மமானது இருபுறமும் கண்போன்ற புள்ளிகளும்(நேர்க்கோட்டு துளைகள் அல்ல), அடிபாகத்தில் காணப்படும் இரண்டு வளைவுகளும், ஒருபகுதி ஏறத்தாழ தட்டையாகபும் மற்றபகுதி வடிவமாகவும் உள்ளதையும், புகைப்பட ஒப்பீடு ஒப்புமைகளையும் வைத்து பார்க்கும்போது இது கல்லாக உருமாறிய புதையுண்ட மீனின் படிமம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை நாம் அறிவியல் வேதியியல் மூலக்கூறுகள் ஒப்பீடு ஆய்வின் அடிப்படையில் நிரூபணம் செய்யும் பட்சத்தில் இதன் காலகட்டம் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கருதப்படலாம் என்பது மட்டுமல்லாமல் இந்த பகுதியின் தொடர் வாழ்விட நகர நாகரீகம் மற்றும் தமிழர்களின் மேம்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த அறிவுகள் ஆகியவற்றை தொல்லியல் சான்றுகள் வாயிலாக ஒருங்கிணைத்து இந்த உலகிற்கு நிரூபணம் செய்திட ஆதாரமாக இது அமைவது திண்ணம்.
எனவே இத்தகை சுமார் 5அடி இரால் பண்ணை பள்ளங்கள் தோண்டி அழிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையாக தொல்லியல் அகலாய்வு செய்து ஆவணப்படுத்திட கிடைத்திடும் விடயங்கள் வாயிலாக மீளும் நம் பாண்டியர்களின் இருண்ட காலம் குறித்த வரலாறுகள். இந்த பகுதியில் உள்ள விநாயகர் ஆலயம் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி ஆரம்ப கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது பதிவு செய்யப்பட்ட நிகழ்வாகும்.
இவை தொடர்பான முறையான ஆவணப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் மாவட்ட நிர்வாகம் வாயிலாக தமிழக தொல்லியல் துறையின் ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் வருகின்ற சனவரி மாதம் அறிவிக்கப்பட்ட தொல்லியல் தளத்தில் ஆய்வு பணிகள் ஆரம்பம் ஆகும் சமயம் இந்த பகுதியிலும், தீவுகள் பகுதியிலும் தொல்லியல் துறையின் கவனம் செலுத்தப்படும் என்றார்.


