பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், மீண்டும் பழைய கட்டணத்தை பெறக்கோரியும் தமிழகம் முழுவதும் இன்று திமுக மற்றும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் மறியல் செய்து சிறைநிரப்பும் போராட்டம் நடந்து வருகிறது.
அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியில் திருநெல்வேலி&திருச்செந்தூர் சாலையில் திமுக முன்னாள் எம்.பி.ஜெயதுரை தலைமையிலும், ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி முன்னிலையிலும் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என அனைத்து கட்சி சார்பில் சாலை மறியல் நடந்தது. போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து போக்குவரத்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், திமுக ஒன்றியச் செயலாளர்கள், பார்த்திபன், வைகுண்டப்பாண்டியன், நல்லமுத்து உள்பட திமுக மற்றும் கூட்டனி கட்சியினர் கலந்து கொண்டனர்.
உடனே ஆழ்வார்திருநகரி போலிசார் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 260 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.