தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியில் ஆண்டுவிழா, தூத்துக்குடி மேலூர் அபிராமி அரங்கில் வைத்து மிக பிரமாண்டமாக நடந்தது. ஆடியோ, வீடியோ என நவீன முறையில் டிஜிட்டல் தரத்துடன் நடத்தப்பட்ட அந்த விழாவில் சினிமா பாடல்களை பின்னணி இசை இசைத்து மாணவ மாணவிகளை நடிக்க வைத்து மக்களை கவர்ந்திருக்கலாம். ஆனால் இவர்கள் மிக வித்தியாசமாக மண்ணின் புகழை பாடும் நிகழ்ச்சிகளை பிரமாதமாக நடத்தினார்கள். இதற்கு இசையமைப்பாளர் இசக்கியப்பனின் இசை மற்றும் பாடல்கள் உயிர் சேர்த்தது. தாமிரபரணி கரையினிலே, ஆதிச்சநல்லூர், கொற்கை, தூத்துக்குடி துறைமுகம், தூத்துக்குடி மாவட்ட கலைகள், சுதந்திர போராட்ட வீரர்கள் , வரலாறுகள், கோயில் பண்டிகைகள், நாடக கலைஞர்கள் என பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை மிகச்சிறப்பாக நடத்தி காட்டினார்கள்.
தாமிரபரணி தற்போதும் வற்றாத நதியாக இருக்க காரணமான ஆங்கிலேய மாவட்ட ஆட்சி தலைவர் பக்கிள் துரை அவர்கள் புகைப்படத்தினை தேடி தேடி பார்த்து கிடைக்காமல் தவித்து இருந்தேன் நான். ஆனால் பக்கிள் துரையாக மாணவர் ஒருவர் மேடையில் தோன்றி நடித்திருந்தார். சந்தோஷமாக இருந்தது. இனி இவரை பக்கிள் துரை படத்துக்கு பதிலாக பயன்படுத்தி கொள்ளலாம். குருஸ் பர்னாந்து அவர்கள் தூத்துக்குடிக்கு தாமிரபரணி தண்ணீர் கொண்டு வந்த வரலாறு, வெளிநாட்டவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஐவகை நிலங்களை கூட்டிக்கொண்டு காட்டியது. என பல நிகழ்வுகளை நாடகமாக மாணவர்கள் நடித்துக் காட்டினார்கள்.
நானே சில வேளையில் தூத்துக்குடியில் எங்கே குறிஞ்சி நிலம் இருக்கிறது என்று நினைத்திருந்தேன். அவர்கள் கழுகுமலையை காட்டி இதுதான் தூத்துக்குடியின் மலையும் மலை சார்ந்த இடமுமான தூத்துக்குடி என காட்டி, என்னை திகைக்க செய்து விட்டார்கள்.
ஒரே மேடையில் பனிமயமாதா தங்கச்சப்பரத்தினையும், இஸ்லாமியரின் சந்தனகூடு ஊர்வலத்தினையும், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவையும் காட்டி எங்களை மகிழ்வித்தனர். இதில் பின்னணி குரல் கொடுத்த மாணவர் திருவிழா காலத்துக்கே எங்களை கூட்டிச்சென்றுவிட்டார். ‘உங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்’ என அவர் கூறியபோது, உண்மையிலேயே திருவிழாவில் தான் இருக்கிறோம் என நினைக்க வைத்தது.
இறுதியில் விருது வழங்கும் விழா நடந்தது.
இதற்கெல்லாம் உதவியாக இருந்தது எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவரின் நூல்கள் தான் என கூறினார் நண்பர் அருள் சேசுராஜ். முத்தாலங்குறிச்சி காமராசுவின் தனி மனித உழைப்பு. அவர் ஆதிச்சல்லூர் பெருமை உலகிற்கு தெரிய தனி மனிதனாக போராடி வருகிறார் என்று கூறி மேடையில் என்னை அறிமுகபடுத்தி விருது வழங்கி கௌரவித்தார்கள். மிக கௌரமாக இருந்தது.
ஏன் என்றால் என்னுடன் மூத்தகலைஞர்கள் கலைமாமணி கைலாச மூர்த்தி அய்யா (ஓயிலாட்டகலை), கலைமாமணி பிச்சைகனி அய்யா(தேவராட்டம்), கலைமாணி சங்கர பாண்டியன் அய்யா(கரகாட்ட கலை), பாரதி புகழ்பாடும் இளசை மணியன் அய்யா, இசை அமைப்பாளர் இசக்கியப்பன், விஜய் டிவி சிங்கர் இர்வின் போன்ற மாமனிதர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.
இது போன்ற அருமையான நிகழ்ச்சியை உருவாக்கிய அழகர் பள்ளி சேர்மன் ஜெயராமன் , தாளாளர் பிரியா கேசவன், முதல்வர் தீபாஸ்ரீசர்மா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் தொகுத்து வழங்கிய தமிழாசிரியர் மங்கள காயத்திரி மற்றும் நண்பர் அருள் சேசுராஜ் ஆகியோருக்கு நன்றி நன்றி.
ஒரு மாதத்துக்கு முன்பு செய்துங்கநல்லூரில் உள்ள எனது நூலகத்திற்கு வந்த பள்ளி முதல்வர் தீபாஸ்ரீசர்மா, தமிழாசிரியர் மங்களா காயத்திரி, நண்பர் அருள் சேசுராஜ் ஆகியோர் செய்தி திரட்டிய போதும், ஆசிரியர் காந்திமதி போனில் தொடர்ப்பு கொண்டு பக்கிள் துரை பற்றிசெய்தி திரட்டிய போதும் இதை வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஒரு விழாவை நடத்துவார்கள் என கனவில் கூட நான் நினைக்கவில்லை. வாழ்த்துக்கள்.. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இதற்கு ஒத்துழைத்த ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும், மாணவச்செல்வங்களுக்கும், ஒலிஒளி அமைப்பு, டிஜிட்டல் திரையிடு, லைட்செட்டிங் உள்பட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி . நன்றி. நிகழ்ச்சியை கண்டு கழித்த அத்தனை பார்வையாளர்கள் (சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர்) , கடைசி வரை அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தார்கள் அவர்களுக்கும் நன்றி.


