சாத்தான்குளத்தில் ஈவிடீசிங் செய்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கருவேலம்பாட்டைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் கண்ணன். இவர் பெங்களுரில் மிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊருக்கு வந்த கண்ணன் சாத்தான்குளத்தில் தனியார் பள்ளியில் பிளஸ்2 படிக்கும் புதுக்குளம் மாணவிக்கு பேப்பரில் செல்போன் நம்பர் எழுதி கொடுத்தாராம். தொடர்ந்து இதுபோல் செய்ததால் மாணவியின் பெற்றோர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரை விசாரித்த அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தார்.
சாத்தான்குளம் பகுதிகளில் இதுபோல கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் கூட்டமாக இருக்கும் பகுதிகளில் தங்களது செல்போன் நம்பரை பேப்பரில் எழுதி வீசி செல்வதாகவும், இதனால் ஆங்காங்கே சிறு சிறு அடிதடி சம்பவங்கள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பன்னம்பாறையில் இதுபோல செல்போன் நம்பரை எழுதி கொடுத்த தனியார் பாலிடெக்னிக் பஸ்சில் வந்த மாணவர்களுக்கு தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற ஈவிடீசிங்கை கட்டுபடுத்த போலீசார் பள்ளி கல்லூரி செல்லும் நேரங்களில் பைக்கில் சுற்றி வரும் ரோமியோக்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.