திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இந்த காவடி எடுத்தும், நீண்ட வேல்களால் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றினர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் பல்வேறு விழாக்களில் முக்கியமானது தைப்பூச திருவிழா. இந்த ஆண்டு தைப்பூச திருவிழா தினமான சந்திர கிரகணத்தால் பூஜை காலங்கள் மாற்றப்பட்டது. இதையட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து அதிகாலை 7 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், அதனை தொடர்ந்து உச்சிகால தீபாராதனை நடந்தது. மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தை வந்து சேருகிறார். அங்கு இல்லத்தார் சமுதாயம் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு மணிக்கு தைப்பூச மண்டபத்திலிருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலா வந்து கோயிலை சேருகிறார்.
மாலையில் 5.16 மணிக்கு மேல் இரவு 8.50 மணிக்கு சந்திரகிரகணம் ஏற்படுவதால் மாலை 4.15 மணிக்கு கோயில் நடைசாத்தப்படுகிறது. இரவு 9.30 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்டு இரக்கால அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை மற்ற கால பூஜைகள் நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பாத யாத்திரை பக்தர்கள் பச்சை நிற ஆடையணிந்து பல்வேறு குழுக்களாக திருச்செந்தூர் வந்தனர்.
இந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக தனித்தனியே வரிசை முறை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த பக்தர்கள் காவடி எடுத்தும், நீண்ட வேல்களால் அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் பக்தர்கள் பஜனை பாட்ல்களை பாடி கோயில் வளாகத்தில் வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் கோயில் வளாகம் திணறியது. திருச்செந்தூர் டி.எஸ்.பி. தீபு தலைமையில் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி உள்பட நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.