தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதத்தை முன்னிட்டுச் சிறப்புச் சுமங்கலி பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியர்களின் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த பிரம்மாண்ட சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணவனின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி வேண்டியும், திருமண வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டியும் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட 2007 சுமங்கலிப் பெண்களுக்குத் தேங்காய், பழம், புடவை, மஞ்சள் கயிறு மற்றும் குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. பெண்கள் அனைவரும் வெள்ளிச் செம்பில் தேங்காய் வைத்துச் சிறப்பு வழிபாடு செய்த பிறகு, தங்களது திருமாங்கல்யத்தைக் கழுத்தில் அணிந்து கொண்டனர். தொடர்ந்து அம்பாளுக்குச் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
இவ்விழாவிற்கான அனைத்துப் பணிகளையும் சேவா பாரதி பண்பாட்டு வகுப்பு ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காளிராஜ், செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வெண்ணிமாலை ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.


