இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வீரர் இடம் பிடித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள புத்தன்தருவை கீழூரைச் சேர்ந்த கோயில்பிள்ளை மகன் தோமா(30). மாற்றுத்திறனாளி. போலியோவால் பாதிக்கப்பட்ட இவர் பட்டப்படிப்பு முடித்ததுடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று சாதித்து வருகிறார். தற்போது, இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ள அவர், வங்கதேச தலைநகர் டாக்காவில் மே மாதம் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறார். இதையொட்டி அவருக்கு மாற்றுத்திறனாளி மறுவாழ்வு சங்கத்தினரும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தோமா கூறியது: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் படிக்கும்போது தமிழ்நாடு அணிக்காக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்றேன். தற்போது இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை முதல் தில்லியில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்கிறேன். போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றியுடன் திரும்புவேன் என்றார். இதனிடையே, அவர், சுதந்திர தினம், குடியரசு தினத்தில் மாற்றத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மோட்டார் பொருத்திய வாகனம் வழங்கக் கோரி, கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லையாம். எனவே, தோமாவுக்கு அத்தகைய வாகனம் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


